Election bannerElection banner
Published:Updated:

குட்டிகளுக்காக ஒரு தாய்ப்புலி செய்த தியாகங்கள்- நெகிழ வைக்கும் உண்மை! #MustRead

அமூர் புலி
அமூர் புலி

மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இந்தச் சிரமங்கள் உண்டு. குறிப்பாகப் புலிகள் அவற்றின் குட்டிகளை வளர்ப்பதில், ஒரு தாயாகப் பல சவால்களைச் சந்திக்கின்றன. அதற்காகப் பல தியாகங்களையும் செய்கின்றன.

குழந்தை பிறந்த புதிதில், ஒரு தாய் படக்கூடிய சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதற்குரிய, ஊட்டச்சத்துகளை நல்கக்கூடிய உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தைக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அன்போடு நடந்துகொள்ள வேண்டும். அன்பைப் பகிர்வதற்கான நேரத்தை ஒதுக்குவதிலும் குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்ய உழைப்பதிலும், தனியாளாகக் குழந்தைகளை வளர்க்கும் தாய்க்குப் பல சவால்கள் வருகின்றன.

புலிகள்
புலிகள்

மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இந்தச் சிரமங்கள் உண்டு. குறிப்பாகப் புலிகள் அவற்றின் குட்டிகளை வளர்ப்பதில், ஒரு தாயாகப் பல சவால்களைச் சந்திக்கின்றன. அதற்காகப் பல தியாகங்களையும் செய்கின்றன. ஒரு வலிமையான, வல்லமைமிக்க பெண் புலியே கூட, தாயான பின் சிரமப்படுகிறது. வேட்டையாட வேண்டும், குட்டிகளைப் பாதுகாக்க வேண்டும், தன்னுடைய எல்லையைப் பாதுகாக்க வேண்டும், அதேநேரம் குட்டிகளுக்கென்று நேரத்தையும் ஒதுக்க வேண்டும். இவைபோக, அதற்குரிய ஓய்வும் அவசியமாகின்றது. அந்த ஓய்வு கிடைக்கவில்லை என்றால், இவையனைத்தையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்க முடியாது.

இப்படி எல்லா வேலைகளையும் எப்படி ஒரு தாய்ப்புலி மேற்கொள்கின்றது? இத்தனை சிரமப்பட்டு அது தன் குட்டிகளை வளர்க்க வேண்டிய காரணமென்ன?

இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடிக்கும் விதத்தில் முதன்முறையாக ஓர் ஆய்வு நடந்துள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் வாழக்கூடிய அமூர் புலி ஒன்றின்மீது இந்த ஆய்வை ரஷ்ய திட்டத்தின்கீழ் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு (Wildlife Conservation Society) செய்துள்ளது. ஜி.பி.எஸ் காலர் பொறுத்தப்பட்ட ஒரு புலியைத் தொடர்ந்து காட்டுயிர் ஆய்வாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அந்தப் புலியின் பெயர், `வவர்ரா' (Vavarra). கருவுற்றிருந்த வவர்ராவை, பிரசவிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்து தொடங்கி பிரசவித்து நான்கு மாதங்கள் கழியும் வரை கண்காணித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவுகள் மனிதர்களைப் போலவே, தன் குட்டிகளை வளர்க்க தாய்ப்புலிகள் எப்படி தியாகங்களைச் செய்கின்றன என்பதை நிரூபித்தன.

"புலி நடந்து சென்ற பாதையில் நடந்து செல்லும் வாய்ப்பு கிடைத்ததை நாங்கள் கௌரவமாக நினைக்கின்றோம்."
டேல் மிக்கேல் (Dale Miquelle)

"தன்னுடைய அன்றாட வேலைகளையும் குடும்பத்துக்கான நேரத்தையும் சமநிலையில் கொண்டுசெல்ல அவை தொடர்ந்து ஓய்வின்றிச் செயல்படுகின்றன" என்று தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார், இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பின் இயக்குநருமான டேல் மிக்கேல் (Dale Miquelle).

