Published:Updated:

ஒரே வாரத்தில் மர்மமாக உயிரிழந்த 4 புலிகள்! - காரணம் தெரியாமல் திணறும் வனத்துறை

எரியூட்டப்படும் புலியின் உடல்கள்
எரியூட்டப்படும் புலியின் உடல்கள்

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் இறந்த நிலையில் இரண்டு புலிகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் பரவல் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில்,பெரும்பாலான நாடுகள் தங்களின் நடவடிக்கைகளை முடக்கிக்கொண்டுள்ளன. மக்களும் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

புலியின் உடல்
புலியின் உடல்

கொரோனாவால் மனிதர்கள் முடங்கிக் கிடப்பதால் காடும், காட்டுயிர்களும் புத்துயிர் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றன. இந்தச் சம்பவம் காட்டுயிர் ஆர்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த ஒரே வாரத்தில் தமிழகத்தில் 3 புலிகளும், தமிழக எல்லையோரக் கேரள மாநிலம் வயநாட்டில் ஒரு புலியும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9 ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் பெண் புலி இரண்டும் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

tiger carcass
tiger carcass

இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாடு குறிச்சியாட் வனப்பகுதியில் நேற்று காலை சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை அறிந்த கேரள வனத்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் நேற்று மதியம் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரல்லா நீரோடை அருகில் புலி ஒன்று இறந்துகிடந்ததைப் பார்த்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

tiger carcass
tiger carcass

முதுமலை கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல், மசினகுடி துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அதில், இறந்தது சுமார் 5 வயது மதிக்கத்தக்க புலி என்பதும், இறந்து 5 நாள்கள் இருக்கலாம் என்பதை உறுதி செய்தனர்.

மேலும், புலியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பாலினம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல் படி உதவி கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்தனர். பின்னர் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது.

tiger carcass
tiger carcass

பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நான்கு புலிகளின் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் காட்டுயிர் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு