Published:Updated:

`காட்டு யானைக்கும் கலீமுக்கும் இடையே நடந்த தாக்குதல்!' - அரிசி ராஜா பிடிபட்ட நிமிடங்கள்

பொள்ளாச்சி அருகே அரிசி ராஜா என்றழைக்கப்படும் காட்டு யானை மயக்க ஊசி போட்டுப் பிடிக்கப்பட்டது.

அரிசிராஜா
அரிசிராஜா

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அர்த்தநாரி பாளையம் பகுதியில் `அரிசிராஜா' என்ற காட்டு யானை விவசாய நிலங்களுக்கும் மனித உயிர்களுக்கும் சேதம் விளைவிப்பதாக அந்தப் பகுதி மக்கள் புகார் எழுப்பினர்.

அரிசிராஜா
அரிசிராஜா

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி அரிசி ராஜாவைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால், நான்கு நாள்களாகியும் அந்த யானையை பிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், 4 பேர் அடங்கிய மருத்துவர் குழு யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், அர்த்தநாரிபாளையம் அருகே மூலக்காடு பகுதியில் சந்திரசேகர் என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு அந்த யானை கண்டறியப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் மருத்துவக் குழுவுடன் அந்த இடத்துக்கு விரைந்து வந்து, இரவு சுமார் 10.30 மணியளவில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். அந்தப் பதற்றத்தில் சிறிது தூரத்துக்கு ஓடிய யானை, ஆடியூர் அருகே ஒரு பள்ளத்தில் மறைந்துவிட்டது.

அரிசிராஜா
அரிசிராஜா

பிறகு, கும்கி கலீம் உதவியுடன் காட்டு யானை வெளியே இழுத்து வரப்பட்டது. ஆனால், காட்டு யானை பயங்கர ஆக்ரோஷத்துடன் இருந்தது. வயதில் மிகவும் முதிர்ந்த கலீமை, சுமார் 18 வயது மதிக்கத்தக்க அரிசி ராஜா தாக்கிவிட்டது. இதில், கலீமுக்கு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டது.

நான்கு நாள்களாகத் தண்ணி காட்டும் `அரிசி ராஜா’!- தொடரும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை

தான் `கில்லி' என்பதை நிரூபிக்கும் வகையில், பதிலுக்கு கலீம் தனது தந்தம் மூலம் அரிசி ராஜாவை ஒரே தூக்கு தூக்கிவிட்டது. மேலும், கபில்தேவ் என்ற கும்கி யானையும் அரிசி ராஜாவுக்கு சிம்மசொப்பனமாக நின்றது. இதனால், காலையில் மிகவும் எளிதாக அரசி ராஜா லாரியில் ஏற்றப்பட்டுவிட்டது.

அரிசிராஜா
அரிசிராஜா

அரிசி ராஜா யானை, டாப்ஸ்லிப் வரகழியாறு பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட உள்ளது. அங்கு, அதற்கு வளர்ப்பு யானைக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், இரவு பகலாக உணவு, உறக்கம் இல்லாமல் உழைத்து யானையைப் பிடித்த வனத்துறை களப்பணியாளர்களுக்கு அந்த கிராம மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.