Published:Updated:

ஜல்லிக்கட்டுக்குக் காளைகள் எப்படித் தயாராகின்றன தெரியுமா?!

கருப்பன் | ஜல்லிக்கட்டு
கருப்பன் | ஜல்லிக்கட்டு ( M.Udhaya Sankar @ Vinith )

"ஜல்லிக்கட்டுக்குன்னு வாங்குற கன்றுகளை ரேட்டுப் பேசி முடிச்சு உடனே வீட்டுக்குத் தூக்கிட்டு வந்துட முடியாது. கிடைக்காரங்ககிட்டயே குறிப்பிட்ட நாள் வரைக்கும் விட்டுறனும். காட்டு மேச்சல் வேணும். அஞ்சு மாதமாவது தாய்க்கிட்ட பால் குடிச்சு வளர்ந்தாதான் திடகாத்திரமா இருக்கும்."

"பாண்டியும், கருப்பனும் எனக்கு தம்பிங்க மாதிரி. எவ்வளவு மூர்க்கமா இருந்தாலும் நான் திமில்ல கையை வச்சா அமைதியா குழைஞ்சு நிப்பாய்ங்க. எங்களுக்குள்ள அப்படியொரு உறவு..."- நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் கார்த்திகேயன். உத்தங்குடி கார்த்திக் என்றால் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் அறிவார்கள்.

மாடுபிடி வீரரான கார்த்திகேயன் வளர்க்கும் பாண்டியும் கருப்பனும், நிறைய களம் கண்ட காளைகள். குறிப்பாக கருப்பன் வாடிவாசல் தாண்டிவிட்டால் வீரர்கள் கொஞ்சம் பின்வாங்கித்தான் நிற்பார்கள். களத்தில் நின்று விளையாடும்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என எல்லா ஜல்லிக்கட்டுகளிலும் கலக்கும் கருப்பன் இந்தாண்டு அலங்காநல்லூரில் மட்டும் களமிறங்கவுள்ளது. காரணம் கொரோனா கெடுபிடிகள்.

கருப்பன், கார்த்தியின் கைகளுக்கு வந்தது எப்படி?

கருப்பன் | ஜல்லிக்கட்டு
கருப்பன் | ஜல்லிக்கட்டு

"சின்ன வயசுல இருந்த ஜல்லிக்கட்டு மேல பித்து உண்டு. ஸ்கூலுக்குப் போறப்போ கோயில் மாடு மண்ணைக் குத்திக்கிட்டுக் கிடக்கும். அதைத் தொட்டுப் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கும். எங்க அண்ணன் மணி மாடு பிடிவீரர். எப்படியாவது நாமளும் ஒரு காளையை வாங்கிப்புடனும்ன்னு நினைச்சேன். அமெரிக்கன் காலேஜ்ல டிகிரி சேந்தேன். அங்கே காலையில 8 மணிக்கு கிளாஸ் தொடங்கும். காலையில வீட்டுல சமைக்க மாட்டாங்க. காசு கொடுத்து ஓட்டல்ல சாப்பிடச் சொல்வாங்க. சாப்பிடாம அந்தக் காசை சேத்து வச்சேன். ரெண்டு வருஷம் அப்படிச் சேத்துத்தான் கருப்பனை வாங்குனேன். வழக்கமா, சரியான இணை பாத்து, சொல்லிவச்சு கிடைக்காரங்ககிட்ட வாங்குற காளைதான் ஜல்லிக்கட்டுக்கு சரியா வரும். அவனியாபுரத்துல கிடைக்காரங்க இருக்காங்க. தினமும் அங்கேபோய் கவனிச்சபடியிருந்தேன். பிறந்து பத்து நாள்லயே கருப்பனைப் பாத்துட்டேன். எங்க மணி அண்ணன் ரேட்டுப் பேசி முடிச்சுக் கொடுத்தார்.

எல்லாக் காளைகளையும் ஜல்லிக்கட்டுல போடமுடியாது. புளிக்குளம் மரபுல வர்ற காளைகள்தான் நின்னு விளாடும். அதுவும் கன்றா இருக்கும்போது, ஆளுகளைக் கண்டு ஓடக்கூடாது. அந்தப் பருவத்திலேயே பாய வரனும். உருவமும் வாட்டமா இருக்கனும். முகத்தைப் பாக்கும்போதே தெரிஞ்சிரும். கருப்பன் அப்பவே ஆவேசமா இருப்பான். நாலுகால்ல பாயுவான்.