ஓநாய், கரடி, லிங்க்ஸ் (lynx) என்ற ஒரு பூனை வகை விலங்கு, சிறுத்தை ஆகியவை புலிக் குட்டிகளை எளிதில் அபகரித்துச் சென்றுவிடும். இந்த ஆபத்திலிருந்து தன் இரண்டு குட்டிகளையும் பாதுகாக்க வவர்ரா தன்னால் முடிந்த அளவுக்கு அதிகமான நேரத்தைக் குட்டிகளுடனே செலவழித்தது. அதற்காக, தன்னுடைய வாழ்விட எல்லையைக்கூட குறைத்துக்கொண்டது. அதன்மூலம், எல்லையைக் கண்காணிக்க ரோந்து செல்லவேண்டிய நேரம் குறைந்தது. அந்தப் பகுதிகளையும்கூட மிக வேகமாகப் பயணித்து, விரைவாகவே ரோந்துகளை முடித்துத் திரும்ப தன்னைப் பழக்கிக்கொண்டது. வேட்டைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டு, வேட்டையாடும் இரையின் அளவைப் பெரிதாகவே வைத்திருந்தது. அதன்மூலம், உணவுக்காக அதிகம் அலையாத, அதேநேரம் பெரிய இரையை வேட்டையாடி உணவுத் தேவையிலும் பற்றாக்குறை ஏற்படாமல் கவனித்துக் கொண்டது வவர்ரா. இவையனைத்துக்கும் ஆகும் நேரம் போக, கிடைக்கும் மிகச் சொற்ப நேரத்தில் மட்டுமே ஓய்வெடுத்தது.

குட்டிகளுக்கு அந்தக் காலகட்டத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்க வேண்டும். அதேநேரம் பாதுகாப்பையும் அன்பையும் வழங்க வேண்டும். அதற்காக, அது தன் வாழ்விட எல்லையைத் தியாகம் செய்தது. தன்னுடைய ஓய்வு நேரத்தைத் தியாகம் செய்தது. சில சூழல்களில் தன்னுடைய பங்கு உணவிலும் ஒரு பகுதியைத் தியாகம் சூழல் வரவே, அப்போதும் குட்டிகளுக்காகத் தயங்காமல் அதையும் தியாகம் செய்தது வவர்ரா.

வவர்ரா
வவர்ரா
WCS, Sikhote-Alin Biosphere Reserve
`சுருக்குக் கம்பியில் சிக்கிய புலி; அலட்சிய வனத்துறை!' - 17 மணி நேர கோத்தகிரி திக் திக் #SpotReport

"குட்டிகள் பிறந்தவுடனே, வவர்ரா 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக இருந்த தன்னுடைய வாழ்விட எல்லையை, 180 சதுர கிலோமீட்டராகக் குறைத்துக்கொண்டது. அதைப் பாதுகாப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிடவில்லை. வேகமாகக் குட்டிகளிடம் வந்து சேர்வதிலேயே குறியாக இருந்தது. குறிப்பாக வேட்டையாடிய பின் இரையைக் கொண்டுவரும்போது அதன் வேகம் அபரிமிதமாக இருந்தது" என்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிறிது சிறிதாகக் குட்டிகள் பயணிக்கும் அளவுக்கு வளர்ந்ததும், அவற்றைக் கூடவே அழைத்துக்கொண்டு தன் எல்லைப்பரப்பு முழுக்கவும் வேட்டையாடவும் அழைத்துச் செல்வது வவர்ராவின் வழக்கமானது. அதன்மூலம், அவற்றைப் பாதுகாத்து, உணவளித்து, பின்னர் வவர்ராவும் சாப்பிட்டுக்கொள்ள முடியும்.

இதர வேட்டையாடிகளைப் போலவே, புலிகளும் பசியில் வாடாமலிருக்கத் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, வேட்டை வாய்ப்பை இழந்தாலோ புலிகள் உயிர் பிழைத்திருப்பது மிகவும் சிக்கலாகிவிடும். அதிலும் குட்டிகள் பிறக்கும் காலகட்டத்தில், தாய்ப்புலிகளுடைய பொறுப்பு இன்னும் அதிகமாகின்றது. அந்த நேரத்தில், இரையைத் தவறவிட்டால் அது அதை மட்டுமின்றி அதன் குட்டிகளின் இருப்பையும் ஆபத்திற்குள்ளாக்கும். அவையும் பட்டினியால் இறக்க நேரிடும். அந்தச் சிக்கலைத் தவிர்க்க வவர்ரா செய்த தியாகங்கள் பல விஷயங்களைப் புரியவைத்தன.

1930-களில் அமூர் புலிகள் வெறும் 30 என்ற எண்ணிக்கைக்குக் குறைந்து, கிட்டத்தட்ட அழிந்துவிடும் நிலைக்கே தள்ளப்பட்டுவிட்டன.
7 ஆண்டுகளில் 655 புலிகள் இறப்பு... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை... #VikatanInteractive 

2015-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 523 முதல் 540 மட்டுமே இருக்கின்ற அமூர் புலிகள், தற்போது அழிவின் விளிம்பிலுள்ள உயிரினமாகச் சர்வதேசப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது முழுமையான கணக்கெடுப்பு கிடையாது. தூரக்கிழக்கு ரஷ்யாவின் மோசமான சூழலியல் அமைப்பு, அவற்றை ஆய்வு செய்ய மனிதர்களுக்குச் சிக்கலாக உள்ளது. அதையும் தாண்டித்தான் இந்த ஆய்வை காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டது.

அது மட்டுமின்றி அவர்கள், வெறுமனே அது பயணிக்கும் பகுதிகளை ஜி.பி.எஸ் மூலம் டிராக் செய்து மட்டுமே இதைச் செய்ய முடியவில்லை. வவர்ரா பயணிக்கும் பகுதிகளில் அதை நேரடியாக ஆய்வு செய்யவேண்டியிருந்தது. அதன் கால்தடங்களை, இரைகளின் மிச்சங்களை ஆய்வு செய்யவேண்டியிருந்தது. இவையனைத்தையும் வவர்ராவின் கண்களில் படாமல் செய்தாக வேண்டும். மனிதர்கள் அதன் பார்வையில் பட்டு, மனநிலையில் மாற்றம் நிகழ்ந்தால் அது ஆய்வைப் பாதிக்கும். துல்லியமான தகவல்கள் கிடைக்காது. இது மிகப்பெரிய வேலையாக இருந்ததென்று தங்களுடைய அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார், மிக்கேல். அவர், ``புலி நடந்து சென்ற பாதையில் நடந்து செல்லும் வாய்ப்பு கிடைத்ததை, நாங்கள் கௌரவமாக நினைக்கின்றோம்" என்றும் கூறியுள்ளார்.

ஆய்வின்போது...
ஆய்வின்போது...
Global protected area friendly system

1930-களில் அமூர் புலிகள் வெறும் 30 என்ற எண்ணிக்கைக்குக் குறைந்து, கிட்டத்தட்ட அழிந்துவிடும் நிலைக்கே தள்ளப்பட்டுவிட்டன. வேட்டை மீது விதிக்கப்பட்ட மிகக் கடுமையான தடை உத்தரவு, ஈடுபாட்டுடன் பணிபுரிந்து பாதுகாத்த வனத்துறை ஊழியர்கள் போன்றவையே அவற்றை இப்போதைய நிலைக்கு மீட்டெடுத்துள்ளன. இருப்பினும், இன்றளவும் அவை, வாழ்விட இழப்பு, சாலை விபத்து, சட்டவிரோதமாகப் புலிகளின் இரை விலங்குகளான மான், காட்டுப் பன்றி ஆகியவற்றை வேட்டையாடுவது போன்றவற்றால் உணவுக்கும் வாழ்விடத்துக்குமான சிக்கலில் அமூர் புலிகள் சிக்கியுள்ளன.

இதுமட்டுமின்றி, புலிகளின் பாகங்களுக்கான கள்ளச்சந்தை தீவிரமாகி வருவதால், ஆசியா முழுக்க அதற்கு பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அதுவும் இவற்றைப் பாதிக்கின்றன. காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பினுடைய தரவுகள்படி, ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் மட்டும் ஒவ்வோர் ஆண்டுக்கும் 20 முதல் 30 புலிகள் வேட்டையாடப்படுகின்றன.

தாய்மை
தாய்மை
இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் துடைத்து அழிக்கப்பட்ட சோக வரலாற்றுக் கதை!

இவையெல்லாவற்றையும் தாண்டி, தன்னுடைய ஆரோக்கியத்தை, பாதுகாப்பைக்கூடப் பொருட்படுத்தாமல் குட்டிகளைப் பாதுகாப்பதிலும் உணவளிப்பதிலுமே தன் முழுக் கவனத்தையும் செலுத்தியிருக்கிறது, வவர்ரா. மனித இனமாக இருந்தாலென்ன, காட்டுயிராக இருந்தாலென்ன. தாய்மையின் அன்பு உன்னதமானதுதான் என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கின்றது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு