Published:Updated:

பனிச்சிறுத்தைக்கு 'ஸ்கெட்ச்' போடும் காட்டுநாய்கள்- 'ஷாக்' புகைப்படங்கள்!

பனிச்சிறுத்தைகளுக்கு உருவெடுத்திருக்கும் புதிய சிக்கல் இது!

பனிச்சிறுத்தைக்கு 'ஸ்கெட்ச்' போடும் காட்டுநாய்கள்
பனிச்சிறுத்தைக்கு 'ஸ்கெட்ச்' போடும் காட்டுநாய்கள் ( நரேந்திர பாட்டீல் )

இமயமலைத் தொடர்களில் வாழும் அறிய உயிரினம் பனிச்சிறுத்தை. நேரில் பார்ப்பதே அரிதென்பதால் இவற்றை `Ghosts of the Mountains' என்றுதான் பலரும் அழைப்பர். ஆறு கிலோமீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வாழும் இவற்றுக்கு, தற்போது புது எதிரி ஒன்று உருவாகியிருக்கிறது.

Vikatan

ஏற்கெனவே நம்மால் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தில் பெரும் சிக்கலைச் சந்தித்துவருகின்றன இந்த பனிச்சிறுத்தைகள். பனி இருக்கும் பிரதேசங்கள் மலைகளின் உச்சியை நோக்கி குறைந்துகொண்டேவருகின்றன. இதனால், தாவர வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இவற்றின் இரைகளும் குறைந்துகொண்டேவருகின்றன. இதனால், அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதால், எதிர்வினையாக இவை அந்தக் கிராம மக்களாலும் கொல்லப்படுகின்றன. ஆனால், இவற்றைவிடவும் பனிச்சிறுத்தையின் வாழ்வுக்கு பெரும் இடையூறாக உருவெடுத்திருப்பது காட்டுநாய்கள்தான்.

தற்போது, ஜம்மு காஷ்மீரின் லே மாவட்டத்தில் மட்டும் 3,000 காட்டுநாய்களுக்கும் மேலாக இருக்கின்றன. முறைப்படுத்தப்படாத சுற்றுலா வசதிகள், அதிகமான குப்பை உருவாதல் போன்ற விஷயங்கள்தான் இவற்றின் திடீர் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. பனிச்சிறுத்தைகளுக்கு இவை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை சமீபத்தில் படம்பிடித்திருந்தார் நரேந்திர பாட்டீல் என்னும் இயற்கை ஆர்வலர். அந்தப் படங்கள், பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.

பனிச்சிறுத்தை மட்டுமல்லாமல், 80-க்கும் அதிகமான விலங்கினங்கள் காட்டுநாய்களால் இமயமலையில் பாதிக்கப்பட்டுள்ளன.

மூன்று கிலோமீட்டர் உயரத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படங்களில் பனிச்சிறுத்தை வேட்டையாடிய இரையை சுற்றிப்பிடிக்க முயற்சி செய்கின்றன காட்டுநாய்கள். இந்தக் கூட்டத்துடன் வெகுநேரமாகப் போராடுகிறது. முடிவைப் பார்க்க முடிவில்லை என்றாலும் நடந்ததை வைத்து, இறுதியாக இதில் வேட்டைநாய்களே வென்றிருக்க வேண்டும் என்கிறார், பாட்டீல்.

பனிச்சிறுத்தைக்கே இந்த நிலை என்றால் மற்ற விலங்குகளின் நிலை என்ன? 80-க்கும் அதிகமான விலங்கினங்கள் இதனால் அங்குப் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுநாய்களின் திடீர் எழுச்சி அங்கு மொத்த சமநிலையையுமே சீர்குலைத்துவருகிறது. இந்த நாய்களைக் கட்டுப்படுத்தவேண்டியது அவசியம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.