ஜல்லிக்கட்டுக்குன்னு வாங்குற கன்றுகளை ரேட்டுப் பேசி முடிச்சு உடனே வீட்டுக்குத் தூக்கிட்டு வந்திற முடியாது. கிடைக்காரங்ககிட்டயே குறிப்பிட்ட நாள் வரைக்கும் விட்டுறனும். காட்டு மேச்சல் வேணும். அஞ்சு மாதமாவது தாய்க்கிட்ட பால் குடிச்சு வளர்ந்தாதான் திடகாத்திரமா இருக்கும்.

நான் கருப்பனை ஆறுமாசம் கழித்து தூக்கிட்டு வந்தேன். முதல்முறை பார்த்தப்பவே 'கருப்பன்'ங்கிற பேரு மனசுக்குள்ள வந்திருச்சு. வந்தநாள்ல இருந்தே கருப்பன்தான் உலகம். எப்பவும் அதுகூடவே இருப்பேன்.

கருப்பன் | ஜல்லிக்கட்டு
கருப்பன் | ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு மாடுகளைப் பழக்குறது ஒரு கலை. முதல்ல நல்லா மேச்சல் பழக்குவோம். காடு, கரைன்னு ஓட்டிக்கிட்டுப் போயி புல்லுக் கடிக்க வைப்போம். தரமான வைக்கோல் வைப்போம். பாசித்தூசி, உளுந்தந்தூசி கொடுப்போம். இதெல்லாம் தசையை வலுப்படுத்தும். தினமும் கைநிறைய பேரிச்சம்பழம் கொடுப்போம். நீச்சத்தண்ணியில கலந்து அரைக்கிலோ பருத்திவிதை வைப்போம். ஜல்லிக்கட்டுக்கு நெருக்கமா வந்தா அது ஒரு கிலோவாயிரும். பருத்தி விதை காலுக்கு நல்லா வலுக் கொடுக்கும். கழுத்துல கறி வைக்கும். வாரத்துக்கு ஒருமுறை கம்மாய்ல விட்டு நீச்சல் பழக்குவோம். தினமும் அதிகாலை எழுந்து ரெண்டு கிலோ மீட்டர் நடக்க வைப்போம்.

மார்கழி ஒண்ணுல இருந்து பயிற்சியை தீவிரமாக்கிருவோம். ஒரு திடல்ல வாடிவாசல் போட்ருவோம். அதுல இருந்து மாட்டை வெளியேத்தி இளவட்டப் பசங்களைப் பிடிக்க வைப்போம். மாட்டுல வடம் போட்டு ஒம்போது பேரை விளையாட விடுவோம். அதுக்குப்பேரு வடமஞ்சுருட்டு. இது ரெண்டும் காளைக்குப் பழகிருச்சுன்னா ஜல்லிக்கட்டு களத்துல அஞ்சாம நிக்கும். சிலபேரு, கொம்பை கூரா செதுக்கிவிடுவாங்க. நாங்க சந்தனம் பூசுறதைத்தாண்டி வேற எதுக்காகவும் கொம்பைத் தொடமாட்டோம். மாடே மண்ணைக் குத்திக்கிளறி இயற்கையா கொம்பைக் கூராக்கிக்கும்.

ஜல்லிக்கட்டுக்குப் போறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் நிறுத்திருவோம். மாட்டைத் தொட்டு தொந்தரவு செய்யமாட்டோம். நல்லா தீணி மட்டும் வைப்போம். முன்னல்லாம் ஜல்லிக்கட்டு நடக்கிறன்னிக்கு காலையிலதான் நடக்குற இடத்துக்குப் போவோம். இப்போ முதல்நாள் இரவே போகவேண்டியிருக்கு. கிளம்புறன்னிக்கு காலையில காளையைக் குளிப்பாட்டி ஜோடிப்போம். கொம்புக்கு மாலை போட்டு சந்தனம் பூசுவோம். கழுத்துக்கு துண்டு சுத்துவோம். அன்னைக்கு வீடே திருவிழாக் கோலமாயிரும்.

சுத்துமாடு, போக்குமாடு, விளையாட்டு மாடுன்னு ஜல்லிக்கட்டு மாடுகள்ல மூணு வகையிருக்கு. சில காளைங்க களத்துல சுத்துப்போடும். சில மாடுங்க எத்தனை பேரு நின்னாலும் அத்தனை பேருக்கும் போக்குக்காட்டிட்டுப் போயிரும். சில மாடுங்க களத்துல நின்னு விளையாடும். ஒவ்வொரு காளைக்கும் தகுந்தமாதிரி பரிசு கொடுப்பாங்க.

கருப்பன் | ஜல்லிக்கட்டு
கருப்பன் | ஜல்லிக்கட்டு

களத்துல மாட்டுக்கு, மாடு பிடிக்கிறவங்களுக்குன்னு நிறைய பரிசோதனைகள் இருக்கு. வாடிவாசலுக்குப் பின்னாடி இந்தப் பரிசோதனைகள் நடக்கும். காளைக்கு மது கொடுத்திருக்காங்களான்னு சோதிப்பாங்க. கொம்பு ஷார்ப்பா இருந்தா தேய்ச்சு விடுவாங்க. மாட்டோட உயரத்தை செக் பண்ணுவாங்க. தஞ்சாவூர், மணப்பாறை பக்கமெல்லாம் நாட்டுக்காளைங்க கொஞ்சம் உயரம் குறைவா இருக்கும். ஆனா, இப்போ உயரம் குறைவா இருக்கிற காளைகளை ஜல்லிக்கட்டுல சேர்க்கிறதில்லை. அதனால அந்த இனங்கள்லாம் அழியுற நிலையில இருக்குது.

இத்தனை சோதனைகளைக் கடந்துதான் டோக்கன் வாங்கவே முடியும். டோக்கன்ல என்ன நம்பர் இருக்கோ அந்த வரிசைப்படி காளைகளை அவுத்து விடலாம். அவுத்து விட்டு விளையாண்ட பிறகு கலெக்ஷன் பாய்ண்டுன்னு ஒரு இடம் இருக்கும். அங்கே போய் கயிரு போட்டு பிடிச்சிட்டு வீட்டுக்கு ஓட்டியாருவோம்..." - கருப்பனை வாங்கிய கதையையும் ஜல்லிக்கட்டு நடைமுறைகளையும் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார் கார்த்தி.

மாடுபிடி வீரரான உத்தங்குடி கார்த்திகேயன் வளர்க்கும் பாண்டியும் கருப்பனும்... களம் நிறைய கண்ட காளைகள். இது ஜல்லிக்கட்டு நாயகன் கருப்பனின் கதை! Read More >> http://bit.ly/38EWGVu #Jallikattu #Pongal

Posted by Ananda Vikatan on Wednesday, January 13, 2021

கருப்பன் முதன்முதலில் களமிறங்கியது மணப்பாறை ஜல்லிக்கட்டில். முதல் ஜல்லிக்கட்டிலேயே வீரர்களுக்குத் தண்ணி காட்டியது. அண்டாவும் வெள்ளிக்காசும் பரிசு வாங்கியது.

"கருப்பனை நாலு பல்லுல (நாலு வயசுல) ஜல்லிக்கட்டுல அணைச்சோம். இன்னைக்கு வரைக்கும் பிடிகொடுக்கலே. எந்தக் களமா இருந்தாலும் நின்னு விளையாடும். ஏகப்பட்ட பரிசுகள் வாங்கியிருக்கு. கொஞ்சநாளைக்கு முன்னால காரைக்குடியிலருந்து இந்தப் பாண்டிப் பயலை புடிச்சாந்தோம். அவனும் நல்லா விளையாடுவான். ஜம்ப் பண்ணி பின்னாடி உதைக்கவும் செய்வான். பாண்டியை இந்த வருஷம் எங்கேயும் அணைக்கலே.

கருப்பன் | ஜல்லிக்கட்டு
கருப்பன் | ஜல்லிக்கட்டு

வழக்கமா அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மூணு இடத்துலயும் காளை, வீரர்கள் பதிவு தனித்தனியா மூணு நாள் நடக்கும். இப்போ கொரோனாவைச் சொல்லி ஒரே நாள்ல பதிவை முடிச்சுட்டாங்க. ஒரு இடத்துல ஒரு காளையை மட்டும்தான் பதிவு செய்ய முடிஞ்சுது.

அலங்காநல்லூர்ல கருப்பன் இறங்குறான். பாலமேட்டுலயும் அவனியாபுரத்துலயும் மாடு பிடிக்க நான் இறங்குறேன். பாண்டிக்கு இந்தமுறை ஓய்வு..." என்கிறார் கார்த்தி.

கார்த்தி எம்.காம் படித்திருக்கிறார். ஒரு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். அவரின் வாழ்க்கை முழுதும் காளைகளும் ஜல்லிக்கட்டுமே நிறைந்திருக்கிறது!
அடுத்த கட்டுரைக்கு