Published:Updated:

2 நாள்களாக நகர முடியாமல் தவித்த பெண் யானை! - உயிரிழந்த சோகம்

குருபிரசாத்

கோவையில் உடல்நலக் குறைவால் நகர முடியாமல் ஒரே இடத்தில் 2 நாள்களாக நின்றுகொண்டிருந்த பெண் யானை உயிரிழந்தது.

பெண் யானை
பெண் யானை

கோவை மாவட்ட புறநகர்ப் பகுதியில், வனத்தை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். துடியலூரை அடுத்த வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில், செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்படும்.

பிளிரும் பெண் யானை
பிளிரும் பெண் யானை

இந்நிலையில், அந்த இடத்தில் 12 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை, கடந்த இரண்டு நாள்களாக ஒரே இடத்தில் நகராமல் சோர்வுடன் நிற்கிறது. யானை நிற்பதைப் பார்த்த பொதுமக்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், பெண்யானையைக் கண்காணித்துவருகின்றனர். பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். முதல்கட்டமாக யானைக்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெண் யானை
பெண் யானை

கோவை மாவட்டத்தில், வனத்துறைக்கு என்று கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். இதனால், அந்தந்த பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட, கால்நடை மருத்துவர்கள் தான், யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் காரணமாக, அந்தப் பெண் யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

"உடனடியாக மருத்துவரை வரவழைத்து, அந்தப் பெண் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்" என்று சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெண் யானை நகர முடியாமல் நிற்பதை, பொது மக்கள் பார்த்துச் செல்கின்றனர்.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

இந்தநிலையில், உடல்நலக் குறைவால் நகர முடியாமல் ஒரே இடத்தில் நின்றிருந்த அந்த பெண் யானை திடீரென கீழே விழுந்தது. இதையடுத்து, யானையின் அருகே சென்று வனத்துறையினர் சோதித்துப் பார்த்ததில், அந்த யானை உயிரிழந்தது தெரியவந்தது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.