Published:Updated:

நான்கு நாள்களாகத் தண்ணி காட்டும் `அரிசி ராஜா’!- தொடரும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை

பொள்ளாச்சி அருகே, 'அரிசிராஜா' காட்டு யானையைப் பிடிக்கும் பணி நான்காவது நாளாகத் தொடர்கிறது.

அரிசிராஜா
அரிசிராஜா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, அர்த்தநாரிபாளையம் பகுதியில் அரிசி ராஜா என்ற காட்டு யானையைப் பிடிக்கும் பணி நான்கு நாள்களாகத் தொடர்கிறது. கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலீம், பாரி என்ற இரண்டு கும்கிகள் களமிறக்கப்பட்டிருந்தன.

அரிசிராஜா ஆபரேஷன்
அரிசிராஜா ஆபரேஷன்

ஆனால், பாரி யானைக்கு மதம்பிடித்திருந்ததால், நேற்று அது டாப்ஸ்லிப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. பாரியின் இடத்தை கபில்தேவ் என்ற கும்கி யானை நிரப்பியுள்ளது.

அரிசி ராஜா எப்போதும் வரும் பகுதிகளில், அதற்கு மிகவும் விருப்பமான ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருக்கிறது. அரிசி ராஜாவுக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, நான்கு பேர் அடங்கிய மருத்துவர் குழு களத்தில் இருக்கிறார்கள்.

அரிசிராஜா ஆபரேஷன்
அரிசிராஜா ஆபரேஷன்

வனப்பகுதியில், ஓர் லாரியில் மறைந்துகொண்டு அரிசி ராஜாவின் வருகைக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர். இதுதவிர, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அரிசி ராஜாவைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

ஆனால், நான்கு நாள்களுக்கு மேலாகியும் அரிசி ராஜாவைப் பிடிக்க முடியவில்லை. குறிப்பாக, மூன்று நாள்களுக்குப் பிறகு நேற்று அரிசி ராஜாவைப் பார்த்தும், அதைப் பிடிக்க முடியவில்லை.

அரிசிராஜா ஆபரேஷன்
அரிசிராஜா ஆபரேஷன்

வனத்துறையின் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி, அரிசி ராஜா மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வனப்பகுதிக்குள் வைத்து யானையைப் பிடிக்க முடியாது. காட்டு யானைகள் உணவுக்காகத்தான் வெளியில் வரும்.

அரிசிராஜா ஆபரேஷன்
அரிசிராஜா ஆபரேஷன்

ஆனால், தற்போது மழை நன்கு பெய்திருப்பதால், காட்டிலேயே போதுமான அளவுக்கு உணவு கிடைக்கும்.

மேலும், இங்கு இத்தனை பேர் கூடியிருப்பதை உணர்ந்து, அலர்ட்டாகிக்கூட அது இங்கு வராமல் இருக்கும். அந்த யானை நம்மைவிட அறிவாளியாக இருக்கிறது.

அரிசிராஜா ஆபரேஷன்
அரிசிராஜா ஆபரேஷன்

விரைவில், அந்த யானையைப் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது' என்றார்.