Published:Updated:

`செயலிழந்த பின்பகுதி; முதுகுத் தண்டுவடத்தில் காயம்!' -உயிருக்குப் போராடும் பெண் சிறுத்தை

பெண் சிறுத்தை
பெண் சிறுத்தை

கோவை மேட்டுப்பாளையம் அருகே, காயமடைந்த பெண் சிறுத்தைக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் அருகே, ஓடந்துறை அறிவொளி நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு சிறுத்தை இருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அந்தச் சிறுத்தை பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த முள்வேலியில் சிக்கியிருந்தது தெரியவந்தது.

வனத்துறை
வனத்துறை
டூவீலர் பிரேக் கம்பியில் சுருக்கு வலை; 9 மணி நேரம் சிக்கித் தவித்த சிறுத்தை!-கேரளாவில் தொடரும் சோகம்

பிறகு, வனக் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை மீட்கும் முயற்சி தொடங்கியது. 4 மணிநேர தொடர் போராட்டத்துக்குப் பிறகு, மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிறுத்தை கூண்டில் ஏற்றப்பட்டது.

சிறுத்தையின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. இதனால், சிறுத்தை நகரக்கூட முடியாமல் அவதிப்பட்டு வந்தது. மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையில்தான், 2 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் அந்த சிறுத்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

காயமடைந்த சிறுத்தை
காயமடைந்த சிறுத்தை

இதுகுறித்து வனத்துறையினர், ``சிறுத்தையின் மார்புப் பகுதி தசைகள் மற்றும் முதுகெலும்பு தண்டுவடம் பலத்த காயமடைந்திருந்தது. இதன் காரணமாக, அதன் பின்பகுதி செயலிழந்து, நீர்ச்சத்தும் குறைந்து காணப்பட்டது.

இதையடுத்து, காயம்பட்ட இடத்தில் தையல் போட்டு, ரத்தநாளங்கள் வழியாக குளுக்கோஸ் ஆன்டிபயாடிக், வைட்டமின் மருந்துகள் கொடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சிறுத்தை மலம் மற்றும் சிறுநீர் கழித்தது. ஆனாலும், அதன் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சிறுத்தை சிகிச்சை
சிறுத்தை சிகிச்சை

தொடர் சிகிச்சையின் பலனாக, செவ்வாய்கிழமை முதல் அதன் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் காணப்படுகிறது. சிறுத்தைக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அதற்கு ரத்தச்சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சையளித்துவருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு