Published:Updated:

மூடநம்பிக்கைகளால் பலியாகும் முள் எலிகள்; அழிவுப்பாதைக்கு சென்றது எப்படி?

மருந்து தயாரிப்பு, ஆண்மைக்குறைவு போன்ற பல்வேறு காரணங்களைச் சொல்லி, அரிய வகை பாலூட்டி உயிரினமான முள் எலிகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுவருவதாக வன உயிரின ஆர்வலர்கள் புகார் சொல்கிறார்கள்.

அக்டோபர் 4 ஆன இன்று உலக விலங்குகள் தினம்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், இந்த உலக வன விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பின்னர், விலங்குகள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டுவருகிறது. அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள்மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார். அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தார். இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன விலங்குகள். அதைப் புரிந்துகொண்டு, மனிதனும் விலங்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பது முக்கியம். உதாரணத்துக்கு மெட்ராஸ் ஹெட்ஜ்ஹாக் (Madras hedgehog) என்று அழைக்கப்படும் முள் எலி வகையறாக்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.

Representational Image
Representational Image
Image from Pixabay

நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, கோவை, திருப்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் முள் எலிகள் காணப்படுகின்றன. மருந்து தயாரிப்பு, ஆண்மைக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களைச் சொல்லி, அரிய வகை பாலூட்டி உயிரினமான முள் எலிகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுவருவதாக வன உயிரின ஆர்வலர்கள் புகார் சொல்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு உயிரினங்கள் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கணக்கில் கொண்டு, அபாய கட்டத்தில் உள்ளவை என்கிற பட்டியலில் உள்ளன. ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெறாமல் பல உயிரினங்கள் உள்ளன. இயற்கை சூழலியல் மற்றும் உயிர்ச்சங்கிலி அமைப்பில் இந்தவகை உயிரினங்களின் முக்கியத்துவம் வெளிப்படாமல் உள்ளது. சாதாரண எலியின் அளவில் இருந்தாலும் இதைத் தொட்டால் முள் பந்துபோன்று தன் உடலை சுருக்கிக்கொள்ளும். இதன் மண்டை ஒடு, கொழுப்பு, முற்கள், எலும்புகள் போன்றவை மருத்துவ பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது ஒரே நேரத்தில் பல குட்டிகளை ஈனும். இதையே ஒரு காரணமாகச் சொல்லி, முள் எலி கறியைச் சாப்பிட்டால், உடல்உறவு நேரம் அதிகரிக்கும் என்று சிலர் வதந்தியைப் பரப்பி வருவதால், அதைத் தேடித்தேடி வேட்டையாடிவருகிறார்கள் சிலர். ஒரு முள் எலியைப் பிடித்து வந்து யாராவது கொடுத்தால், ரூ.500 வரை தருகிறார்களாம் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள். இப்படியாகத் தமிழகத்தில் தினம் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் முள் எலிகள் கொல்லப்படுவதாக வன ஆர்வலர்கள் அதிர்சசி தகவல் சொல்கிறார்கள்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காணப்படும் முள் எலி, பாலூட்டி வகையறாக்களில் தனிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதை ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஹெட்ஜ்ஹாக் என்று அழைக்கிறார்கள். முள்ளெலியின் விஞ்ஞானப் பெயர் பெராயெக்கினஸ் நியூடிவென்றிஸ் (Paraechinus nudiventris) என்கிறார்கள். காது சின்னது. வால் கிடையாது. 1850-ம் ஆண்டுவாக்கில் ஆராய்ச்சியாளர்கள் கண்களில் பட்டதாம். இதேபோல், காது கொஞ்சம் பெரியதாக உள்ள முள் எலி வட இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் காணப்படுகிறது. பகலில் தூங்கும். இரவில்தான் பூச்சி வேட்டைக்கு கிளம்பிப்போகும். மனிதர்களுக்கு முள் எலிகளால் தீங்கு ஏதும் இல்லை. இதை எதிரிகள் சாப்பிட வரும்போது தற்காப்புக்காகத் தன் உடம்பில் உள்ள முற்களை விரித்து ஒரு பந்து போல உருமாற்றும்.

Representational Image
Representational Image
Image from Pixabay
மீண்டும் உயிர்பெறுகின்றனவா மாமூத்கள்?! காலநிலை மாற்றத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?!

இதற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து டாக்டர் மனோகரன், வனத்துறையின் கூடுதல் இயக்குநர் மற்றும் வனவிலங்குகள மருத்துவ அலுவலர் (ஓய்வு) கூறுகையில்.

``முள் எலி தைலம், முள் எலி கறி... இதையெல்லாம் கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. மக்களின் அறியாமையும், மூடநம்பிக்கையும் நமது சூழலியலையே சிதைக்கிறது என்பதற்கு உதாரணம்தான் முள் எலி. காடுகளையொட்டி விவசாய நிலங்கள் இருக்கும். இந்தப் பகுதியை பப்பர் என்று அழைப்போம். வறட்சியான அந்தப் பகுதியில் முள் எலி வாழும். விவசாயிகளின் நண்பன். விவசாயப் பொருள்களைச் சாப்பிடாது. ஆனால், விவசாயப் பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளை சாப்பிடும். ஒரு நாளைக்கு 250 முதல் 300 பூச்சிகள் வரை சாப்பிடும். செயற்கை உரங்கள் இல்லாமல் பூச்சிகளை ஒழிக்க இயற்கை நமக்கு கொடுத்த வரங்களில் முள் எலியும் ஒன்று. இதன் எச்சம் மிகவும் சத்துள்ள உரம். மண் அரிப்பைத் தடுக்கும். மண்ணைத் தோண்டும் குணம் உடையது என்பதால், நீர் மேலாண்மையையும் பாதுகாக்கிறது. இதுபோன்ற எத்தனையோ பாசிட்டிவ் விஷயங்கள் இருப்பதை விட்டு, மூடநம்பிக்கை களுக்காக முள் எலியைக் கொல்லுவது என்பது கண்டிக்கத் தக்கது. முள் எலியின் பயனுள்ள செயல்பாடுகளை மக்களிடத்தில் கொண்டு சென்று புரிய வைக்க வேண்டும். வேறு என்ன சொல்வது?'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல்லை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் முன்னாள் விலங்கியல் பேராசிரியரும் நெல்லை மண்டல கௌரவ வன உயிரின காப்பாளருமான ஆல்பர்ட் ராஜேந்திரன் கூறும்போது, ``தமிழகத்தில் முன்பெல்லாம் வறண்ட காடுகளில் இது அதிகம் தென்பட்டது. இப்போது குறைந்து வருகிறது. காரணம், சட்டவிரோதமாக முள் எலியைப் பிடித்து விற்கிறார்கள். நகர்ப்புறம் விரிவடைந்து அதன் வாழ்விடம் சுருங்குவதும் முள் எலி அழிவுக்கு ஒரு காரணம்.

ஆல்பர்ட் ராஜேந்திரன்
ஆல்பர்ட் ராஜேந்திரன்

ஸ்விட்சர்லாந்து நாட்டை தலைமையமாகக் கொண்டு செயல்படும் உலக இயற்கை பாதுகாப்புக் கழகம் (IUCN - International union for conservation of Nature), தரப்பில் முள் எலியை மனிதர்களால் அழிந்து போகிற நிலையில் உள்ளவை என்கிற பட்டியலில் வைத்திருந்தனர். ஆனால், பின்னர் சாதாரண நிலைப்பாட்டுக்கு மாற்றிவிட்டனர். இனி, மீண்டும் அதை முன்பிருந்த பட்டியலில் இடம்பெற வைக்க வேண்டும். அதேபோல் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் அட்டவணை 1 என்கிற பிரிவில் மெட்ராஸ் ஹெட்ஜ்ஹாக் என்கிற வகை முள் எலியைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான், முள் எலியை வேட்டையாடுகிறவர்கள் மீது கடுமையான வனச்சட்டத்தைப் பயன்படுத்த முடியும். அப்படிச் செய்தால்தான், முள் எலிகளை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்'' என்றார்.

சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர் டாக்டர் இரா.பாஸ்கரிடம் மருத்துவக்காரணங்களுக்காக முள் எலிகள் அழிக்கப்படுவது குறித்து கேட்டபோது, ``தமிழகத்தில் பாரம்பர்ய மருத்துவமான சித்த மருத்துவத்தில் மூலிகை, தாதுப்பொருள்கள், உயிரினப் பொருள்கள் போன்றவற்றில் இருந்து மருந்துகள் தயாரிக்கும் முறையை சித்தர்கள் செய்துவந்தனர். அவர்கள் சொன்ன மருத்துவக்குறிப்பு அடிப்படையில், உயிரினப் பொருள்களான மான் கொம்பு பற்பம், ஆமை லேகியம், மயிலிறகு சூரணம், ஆமை ஓட்டு பற்பம், நத்தை பற்பம், முள் எலி தைலம் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவர் இரா.பாஸ்கர்
மருத்துவர் இரா.பாஸ்கர்

எலிகளின் வகைகளாக சித்த மருத்துவத்தில் 18 வகைகள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒருவகைதான் முள் எலி. இதிலிருந்து தயாரிக்கப்படும் முள் எலி தைலம் தமிழகத்தில் பாரம்பர்யமாக பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டு மக்களால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளா, நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற இடங்களில் இன்றும் சித்த வர்ம மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுவாசம் சம்பந்தமான பிரச்னைகளான சளி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும், மேலும் பெரியவர்களுக்கு சுவாச சம்பந்தமான நாடிப் பிரச்னைகள் மற்றும் அதன்மூலம் ஏற்படும் முதுகுத் தண்டு வாத நோய்களுக்கு முக்கியமாகப் பயன்படுகிறது. இதை ஆண்மைக் குறைவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் முழுக்க முழுக்க மூடநம்பிக்கை. அதுபற்றி எங்களுக்குத் தெரியாது'' என்கிறார்.

தேனியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் எஸ்.ஆனந்திடம் கேட்டபோது,

``முள் எலிகளை பனை மரங்கள் உள்ள இடங்களில் அதிகம் பார்க்கலாம். மக்கள் வாழும் பகுதிக்கும் விவசாய பகுதிக்கும் இடைப்பட்ட காடுகளையொட்டியுள்ள ஏரியாக்களில் குறிப்பாக... மின்கம்பங்களில் கீழ் இரவு நேரத்தில் பூச்சியை சாப்பிட முள் எலிகள் வரும். இத்தேரிக்காடுகள் என்று சொல்வோமே... கோடைக்காலத்தில் நடைவழிப்பாதை, குளிர்காலத்தில் ஒடை... என்று இருகாலத்துக்கும் உகந்த பகுதிகள். அங்கும் முள் எலிகள் நடமாட்டம் இருக்கும். இப்போது, பனைமரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இத்தேரிக்காடுகளும் உருமாறிவிட்டன. இயற்கைச் சூழல் அழிக்கப்பட்டுவிட்டதால், அதனுடன் சார்ந்த முள் எலி போன்ற சில உயிரினங்கள் மறைந்து வருகின்றன.

Madras hedgehog
Madras hedgehog
S.M. Zakkaria
அழிவின் விளிம்பில் தேவாங்குகள்... 
ஆதரித்துக் காப்பாற்றுமா அரசு?

முள் எலியின் தோலை எடுத்து வீட்டில் புகை போட்டால் பலவித நன்மைகள் ஏற்படும், அதன் தோலை வீட்டில் வைத்திருந்தால் ஐஸ்வர்யம் வந்துசேரும், ஆண்மைத்தன்மையை வலுப்படுத்தும் என்றெல்லாம் ஆசைகாட்டி ஏமாற்றுகிறார்கள். அவை எல்லாமும் பொய், வதந்திகள் என்பதை மக்கள் உணர்ந்து திருந்தினால்தான், முள் எலியை வேட்டையாடுகிறவர்கள் ஒழிவார்கள்'' என்றார்.

முள் எலியை வேட்டையாடுகிறவர்களைக் கடுமையாகத் தண்டிக்க, போதுமான வன உயரின பாதுகாப்புச் சட்டம் இல்லை என்று வன ஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள். இனியாவது, அரசு தலையிட்டு கடுமையான சட்டத்தை இயற்றி, அழிந்துவரும் முள் எலியைப் பாதுகாக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு