Published:Updated:

சரித்திரத்தில் இடம்... கம்பீரத் தோற்றம்... கேரள மக்களை கண்ணீரில் மூழ்கடித்த `கஜரத்னா பத்மநாபன்'

கஜரத்னா பத்மநாபன் யானை
கஜரத்னா பத்மநாபன் யானை

1954 ஜனவரி 18 அன்று குருவாயூர் கோயிலுக்கு வழங்கப்பட்ட பத்மநாபன் 1962-ம் ஆண்டு முதல் குருவாயூர் கோயில் சுவாமியைத் தன் முதுகில் ஊர்வலமாக எடுத்துச் செல்லத் தொடங்கியது.

கஜரத்னா பட்டம் பெற்ற குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில் மரணம் அடைந்திருக்கிறது. கொம்பன் யானை பத்பநாபன் குறித்த பெருமைகளைச் சொல்லி கண்ணீர் வடிக்கிறார்கள் கேரள மக்கள். நிலம்பூர் காட்டில் பிறந்த இந்த யானையை ஆலத்தூரில் உள்ள ஒருவர் வளர்த்து வந்தார். அவரிடம் இருந்து ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த இ.பி.சகோதரர்கள் வாங்கி குருவாயூர் கோயிலுக்கு வழங்கினார்கள்.

14 வயதில் குருவாயூர் கோயிலுக்கு வழங்கப்பட்ட பத்மநாபனின் கம்பீரத்தைக் கண்ட தேவசம்போர்டு கஜரத்தினா என்ற பட்டத்தை 2004-ல் வழங்கியது. மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளது பத்பநாபன் யானை.

பத்மநாபன் யானை
பத்மநாபன் யானை

1954 ஜனவரி 18 அன்று குருவாயூர் கோயிலுக்கு வழங்கப்பட்ட பத்மநாபன் 1962-ம் ஆண்டு முதல் குருவாயூர் கோயில் சுவாமியைத் தன் முதுகில் ஊர்வலமாக எடுத்துச் செல்லத் தொடங்கியது. நாட்டில் வளர்க்கப்படும் யானைகளிலே மிகப்பெரிய யானை என்ற பெயரைப்பெற்றது.

குருவாயூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பத்மநாதபன் யானையின் புகைப்படைத்தை விரும்பி வாங்குவார்கள். மேலும், பத்மநாபனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதையும் மக்கள் விரும்பினர்.

கட்டுப்படுத்தும் பாகன் அருகில் இல்லாமல் இருந்தாலும் அமைதியாக இருக்கும் பத்மநாபன் வேறு எந்தக் கோயில்களுக்கும் அவ்வளவாக வாடகைக்கு அனுப்புவதில்லை. 2010-ல் பாலக்காட்டில் நடந்த விழாவுக்காக பத்பநாபன் அழைத்துச் செல்லப்பட்டது. அதற்கு வாடகையாக 2,25,000 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். அதன்மூலம் அதிக மதிப்புமிக்க யானை என்ற பெயரையும் தட்டிச் சென்றது பத்மநாபன்.

பத்மநாபன் யானையுடன் சுரேஷ்கோபி
பத்மநாபன் யானையுடன் சுரேஷ்கோபி

குருவாயூரப்பனை கம்பீரமாகச் சுமந்துசெல்லும் பத்பநாபன் யானை ஓட்டப்பந்தயத்திலும் கெட்டிக்காரன். 13.2.1976-ல் குருவாயூர் கோயில் திருவிழாவில் சிறப்புவாய்ந்த யானைகளுக்கான ஓட்டப் பந்தயம் நடந்தது. அதில் 26 யானைகள் கலந்துகொண்டன.

ஓட்டப்பந்தயத்தில் கில்லிகளான லட்சுமி குட்டி, ராமச்சந்திரன், குட்டி சங்கரன், வேணுகோபாலன், விஜயகிருஷ்ணா, கோபாலன், உண்ணிகிருஷ்ணன், தாரை, நந்தினி, ரவீந்திரன், ராமன்குட்டி, வலிய நாராயணன், இந்திரா உள்ளிட்ட யானைகளும் கலந்துகொண்டன.

பத்மநாபன் யானையும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள தயாராகியது. இன்று போன்று பெரிய அளவில் விதிமுறைகள் எதுவும் அன்று இல்லை. அந்த `யானை ஓட்டத்தில்' இளைஞர்கள் பலரும் கூடவே ஓடுவார்கள். யானை கோயிலுக்கு வெளியே மட்டுமல்லாது உள் பகுதியிலும் ஓடும். மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி நின்று வேடிக்கைபார்ப்பார்கள். முதலில் மணி அடிக்கப்பட்டதும் ஓட்டப்பந்தையத்துக்காக யானைகள் தயாராக நின்றன.

அடுத்ததாக சங்கு முழங்கியதும் யானைகள் வாலை முறுக்கிக்கொண்டு, புழுதி பறக்க வேகமாக ஓடின. யாரும் எதிர்பாராத விதமாக ஓடிச்சென்று இலக்கை அடைந்த பத்மநாபன் முதல் பரிசைத் தட்டிச் சென்று தான் ஒரு `கொம்பன் யானை' என்பதை மீண்டும் ஒருமுறை அந்தத் தருணத்தில் நிரூபித்தது.

சரிந்த பத்மநாபன் யானை
சரிந்த பத்மநாபன் யானை

இதற்கிடையே, வயது முதிர்வு காரணமாகத் தளர்ந்துபோன பத்மநாபன் கடந்த ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தது. நேரில் சென்று அஞ்சலி செலுத்தியவர்கள் கண்கள் குளமாயின. அதிலும் யானைப் பாகன் விஜயன் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். `இனி என்று பத்மநாபன் கம்பீரமாக எழுந்து நிற்பதைக் காண்பேன்' எனக் கண் கலங்கினார். சமூக வலைதளங்களிலும் பத்மநாபன் யானையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குருவாயூர் கோயிலில் பத்மநாபன் யானைக்கு அடுத்தபடியாகக் கம்பீரமானது வலிய கோபாலன் யானை. பத்மநாபன் யானையின் பொறுப்புகள் இனி வலியகோபாலன் வசம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. குருவாயூர் கோயிலில் வலியகோபாலன், குட்டி சங்கரன், வேணுகோபாலன், ராதாகிருஷ்ணன், ஜூனியர் லக்‌ஷ்மணன், கிருஷ்ண நாராயணன், லட்சுமி நாராயணன், மோழ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 47 யானைகள் உள்ளன. பத்மநாபன் யானையின் இழப்பு பக்தர்களுக்கும் கேரள மக்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு