Published:Updated:

தாய்மைக்கு ஏங்கும் `ஹோமோ' பென்குயின்கள் - நெதர்லாந்து விலங்கியல் பூங்காவில் சுவாரஸ்யம்!

பென்குயின்கள் மட்டுமல்ல 130 பறவையினங்களுக்கு அதிகமானவை தன்பாலினத்தோடு உறவு வைத்துக்கொள்ளும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பென்குயின்
பென்குயின் ( Pixabay )

தன்பாலின ஈர்ப்பு பற்றிய விவாதம் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. சட்டம் அனுமதித்த நாடுகளில்கூட சமூகம் அவர்களை ஆதரிக்காத நிலையே இன்னும் தொடர்கிறது. ஆனால், இயற்கை சத்தமில்லாமல் சில விந்தைகளை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு விந்தைதான் நடந்திருக்கிறது நெதர்லாந்திலுள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில்.

Incubating Egg
Incubating Egg
Pixabay

அந்தப் பூங்காவில் தன்பாலின ஈர்ப்பாளராக இரண்டு ஆண் ஆப்பிரிக்க பென்குயின்கள் வசித்து வருகின்றன. அந்தப் பூங்காவில் பல பென்குயின்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் இனப்பெருக்க காலம் நடைபெற்று வருவதால் பெண் பென்குயின்கள் முட்டைகளைத் தங்களது கூட்டில் அடைகாத்து வருகின்றன.

இந்நிலையில் தன்பாலின ஈர்ப்பாளரான இரண்டு ஆண் பென்குயின்களுக்கும் தாய்மையை அனுபவிக்கும் ஆசை வந்திருக்கிறது. இதனால் மற்றோர் ஆண், பெண் பென்குயின் ஜோடிகளின் கூட்டில் இருந்த முட்டைகளில் ஒன்றை அதை அடைகாக்கும் பென்குயின் இல்லாத நேரமாகப் பார்த்து, இரண்டு ஆண் பென்குயின்களும் திருடி வந்துவிட்டனவாம். அதோடு நிற்காமல் அந்த முட்டையை மாறி மாறி அடைகாத்தும் வருகின்றனவாம். இந்தத் தகவலை பூங்கா நிர்வாகமே அறிவித்துள்ளது.

Motherhood
Motherhood
Pixabay

அந்தப் பூங்காவிலுள்ள சில பென்குயின் முட்டைகள் பொரித்து அதிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்துவிட்டன. தற்போது இந்த இரண்டு ஆண் பென்குயின்கள் அடைகாத்துக் கொண்டிருக்கும் முட்டையின் மேல் பூங்கா நிர்வாகமே கண் வைத்துள்ளது. ஒருவேளை அந்த முட்டையில் கரு உருவாகாத (Fertilize) பட்சத்தில், பெற்றோராக வேண்டும் என்ற அந்த இரண்டு ஆண் பென்குயின்களின் கனவு தகர்ந்துபோகவும் வாய்ப்புள்ளது என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Vikatan

பென்குயின்கள் மட்டுமல்ல 130 பறவையினங்களுக்கு அதிகமானவை தன்பாலினத்தோடு உறவு வைத்துக்கொள்ளும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவை உறவு வைத்துக்கொள்வதோடு இல்லாமல், ஒரே கூட்டில் பல ஆண்டுகளுக்கு இணைந்து வசிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதுண்டு.

தன்பாலின ஈர்ப்பு
தன்பாலின ஈர்ப்பு
Pixabay

இதற்கு முன்பு நியூயார்க் நகரம், ஜெர்மனியின் பெர்லின், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலுள்ள விலங்கியல் பூங்காவிலும் இதே போன்று தன்பாலின ஈர்ப்பு ஆண் பென்குயின்கள் முட்டையை அடைகாத்த சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் இரண்டு ஜோடிகள் அடைகாத்த முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வந்தன. பெர்லினில் வசிக்கும் அந்த பென்குயின் ஜோடி மட்டும் இதுவரை தாய்மையை அனுபவிக்காமல் இருக்கின்றனவாம்.