Published:Updated:

நியூயார்க்கில் புலிக்கு கொரோனா தொற்று எதிரொலி… எப்படி இருக்கிறது வண்டலூர் பூங்கா?

புலி
புலி

மனித நடமாட்டம் அதிகம் இருக்கும்போது, விலங்குகள் அதன் இயல்பான தன்மையை இழந்துவிடும். ஆனால், கடந்த இரண்டு வாரமாக மனிதர்கள் அனுமதிக்கப்படாததால், விலங்குகள் சகவிலங்குகளுடன் விளையாடவும், மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவும் தொடங்கியிருக்கின்றன.

நியூயார்க் நகரில் உள்ள மிருகக் காட்சி சாலையில், 4 வயது மலேசியப் பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் விலங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு கொரோனா வராது என்ற நிலையில், புலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, விலங்குகளிடம் நெருங்கிப் பழகுபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் நிலை என்ன என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

இதுகுறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விலங்குகளைப் பராமரிக்க, பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே வர அனுமதிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பான கையுறை, முகக்கவசம் அணிந்த பின்பு நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலில் கால்கள் நனைக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

விலங்குகளை அடைத்துவைக்கப் பயன்படும் கதவு, பூட்டு போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிக்கிறார்கள். விலங்குகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகளும் பொட்டாசியம் பர்மாங்கனேட்டில் சுத்தம் செய்த பிறகே கொடுக்கப்படுகிறது. பூங்காவிற்குத் தேவையான மருந்து தெளிப்பான்களையும், தெர்மா மீட்டரையும் வாங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் என வெளிநபர்கள் யாருக்கும் உள்ளே வர அனுமதி கிடையாது. ஆய்வுசெய்ய வரும் அதிகாரிகள் கூட கை, கால்களைக் கழுவிய பின்னர், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த பிறகே ஆய்வுசெய்ய முடியும். மனித நடமாட்டம் அதிகம் இருக்கும்போது விலங்குகள் அதன் இயல்பான தன்மையை இழந்து மனிதர்களுடன் பழகும். ஆனால், கடந்த இரண்டு வாரமாக மனிதர்கள் அனுமதிக்கப்படாததால், விலங்குகள் சகவிலங்குகளுடன் விளையாடவும், மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கவும் தொடங்கியிருக்கின்றன.

சிம்பன்சி குரங்குகள், மனிதர்கள் ஏதாவது கொடுப்பார்கள் என எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும். தற்போது அது, மற்ற சிம்பன்சி குரங்குகளுடன் மகிழ்ச்சியாக விளையாடத் தொடங்கிவிட்டன. ஆப்ரிக்கன் பஃபூன் குரங்குகளும் வெளியில் வந்து சேட்டை செய்யத் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்க மிருகக் காட்சி சாலையில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்திவருகிறோம்” என்கிறார்.

வெள்ளைப் புலி
வெள்ளைப் புலி

“கொரோனா வைரஸ் பற்றிய முழுமையான தகவல்கள் வரும்வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப்பிராணிகளிடமிருந்து ஒதுங்கி இருங்கள்” என அமெரிக்க வேளாண்மைத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இந்த நிலையில், மிருகங்களையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்ற தகவல் உலக அளவில் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு