Published:Updated:

அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கர்ப்பிணி யானையின் இறுதி நிமிடங்கள்! -மனதை உலுக்கும் சம்பவம்

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை ( Facebook | Mohan Krishnan )

ஆற்றில் இறங்கி அசைவற்று நிற்கும் யானை குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் ஆகிய கும்கி யானையுடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

`கேரளா’ என்றால் நம் மனத்துக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்களில் யானைக்கு முக்கிய இடம் இருக்கும். கோயில் திருவிழாக்கள் தொடங்கி மலை வாழ் மக்களின் அன்றாட பணிகள் வரை கேரளாவில் யானைகள் முதல் வரிசையில் நிற்கும். உருவத்தில் யானை பெரிதென்றாலும் மனிதர்களுடன் எளிதில் பழகும் தன்மை கொண்டது. அப்படியான கேரள மாநிலத்தில், கர்ப்பிணி யானை ஒன்றுக்கு நேர்ந்தது கொடுமையின் உச்சம்.

யானை
யானை
Representational Image

ஆம், இன்னும் 18-20 மாதங்களில் அழகான யானைக் குட்டியை ஈன்று அதனுடன் கொஞ்சி விளையாட இருந்த பெண் யானைக்கு பழத்தில் வெடிமருந்து நிரப்பி கொடுத்திருக்கிறார்கள் மனிதர்கள். கொடூரத்தின் உச்சமான இந்தச் சம்பவம் தற்போது வனத்துறை அதிகாரி ஒருவரின் முகநூல் பதிவுமூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மலப்புறம் வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்னன் இந்த கொடூர சம்பவம் குறித்து முகநூலில், `உணவுக்காக இந்தப் பெண் யானை, வனத்தில் இருந்து மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்திருக்கிறது. உணவு தேடி சாலைகளில் அலைந்திருக்கிறது. அப்போது, அடையாளம் தெரியாத சிலர் அந்த யானைக்கு அன்னாசிப் பழம் கொடுக்கவும், அவர்களை முழுவதுமாக நம்பி அதை ஏற்றிருக்கிறது. அங்கு இருந்த அனைவரையும் அவள் நம்பியிருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை
Facebook | Mohan Krishnan

ஆனால் அவள், அன்னாசி பழத்தை உண்ணத் தொடங்கியதும் அது வாயிலே வெடித்திருக்கிறது. ஆம், அன்னாசிப் பழத்தில் வெடி மருந்தை நிரப்பி அளித்திருக்கிறார்கள் மனிதர்கள். தனக்குள் வெடிமருந்து வெடித்தபோது, நிச்சயம் அவள் தன்னைக் குறித்து சிந்தித்திருக்க மாட்டாள். அவளின் சிந்தனை முழுவதும் அவளின் வயிற்றில் இருக்கும் குட்டி மீதுதான் இருந்திருக்கும்’ என்கிறார் அதிர்ச்சி குறையாமல்.

வாயில் வெடித்த வெடிமருந்து அதிக சக்தி கொண்டதாக இருந்திருக்க வேண்டும். காரணம், அந்த வெடிப்பில் அந்த யானையின் வாயும் நாக்கும் முழுமையாக சேதமடைந்திருக்கிறது. மிகக் கடுமையான காயங்களுடன் அந்த தெருக்களில் யானை அலைந்தபோதும், அங்கு இருந்த யாரையும் தாக்கவோ, கோபத்தில் பொருள்களைத் தூக்கி வீசவோ இல்லை. அமைதியாகவே நடந்து சென்றிருக்கிறது. உணவுக்காக வந்த யானைக்கு இன்னும் உணவு கிடைக்கவில்லை. கடும் பசி, வாயில் கொடூரமான வலி. இரண்டுக்கும் நடுவில் அந்த யானை நரக வேதனைக்கும் மேலான வேதனையில் துடித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை
Facebook | Mohan Krishnan

இதுகுறித்து மோகன கிருஷ்ணன் தனது பதிவில், ``வலிகளுடனும் வேதனையுடனும் அந்தத் தெருக்களில் அவள் அலைந்தபோதும் ஒரு வீட்டைக்கூட சேதப்படுத்தவில்லை. அதனால்தான் சொல்கிறேன், அவள் நன்மைகளால் நிறைந்தவள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய யானை, அருகில் இருந்த வெள்ளியாறு நதியில் இறங்கி நின்றது. கடுமையான, பொறுக்க முடியாத வலியால் அந்த யானை தனது தும்பிக்கையையும் வாயையும் தண்ணீரிலே வைத்திருக்கிறது. `தனது காயத்தில் மற்ற பூச்சிகள் வந்து இருந்திராமல் இருக்க அது அப்படி செய்து இருக்கலாம்’ என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆற்றில் இறங்கி அசைவற்று நிற்கும் யானை குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் ஆகிய கும்கி யானையுடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர். மோகன கிருஷ்ணன், ``அவளுக்கு ஆறவது அறிவு இருந்திருக்க வேண்டும். அவள் எங்களை எதுவும் செய்ய அனுமதிக்கவில்லை” என்கிறார் வேதனையுடன். பல மணி நேரம் முயன்றும் யானையை நீரில் இருந்து வெளியேற்ற முடியவில்லை. இந்த நிலையில், கடந்த மே மாதம் 27 -ம் தேதி மாலை 4 மணி அளவில் தண்ணீரில் நின்ற நிலையிலே அவளின் உயிர் பிரிந்தது.

മാപ്പ്... സഹോദരീ .. മാപ്പ് ... അവൾ ആ കാടിന്റെ പൊന്നോമനയായിരുന്നിരിക്കണം. അതിലുപരി അവൾ അതിസുന്ദരിയും സൽസ്വഭാവിയും...

Posted by Mohan Krishnan on Saturday, May 30, 2020

பின்னர், அந்த யானை லாரி மூலம் காட்டுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது. ``அந்த யானைக்கு தகுதியான பிரியாவிடை தரவேண்டியது கடமை. அதனால் அதை லாரியில் காட்டுக்குள் எடுத்துச்சென்றோம். அங்கு அவள் வளர்ந்த, விளையாடிய நிலத்தில் விறகுக் கட்டைகளின் மேல் படுக்கவைக்கப்பட்டாள். அப்போது அங்கு உடற்கூறாய்வுக்கு வந்த மருத்துவர் என்னிடம், `அவள் தனியாக இல்லை. அவள் வயிற்றில் ஒரு உயிர் இருக்கிறது’ என்றார். இதனை என்னிடம் சொன்ன மருத்துவரின் முகத்தை அவர் அணிந்திருந்த மாஸ்க் காரணமாக பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அவரின் வேதனையை என்னால் உணர முடிந்தது. பின்பு, அவளது உடலை தகனம் செய்தோம். அவளின் முன்பு குனிந்து நின்று எங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினோம்” என்கிறார் மோகன கிருஷ்ணன்.

கேரளாவில் நடந்த இந்தக் கொடூர சம்பவம், படிக்கும் அனைவர் மனத்தையும் உலுக்கிவிடும். மோகன் கிருஷ்ணனின் பதிவை படித்த பலரும் ,`தங்களின் வாழ்வில் இத்தனை வேதனை தரும் பதிவைப் படித்ததில்லை’ எனக் கண்ணீர் வடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு