Published:Updated:

குதிரையிலிருந்து ஹென்ரா, வவ்வாலிலிருந்து கொரோனா... வைரஸ்களின் திகில் ஃப்ளாஷ்பேக்!

வைரஸ்
வைரஸ்

சின்னம்மைக்கும் போலியோ வைரஸுக்கும் மருந்து கண்டுபிடித்த நமக்கு கொரோனா ஏன் சவாலாக இருக்கிறது?

"நோய்த்தொற்றால் ஏற்படும் மரணம் உங்களுக்கு பயங்கரமானதாகவும் அச்சமூட்டுவதாகவும் தெரியலாம். ஆனால், அது உண்மையில் ஒரு சிங்கம் காட்டு மாட்டை வேட்டையாடுவது போல, ஒரு ஆந்தை எலியை வேட்டையாடுவது போல இயற்கையானது."
- டேவிட் குவாமென்

கண்களுக்குத் தெரியாத கொரோனா வைரஸுக்குப் பயந்து அனைவரும் அவரவர் வீடுகளில் ஒடுங்கியிருக்கிறோம். ஜுராசிக் பார்க் படங்களில் வரும் டி-ரெக்ஸ் டைனோசர்கள் மனிதர்களை வேட்டையாடக் காத்துக்கொண்டிருப்பது போல அங்கே வெளியே வைரஸ்கள் பெரும்பசியுடன் கண்ணுக்குப் புலப்படாத இடங்களில் காத்துக்கிடக்கின்றன. ஒரே வித்தியாசம் டி-ரெக்ஸ்கள். நமது உடலில் கொரோனாவை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் இல்லையென்றால், நமக்கு இந்த லாக்டெளன் மட்டுமே நிரந்தரத் தீர்வு.

உலகிற்கு முன்னோடியாக விளங்குமா இங்கிலாந்து? நாளை முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனை

இது உலகம் எதிர்கொள்ளும் முதல் வைரஸ் அல்ல. இதுவரை உலகம் சந்தித்த பிற வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா அத்தனை கொடியதும் இல்லை. இருந்தும், இதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தேடுவதில் ஏன் இத்தனை தாமதம்?அதற்கு நோய்த்தொற்று எப்படி உருவாகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சின்னம்மையும் நோய்த்தொற்றுதான்; நிபா வைரஸும் நோய்த்தொற்றுதான். ஆனால், சின்னம்மைக்கு மருந்து கண்டுபிடித்த நம்மால் ஏன் நிபா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை? சின்னம்மை வைரஸ்களால் மனிதர்களில் மட்டுமே வாழ முடியும். மனிதர்களைத் தவிர அதற்கு வேறு போக்கிடம் கிடையாது. ஆனால் நிபா அப்படியில்லை. அது மனிதர்களிடம் தொற்றுவதற்கு முன்பு பறவைகளிடமும் பன்றிகளிடமும் காணப்பட்டன.

21-ம் நூற்றாண்டில் மனிதர்கள் அதிகம் எதிர்கொள்ளும் சவாலாக ஜூனோசஸ் இருக்கும்

அதற்கு முன்பு, அவை வௌவால்களின் சினைப்பை, கை, கால்கள், ரெக்கை என அதன் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரங்கம் போல சேமிக்கப்பட்டிருந்தது. பிற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றும் இவைதான் ஜூனோசஸ்.

1994ல் ஹென்ரா வைரஸ் ஆஸ்திரேலியாவின் குதிரைகளில் கண்டறியப்பட்டபோது, அந்த வைரஸ் எப்படிப் பரவியது எனக் கண்டறிய, வைரஸ் வேட்டையில் ஈடுபட்டிருந்த சூழலியல் ஆய்வாளர் ஃபீல்ட், ”21-ம் நூற்றாண்டில் மனிதர்கள் அதிகம் எதிர்கொள்ளும் சவாலாக ஜூனோசஸ் இருக்கும்” எனக் குறிப்பிட்டார். அவர் சொன்னதுபோலவே, இதே நூற்றாண்டில்தான் நாம் சார்ஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் முதல் தற்போதைய கொரோனா தொற்று வரை பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.

ஹென்ரா வைரஸ் பரவியபோது என்ன நிகழ்ந்தது?

குதிரை
குதிரை

குதிரைப் பந்தயத்துக்கு பெயர்போன நாடு ஆஸ்திரேலியா. இங்கே வீடுகளில் நாய், பூனைகள் வளர்க்கப்படுவது போல அங்கே கொட்டகைகளில் குதிரைகள் வளர்க்கப்படும். குதிரைப் பந்தயத்தை ஒட்டிதான் ஆஸ்திரேலியாவின் பெரும் பொருளாதாரம் இயங்கிவருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவின் குதிரை உரிமையாளர் ஒருவரது குதிரை ஒன்றில்தான் ஹென்ரா வைரஸின் அறிகுறிகள் முதலில் தெரிய ஆரம்பித்தன. ஆனால், அது வைரஸ் தொற்றுதான் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அந்தக் குதிரை கருவுற்றிருந்ததால், அதனால் ஏற்பட்ட அயர்ச்சி என நினைத்தார்கள். ஆனால், நாளுக்குநாள் குதிரையின் இயல்பில் மாற்றம் தெரியத் தொடங்கியது, அதன் முகம் வீங்கியது, கணைத்துக்கொண்டே இருந்தது, அவ்வப்போது தண்ணீர்த்தொட்டிக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு ஆக்ரோஷமாகத் தலையை ஆட்டியது. வேறு ஏதும் நோய்த்தொற்றா எனக் கண்டுபிடிப்பதற்காக மருத்துவரை அழைத்துப் பரிசோதனை செய்தார்கள். அவர் பரிசோதனை செய்து முடிவுகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்தக் குதிரை இறந்துவிட்டது. அந்த ஒரு குதிரைக்கு அடுத்து, அந்தக் கொட்டகையில் இருந்த பெரும்பாலான குதிரைகள் இதே அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கின. அப்போதுதான், இது தனியொரு குதிரைக்கு வந்த நோயில்லை... அனைத்து குதிரைகளுக்கும் ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்று எனக் கண்டுபிடித்தார்கள். சில நாள்களில் அந்தக் குதிரைகளைப் பராமரித்துவந்த அதன் உரிமையாளரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், இருமல், நாவறட்சி, மூச்சுவிடுவதில் பிரச்னை, கட்டுக்கடங்காத உடல் வியர்வை என உயிருக்குப் போராடினார். என்ன சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்துபோனார்.

ஆனால் அந்த வைரஸ், வௌவால்களைப் பராமரித்தவர்களுக்குத் தொற்றவில்லை.

அவருடைய உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பிள்களிலும் இறந்த குதிரைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பிள்களிலும் ஒரே மாதிரியான வைரஸ் தடயங்கள் தென்பட்டன.

அந்தக் குதிரையிலிருந்துதான் அவருக்குத் தொற்றியது எனத் தெரியவந்தது. ஆனால், குதிரைக்கு எப்படி அந்தக் கிருமி தொற்றியது? அவை உண்ணும் உணவு, குடிக்கும் நீரில் எதுவும் பாதிப்புகள் தெரியவில்லை. இல்லையென்றால் பறவைகள் போன்றவற்றிலிருந்து தூவப்பட்டதா? என ஆய்வு மேற்கொண்டார் ஃபீல்ட்.

ஆஸ்திரேலியாவின் விலங்குகள் மற்றும் பறவைகள் புகலிடங்களில் அதற்கான தடயத்தைத் தேடினார். அவற்றில் எதிலுமே அந்தக் குதிரையில் இருந்த வைரஸ் தென்படவில்லை.

ஹென்ரா வைரஸ்
ஹென்ரா வைரஸ்

இறுதியாக, முதலில் இறந்த குதிரை இளைப்பாறிய இடத்தில் அதற்கான விடை கிடைத்தது. அடர்ந்த மரங்களில் நள்ளிரவுகளில் கூடாரமிடும் ஃப்ளையிங் ஃபாக்ஸ் ரக வௌவால்களிடமிருந்துதான் குதிரைக்கு அந்தக் கிருமி பரவியிருந்தது.

அதேசமயம், ஆஸ்திரேலியாவில் விலங்குகள் பராமரிப்பாளர்களிடம் இருந்த வௌவால்களை ஆய்வு செய்ததில், அதிலும் ஹென்ரா இருப்பதற்கான தடயம் தென்பட்டது. ஆனால், அந்த வைரஸ் வௌவால்களைப் பராமரித்தவர்களுக்குத் தொற்றவில்லை.

இந்த முரண்தான் அந்த வைரஸின் இயல்பை அறிந்துகொள்ளவும் உதவியது. வைரஸ்களுக்கு மனிதர்களிடம் பரவ இடையூக்கிகள் (Amplifiers) தேவை . அதாவது, வௌவால்களில் சேர்ந்து கிடக்கும் வைரஸ்கள் குதிரை, பன்றி, பறவைகள் போன்ற இடையூக்கிகளுக்குப் பரவுகின்றன. அப்படிப் பரவும்போது, அவை அந்த இடையூக்கிகளையும் பாதிக்கலாம் அல்லது பாதிக்காமலும் போகலாம். ஆனால், மனித உடலுக்குள் நுழைவதற்கு ஏற்ற வகையில் அவை தங்களை விலங்குகளின் உடலுக்குள் தகவமைத்துக்கொள்கின்றன. அதுவும் மனிதர்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு… அதிர்ஷ்டவசமாக கொரோனா போன்ற அதிவேகப் பரவுதல் தன்மை ஹென்ராவுக்கு இல்லை. பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மிகமிக நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களை மட்டுமே ஹென்ரா தாக்கியது. ஆனால், ஹென்ரா வைரஸ் குதிரைகளை ஏன் தாக்க வேண்டும்? ஆஸ்திரேலியா, கங்காருகளுக்குப் பெயர்போனதுதானே... அவற்றை ஏன் தாக்கவில்லை?

அதற்கு முன்பு வௌவால்களில்தானே இருந்தது... அவற்றை ஏன் தாக்கவில்லை? ஃப்ளையிங் ஃபாக்ஸ் ரக வௌவால்களும் கங்காருகளும் ஆஸ்திரேலியாவில் இருந்ததற்கான தடயங்கள் 260 ஆண்டுக்காலங்களுக்கு முன்பிருந்து கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் குதிரைகள், ஐரோப்பியர்களால் கப்பல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வணிகத்துக்காக எடுத்து வரப்பட்டவை. கங்காருகளும் வௌவால்களும் அந்த மண்ணின் பூர்வீக விலங்கினங்களாக இருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதாவது, குதிரைகள் வரும் வரை 260 ஆண்டுக்காலம் அதே மண்ணில்தான் அந்த ஹென்ரா வைரஸ் எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு எத்தனை முறை ஹென்ரா வைரஸ்கள் குதிரைகளைத் தாக்கியிருந்தாலும் 1994ல் ஏற்பட்ட பாதிப்பு மட்டும்தான் குதிரைகள்மீது என்றே உறுதிசெய்யப்பட்டது.

ஒரு தொற்றுச் சங்கிலியில், இடைப்பட்ட தடயமே காணாமல் போயிருப்பதுதான் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் நமக்கு இருக்கும் சவால்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

“ஒருவேளை அது கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், பாம்புக் கடியால்தான் குதிரைகள் இறக்கின்றன என மக்கள் நம்பிக்கொண்டிருந்திருப்பார்கள்” என்கிறார் ஃபீல்ட். குதிரைகளில் உருவாகியிருந்த நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகளைக் கொண்டுதான் ஹென்ராவுக்கான தடுப்பூசி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், கொரோனா வைரஸுக்கு அதுபோல ஏன் மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கண்டுபிடிக்க முடியவில்லை?

கொரோனா வைரஸும் மற்ற எந்த ஜூனாடிக் வைரஸ்களைப் போல வௌவால்களில்தான் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், ஹென்ரா வௌவால்களில் இருந்து குதிரைக்குப் பரவியதுபோல கொரோனா, வௌவால்களில் இருந்து எந்த விலங்குக்குப் பரவியது என்பதற்கான தடயமே தற்போதைய தொற்றில் கண்டறிய முடியவில்லை. ஒரு தொற்றுச் சங்கிலியில் இடைப்பட்ட தடயமே காணாமல் போயிருப்பதுதான் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் நமக்கு இருக்கும் சவால்.

அடுத்த கட்டுரைக்கு