Published:Updated:

7 ஆண்டுகளில் 655 புலிகள் இறப்பு... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை... #VikatanInteractive 

புலி
புலி

இந்தியாவில் 2012 முதல் 2018 வரையிலான 7 ஆண்டில் மொத்தம் 655 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) தெரிவித்துள்ளது.

உணவுச் சங்கிலியில் முக்கிய இனமாகக் கருதப்படும் புலிகளைக் கூட்டம் கூட்டமாகக் காண்பது மிகவும் அரிது. புலிகள் ஒரு தனிமை விரும்பி. அதிலும் முக்கியமாக ஆண் புலி. பெரும்பாலும் தனியாகத்தான் வேட்டையாடும். சமீபகாலமாக, தோலுக்காகவும், வியாபாரத்துக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் புலிகளை வேட்டையாடப்படுவது இந்தியாவில் அதிகரித்துள்ளது. உலகிலேயே புலிகள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலிகளில் 60% புலிகள் இந்தியாவில் உள்ளன. 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2016-ம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை (இந்திய அளவிலான) 30 சதவிகிதம் அதிகரித்திருந்தது.

புலி
புலி

2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் 3,890 புலிகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 2,226 புலிகள் உள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி புலிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் வசிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 229 புலிகள் உள்ளன. 2006 ஆம் ஆண்டு கணக்கின்படி வெறும் 76 புலிகள்தான் தமிழகத்தில் இருந்தன. இதுவே 2010-ம் ஆண்டு 163 ஆக அதிகரித்தது. தற்போது 2018-19-ல் தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன. 2018-19-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2967 புலிகள் உள்ளன. இந்தியாவிலேயே மத்தியப் பிரதேசம் (526), கர்நாடகா (524), உத்தரகாண்ட் (442), மகாராஷ்டிரா (312), தமிழ்நாடு (264) ஆகிய மாநிலங்களில்தான் அதிகளவில் புலிகள் உள்ளன.

2019-ம் ஆண்டில் 112 புலிகளும், 493 சிறுத்தைகளும் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புச் சங்கத்தின் (Wildlife Protection Society of India - WPSI) தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 74 புலிகள் இயற்கையாகவும், 38 புலிகள் நோய்வாய்ப்பட்டும், வேட்டையாடப்பட்டும் இறந்துள்ளன. 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 2019 ஆண்டில் 8 புலிகள் அதிகமாக இறந்துள்ளன. உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு வேட்டையாடப்பட்டு இறப்பது வேதனையான ஒன்று.

புலி
புலி
ஆஸ்திரேலிய காட்டுத்தீ - 1851 முதல் 2019 வரை! அழிவுகளும் படிப்பினைகளும்! #VikatanInfographics

இந்தியாவில் 2012 முதல் 2018 வரை புலிகள் அதிகமாக இறக்கும் மாநிலங்களில் மத்தியப்பிரதேசமே முதலிடம். கடந்த 7 வருடங்களில் மத்தியப்பிரதேசத்தில் 142 புலிகளும், தமிழகத்தில் 47 புலிகளும் இறந்துள்ளன. இந்தியா முழுவதும் வேட்டையாடுதல், சாலை விபத்து, நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் கடந்த 2012 முதல் 2018 வரையிலான 7 ஆண்டில் மொத்தம் 655 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) தெரிவித்துள்ளது.

புலிகள் இறப்பு
புலிகள் இறப்பு
Vikatan Infographics

இதில், 336 புலிகள் இயற்கையாகவும், வேட்டையாடுதல் காரணமாக 151 புலிகளும், விபத்து, இனப்பெருக்க சண்டை உள்ளிட்ட காரணங்களினால் 38 புலிகளும், நோயின் காரணமாக 87 புலிகளும், கண்காணிப்புக்கு கீழ் உள்ள பகுதிகளில் 43 புலிகள் என மொத்தம் 655 புலிகள் இறந்துள்ளன. இதில் 2012-லிருந்து ஒவ்வொரு வருடமும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. 2012-ல் 88 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை 2019-ல் 112 ஆக உள்ளது.

புலிகள் இறப்பு
புலிகள் இறப்பு
Vikatan Infographics

புலிகள் ஒருபுறம் அழிந்துகொண்டிருப்பதுபோல், சிறுத்தைகளின் இறப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2019-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இந்தியாவில் 218 சிறுத்தைப் புலிகள் இறந்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு 500 சிறுத்தைகள் இறந்திருக்கின்றன. 2019-ல் 493 சிறுத்தைகள் இறந்துள்ளன. இதில், மகாராஷ்டிரத்தில் மட்டும் 97 சிறுத்தைகள் இறந்துள்ளன. இந்தியாவிலிருந்த பல சிறுத்தை இனங்கள் தற்போது முழுவதுமாகவே அழிந்துவிட்டன.

சிறுத்தை
சிறுத்தை

ஒவ்வொரு வருடமும் சுமார் 500 சிறுத்தை வரை அழிந்துகொண்டே வந்தால் விரைவில் இந்தியாவில் சிறுத்தை இனமே இல்லாமல் போகும் நிலை விரைவில் வரலாம். இந்தியாவில் குறைந்தபட்சம் ஒரு சிறுத்தை, ஒவ்வொரு நாளும் கிணறுகளில் சிக்கியோ, உணவுக்காக அடித்துக்கொண்டோ, வாகனங்களில் அடிபட்டோ இறந்திருக்கிறது. சிறுத்தைகளின் இறப்புக்கு முறையான அரசாங்க தகவல்கள் ஏதும் இல்லை. புலிகளைவிட, சிறுத்தைகள்தான் ஆபத்தான கட்டத்தில் உள்ளன.

இந்தியாவில் புலிகள், சிறுத்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. விலங்கு வேட்டை மற்றும் கடத்தலில் புலிகளின் தோல், உடல் உறுப்புகள் பல இடங்களில் சமீபகாலமாகப் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. முறையான பயிற்சியின்றியும், ஆயுதக் குறைபாடு, வாகனக் குறைபாடு போன்ற காரணங்களால் வனக்காவலர்களால் வேட்டைகளைத் தடுக்க முடியாததும் ஒருவகை விலங்குகளின் அழிவுக்குக் காரணமாக உள்ளது.

புலிகள் இறப்பு
புலிகள் இறப்பு
`போட்டோ பகிர்வதற்கு சாரி; ஆனால், இதைச் சொல்லியே ஆக வேண்டும்!’ - உலகை அதிரவைத்த ஆஸ்திரேலிய காட்டுத்தீ

இந்தியாவில் அழிந்துவரும் புலியைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு 1970-ம் ஆண்டு புலிகள் வேட்டையாடுவதைத் தடை செய்தது. வேட்டையாடுபவர்களுக்கு அபராதத்துடன் கடுமையான சிறைத்தண்டனையும் வழங்கி வருகிறது. மேலும், 1973-ம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்தப் பல சட்டங்கள் இருந்தும், விலங்குகள் வேட்டையாடப்படுவது கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. இந்த நிலை இப்படியே நீடித்தால் புலிகள் மட்டுமின்றி மற்ற காட்டு விலங்களும் விரைவில் முற்றிலும் அழிந்துவிடும். எனவே, வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு