தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு, போட்சுவானா. இது, வனவிலங்குகள் அதிகம் வாழும் பகுதி. கேப்டவுனைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஜஸ்டின் சுலிவென் ( Justin Sullivan) என்பவர், போட்சுவானாவில் யானைகளின் தந்தம் கடத்தப்படுவது தொடர்பாக ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக வந்துள்ளார்.

அங்கு, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதியில் தன் ட்ரோனை பறக்கவிட்டு படமெடுத்துக்கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக அவரின் கேமராவில் பதிவான காட்சிகள் உலகை உலுக்கும் விதமாக இருந்துள்ளது. தற்போது அவர் எடுத்த ஒரு புகைப்படம், உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
போட்சுவானாவில், தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், சுலிவென் எடுத்த புகைப்படத்தில், யானையின் உடலிலிருந்து துதிக்கை மட்டும் தனியாக வெட்டப்பட்டு இறந்துகிடந்துள்ளது. மேலும், யானையின் முகமும் சிதைக்கப்பட்டு இருந்துள்ளது. நன்கு வளர்ந்த அந்த யானையின் தந்தங்கள் மட்டும் கிடைக்கவில்லை. சுமார் 20 நிமிடங்கள், ரம்பம் மூலம் யானையின் துதிக்கை துண்டிக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 598 சதவிகிதம் யானைகளின் தந்தங்கள் திருடப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு, குறைந்தது 100 யானைகளின் தந்தங்களாவது அறுக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றிப் பேசியுள்ள இயக்குநர் ஜஸ்டின் சுலிவென், “ போட்சுவானாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்காக நான் ஆவணப்படம் எடுக்க வந்தேன். இந்தப் பகுதியில் உள்ள ரேஞ்சர்கள், வேட்டையாடப்பட்ட யானை பற்றி பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன், என்னை அங்கு அழைத்துச் செல்லும்படி கூறினேன். இறந்துகிடந்த யானையைப் பார்த்ததும் என் கேமராக்களில் புகைப்படமெடுத்தேன்.

இந்த யானையின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, இங்குள்ள மக்கள் கோபமாகவும் வருத்தமாகவும் உணர்ந்ததை நான் பார்த்தேன். போட்சுவானாவில் வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில்தான் நீக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே, இந்தச் சம்பவம் நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்படப் போட்டியில் (Andrei Stenin International Press Photo) கலந்துகொள்ள இந்த யானையின் புகைப்படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.