Published:Updated:

கூடலூர்: பின்னங்காலில் புல்லட் மார்க்... 2 மாத வேதனை?! - யானை இறப்பில் தொடரும் மர்மம்

 இறந்துகிடந்த யானை
இறந்துகிடந்த யானை

`ரெண்டு மாசத்துக்கு முன்னாடி யானையின் பின்னங்கால்ல காயம் ஏற்பட்டிருக்கு. அதைப் பார்க்கும்போது புல்லட் மார்க் மாதிரி இருக்கு. பக்கத்துல இருக்குற கேரளா பார்டருக்கும் நம்ம ஊருக்கும் அடிக்கடி போயிட்டு வரும்.’

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள பாடந்துறை கரளிக்கண்டி பகுதியிலுள்ள ஒரு சிறிய நீரோடையின் அருகில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்துகிடந்ததை நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் பார்த்திருக்கிறார்கள்.

 இறந்துகிடந்த யானை
இறந்துகிடந்த யானை

இரவு நேரம் மழை என்பதாலும், அந்தப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் என்பதாலும் மறுநாள் (நேற்று ) காலை உடற்கூறாய்வு செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

இறந்த யானையின் உடலை கூறாய்வு செய்வதற்கு வன‌ கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் உள்ளூர் கால்நடை மருத்துவக் குழுவினர் சென்றிருக்கிறார்கள்.

 இறந்துகிடந்த யானை
இறந்துகிடந்த யானை

இறந்து கிடந்த யானையின் வலது பின்னங்காலில் ரப்பர் மற்றும் உலோகத்தால் ஆன பொருள் ஒன்று துளைத்து காயம் ஏற்படுத்தியிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்ன்ரே அந்தக் காயம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். அந்தக் காயத்தில் சீழ் ஏற்பட்டு அவதிப்பட்டுவந்த யானை தற்போது உயிரிழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்‌. மேற்படி ஆய்வுக்காக மாதிரிகளையும் சேகரித்திருக்கின்றனர்.

யானையின் இறப்பு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், ``யானைக்கு சுமார் 40 வயசு இருக்கும் சார். நல்ல பெரிய தந்தம் இருந்துச்சு. திடகாத்திரமா இருந்திருக்கும். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பின்னங்கால்ல காயம் ஏற்பட்டிருக்கு. அதைப் பார்க்கும்போது புல்லட் மார்க் மாதிரி இருக்கு. பக்கத்துல இருக்குற கேரளா பார்டருக்கும் நம்ம ஊருக்கும் அடிக்கடி போயிட்டு வரும். விவசாய நிலத்தைச் சேதப்படுத்திச்சுன்னு துப்பாக்கியில சுட்டுருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு’’ என்றார்.

 இறந்துகிடந்த யானை
இறந்துகிடந்த யானை

கூடலூர் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``ரப்பர் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட பொருள் ஒன்று துளைத்திருக்கிறது. அந்த நச்சுத்தன்மை காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு