Published:Updated:

`சட்டவிரோதமாய் 12 ஆண்டுகள்.. சிறைவாசத்தில் 4 மாதங்கள்' காத்திருந்து காப்பகம் அடைந்த ‘மாலாச்சி’ யானை!

முத்துக்குமரன் மு

பன்னிரண்டு ஆண்டுகால அவஸ்தைகளைத் தாண்டி நிற்கும் ‘மாலாச்சி’ யானையை ஒருவழியாய் வனத்துறையினர் தங்கள் காப்பகத்துக்குக் கொண்டுசென்றனர்.

elephant
elephant

மோசடியால் நாடு கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக மதுரையில் வளர்ந்து, ஆண்டுக்கணக்கில் வழக்கு கடந்து, உயர்நீதிமன்ற தீர்ப்பைப்பெற்று, வனத்துறையினரின் வசப்பட்டு, உச்சநீதிமன்ற மேல்முறையீடு கண்டு, முறையற்ற மருத்துவச்சான்று கிடைத்து, மாதக்கணக்கில் சிறைப்பட்டு..  எனப் பன்னிரண்டு ஆண்டுகால அவஸ்தைகளைத் தாண்டி நிற்கும் ‘மாலாச்சி’ யானையை ஒருவழியாய் வனத்துறையினர் தங்கள் காப்பகத்துக்குக் கொண்டுசென்றனர்.

doctor
doctor

பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் அந்தமானில் மோசடிசெய்து வாங்கி மதுரைக்குக் கொண்டுவந்து வளர்த்து வரப்பட்டது, ‘மாலாச்சி’ என்ற பெண் யானை. கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பின்படி யானையை வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மதுரை தென்பழஞ்சியில் இருந்த இந்த யானை, அதிரடியாக வனத்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தது. வழக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றதால் யானையை வனத்துறையினர் தங்கள் இடத்துக்கு கொண்டுசெல்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில் யானைக்குக் காசநோய் உள்ளதாக அவசர அவசரமாக முடிவு தரப்பட்டது.

elephant
elephant

அவசரகதியில் அனுப்பப்பட்ட அந்த மருத்துவ அறிக்கையின் குளறுபடிகள் குறித்த டீடெயில் ரிப்போர்ட்டினை ‘அரைகுறை ரிப்போர்ட்... எச்சரித்த உச்சநீதிமன்றம்! `மாலாச்சி’ விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்’ என்ற தலைப்பில் விகடன் கட்டுரையாய் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது இறுதிக்கட்ட பரிசோதனையில் யானைக்குக் காசநோய் இல்லை என மருத்துவச்சான்று அளிக்கப்பட்டிருக்கிறது. கோவை கால்நடை அரசு மருத்துவர் சுகுமார் கூறுகையில், "ஃபைனல் ரிசல்ட் செப் 4-ம் தேதி வந்தது. எனக்குத் தகவல் அளிக்கப்பட்டதும் நான் வந்தேன். மதுரை, கோவை மாவட்டங்களின் வனத்துறை அலுவலர்கள் தலைமையில் நேற்று அதிகாலை 7 மணியளவில் யானையை மதுரையிலிருந்து வாகனத்தில் ஏற்றி 11 மணியளவில் திருச்சி அடைந்தோம்.

elephant
elephant

அருகே எம்.ஆர்.பாளையம் கிராமத்தில் வனத்துறைக்குட்பட்ட சரணாலயப்பகுதியிலே அமைக்கப்பட்டு வனத்துறையால் நிர்வகிக்கப்படுகின்ற விலங்குநலக் காப்பகத்துக்குக் கொண்டு சென்றோம்" என்றார். காப்பகத்து மாலாச்சி கொண்டு செல்லப்பட்டதால், நான்கு மாதங்களாய் ஒரே இடத்தில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மாலாச்சி யானை இனிமேல் நிம்மதிப்பெருமூச்சுவிடும் என நம்பலாம்.