Published:Updated:

`பாம்புகள் இதற்காகத்தான் விஷத்தைப் பயன்படுத்துகின்றன!' - பாம்புக்கடியும் மூடநம்பிக்கைகளும்

Snake (Representational Image)
News
Snake (Representational Image) ( Image by Musthaq Nazeer from Pixabay )

பாம்புகள் கிராமம், நகரம் என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் புழங்குபவை. இத்தகைய சூழலில், பாம்புகள் குறித்து அனைவரும் ஓரளவேனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. பாம்புகள் பற்றித் தெரிந்து கொள்ளாததால்தான் பாம்பைப் பார்த்தாலே அதை அடித்துக் கொல்ல முயல்கிறோம்.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் தனது பிறந்தாள் கொண்டாட்டத்துக்காகப் பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது அவரைப் பாம்பு கடித்துள்ளது. பிறகு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆறு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.

முதலில் என்ன பாம்பு கடித்தது என்று தெரியவில்லை எனக் கூறப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னரே அவரைக் கடித்தது விஷம் உள்ள பாம்புதான் என உறுதியானது. இச்சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாம்புகள் கிராமம், நகரம் என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் புழங்குபவை. இத்தகைய சூழலில், பாம்புகள் குறித்து அனைவரும் ஓரளவேனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. பாம்புகள் பற்றித் தெரிந்து கொள்ளாததால்தான் பாம்பைப் பார்த்தாலே அதை அடித்துக் கொல்ல முயல்கிறோம். பாம்புகளில் விஷம் உள்ளவை எவை, விஷம் இல்லாதவை எவை, பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பூச்சிகள், பாம்புகள் பற்றி நன்கறிந்தவருமான கோவை சதாசிவத்திடம் கேட்டோம்.

Snake
Snake
Photo: Pixabay

``உண்மையில் பாம்புகள் சுற்றுச்சூழல் சுழற்சியிலும், பல்லுயிர் பெருக்கத்திலும் மகத்தான பங்கு வகிப்பவை. பாம்புகளுக்கு விஷம் என்பது அவற்றின் உணவை செரிப்பதற்காக உள்ளது. விழுங்கிய உணவின் மீது விஷத்தை பாய்ச்சி அவற்றை செரிமானத்துக்குள்ளாக்குகிறது.

எனவே, மனிதர்களைக் கொல்வதற்காக இயற்கை பாம்புகளுக்கு விஷத்தைக் கொடுக்கவில்லை. நம் இருப்பிடங்களுக்கு பாம்புகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் அவற்றிடமிருந்து விலகி இருந்தாலே போதும் விலகிப் போய்விடும். பாம்புகள் தேடி வந்து கடிப்பதில்லை.

பாம்புகளுக்கு 90 டிகிரி பார்வை கோணம் உண்டு. அவை நம்முடைய ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிக்கும் ஆற்றல் கொண்டது. அதைத் தாக்கப் போகிறோம் என்று அது உணர்ந்தால் கடிக்க முற்படும். நாம் அதை மிதித்தாலோ, அதைத் துன்புறுத்த முயன்றாலோ தற்காப்புக்காக அது கடிக்க முற்படும். பாம்புகளில் எல்லாமே விஷம் உடையவை அல்ல.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தியா முழுவதும் 302 பாம்பு வகைகள் உள்ளன. அதில் நாகப்பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், சட்டி தலையன் ஆகியவைதான் விஷம் உள்ளவை. சாரைப்பாம்பு உட்பட 282 வகை பாம்புகள் விஷமற்றவை.
விஷமில்லாத பாம்புகளுக்கும் இரைப்பற்கள் இருக்கும். பாம்புகள் கடித்தால் அதன் கடிவாயைப் பார்த்தாலே விஷப்பாம்பா, விஷம் இல்லாத பாம்பா? என்பதைக் கண்டு பிடித்துவிடலாம்.

கடிபட்ட இடத்தில் நிறைய பல் வரிசைகள் இருந்தால் அவை விஷமில்லாத பாம்புகள். விஷமுள்ள பாம்புகள் கடித்தால் இரண்டு பற்களின் தடங்கள் அழுத்தமாகப் பதிவாகும். அதிலிருந்து ரத்தம் வரும். இரைப்பற்களின் தடமும் பதிவாகி இருக்கும். விஷம் உள்ள பாம்புகள் கடிக்கும்போது, உடனே வீக்கம், தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும்.

Snake
Snake
Photo: Pixabay

பாம்புகளில் விரியன் வகைகள்தான் விஷம் மிக்கவை. அவற்றிலும் கட்டுவிரியன்தான் மிகவும் விஷம் அதிகமானது. இதனிடம்தான் கவனமாக இருக்க வேண்டும். கட்டு விரியன் வெப்பத்தை அதிகம் விரும்பும். அதனாலேயே அடும்பங்கரைகளில் இவை தஞ்சமடைய வாய்ப்புள்ளது.

மேலும் இது தன் குட்டிகளைப் பாதுகாப்பாக வைக்க விரும்புவதால், அவற்றை ஓட்டு வீடுகளில் ஓடுகள் மீது வைத்திருக்கும். இதன் விஷப்பற்கள் மிக மெல்லியதாக இருப்பதால் இது கடிப்பதே தெரியாது. ஊசி குத்தியது போல் இருக்கும். 4 மணி நேரத்துக்குப் பிறகுதான் ரத்தம் உறைய ஆரம்பிக்கும்.
ரத்தம் உறைந்து மாரடைப்பு உண்டாக்கி மரணம் அடைய வைக்கும். எனவே, கட்டு விரியன் கடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து விரியன் வகைகளில் சுருட்டை விரியனும், கண்ணாடி விரியனும் விஷம் உடையவை. சுருட்டை விரியன் கற்குவியல், குப்பைகள், மரப் பொருள்கள் குவியல் போன்ற இடங்களில் சுருட்டிக்கொண்டு படுத்திருக்கும். வீடுகளைச் சுற்றியுள்ள இடங்களில் குப்பை சேராமல், தேவையற்ற பொருள்களைக்
குவித்து வைப்பது போன்றவற்றைத் தவிர்த்தாலே போதுமானது.

தண்ணீர் பாம்புகள் பெரும்பாலும் விஷம் இல்லாதவையாகவே இருக்கும். அவை கடித்தால் பயப்படத் தேவையில்லை. பச்சை பாம்புகள் மரங்கள் செடிகளில் உள்ள பூச்சிகளைத் திண்பதற்காக அங்கே இருக்கும். இவை விஷம் மிகக் குறைவுதான்.

மரங்கள், செடிகள் ஆகியவற்றில் ஏறும்போது கவனமாக இருந்தால் போதும். கொம்பேரி மூக்கன் போன்றவை விஷம் இல்லாதவை. சாரைப் பாம்பும் மனிதனைக் கண்டாலே ஓடிவிடும். அதிலும் விஷம் இல்லை.

சாரைப் பாம்புகளை கடற்கரையோரம், வறண்ட பிரதேசம், நீர் நிறைந்த இடம், மலைப்பாங்கான இடம், திறந்தவெளி மற்றும் காடு ஆகிய இடங்களில் காணலாம்.

பச்சைப் பாம்பு/ Green Vine Snake
பச்சைப் பாம்பு/ Green Vine Snake
Subagunam Kannan

நாகப்பாம்புகள் பெரும்பாலும் மனிதர்களைத் தேடி கடிப்பதில்லை. அவை பிற பாம்புகளையே வேட்டையாடும் என்பதால் அவற்றுக்கு மனிதன் உணவு அல்ல. ஆனால், ராஜ நாகம் உள்ளிட்ட நாகப் பாம்புகள் விஷம் உடையவை. நாகப்பாம்புகள் கடித்தாலும், விஷத்தை அநாவசியமாகக் கக்காது.

இரையை ஜீரணம் செய்வதற்கு உதவியாக விஷம் இருப்பதால் அவற்றை சீக்கிரத்தில் வீணாக்காது. சேமித்து வைக்கவே விரும்பும். நாகப்பாம்புகள் விஷத்தோடு கடித்தால் அது அதன் கோபத்தை வெளிக்காட்டுவதாகவே அமையும். பொதுவாக, நாகப்பாம்புகள் 80 சதவிகிதம் விஷம் இல்லாத தன்மையிலேதான் கடிக்கின்றன. அவை தாக்குதலுக்கு ஆளாகும்போது, தற்காத்து கொள்வதற்கு விஷத்துடன் கடிக்கும்.

நாம் வசிக்கும் பகுதிக்குள் பாம்புகள் வராமல் பார்த்துக்கொள்ள வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகள், கற்கள், மரத்துண்டுகள் குவிந்து கிடந்தால் பாம்புகள் குடியேற வாய்ப்புள்ளது.

பாம்புகள் பற்றிய தவறான எண்ணங்கள், கட்டுக் கதைகள் போன்றவை உலவுகின்றன. அதில் பெரும்பாலும் உண்மையில்லை. பாம்புகளுக்கு சரியான இரை கிடைத்து விட்டால் ஆறு நாள்களுக்கு அமைதியாக எங்காவது சுருண்டு படுத்துக்கொள்ளும்.

பாம்பு கடித்தால் பயமோ, பதற்றமோ அடையாமல் இருந்தாலே போதும். விஷம் வேகமாக ரத்தத்தில் பரவாது. அதேபோல் பாம்பு கடித்ததும் ஓடக் கூடாது. அப்படி செய்தால் விஷம் வேகமாக உடலில் பரவும். பாம்பு கடித்த இடத்தைத் துணியால் கட்டுவது, பிளேடால் அறுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது,
பாம்புகளின் கடிக்கு, அவற்றின் விஷமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு சித்த மருத்துவமோ, நாட்டு வைத்தியமோ, சாமியார்களின் பாட்டோ சரிவராது. அவற்றில் நேரத்தை வீணாக்கினால் உயிருக்குதான் ஆபத்து. பாம்பு கடிக்கு ஆங்கில மருத்துவம்தான் சரியானது'' என்றார்.