Published:Updated:

நாய் வளர்க்கப் போறீங்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்!

நாய்க்குட்டி பிறந்த உடனேயே தாய் நாயை விட்டுப் பிரிக்காமல் 40 நாட்களுக்குப் பிறகு எடுத்து வந்து வளர்த்தால் குட்டி ஆரோக்கியமாய் இருக்கும். பொதுவாக, நாய்க் குட்டிகளைச் சுத்தமான இடத்தில் கட்டிப் போட்டு பராமரிக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வளர்ப்புப் பிராணிகள் என்றாலே பலருக்கும் சந்தோஷம். அதிலும் வளர்ப்புப் பிராணிகளில் நாய்களுக்கு தனி மதிப்புண்டு. பக், பொம்மேரியன், டாபர்மன் எனப் பல வகை நாய்கள் வளர்க்கப்படுகின்றன. காவல்துறைக்காக, வீட்டுப் பாதுகாப்பிற்காக, வேட்டைக்காக எனப் பல காரணங்களுக்காகவும் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தஸ்தைக் காட்டக்கூட அதிக விலையிலான நாய்களை வளர்க்கிறார்கள். நாய்கள் பொதுவாக அதிக மோப்ப சக்திக் கொண்டவை. நாய் வளர்ப்பவர்களுக்குத் தெரியும், நாய்க் குட்டிகளின் சேட்டைகள் எவ்வளவு ரசிக்கத்தக்கவை என்று. என்ன செய்தாலும் எஜமான் காலைச் சுற்றிவரும் நாய்க்குட்டிகளின் பாசம் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?

நாய்
நாய்

நாய்க்குட்டி பிறந்த உடனேயே தாய் நாயை விட்டுப் பிரிக்காமல் 40 நாட்களுக்குப் பிறகு எடுத்து வந்து வளர்த்தால் குட்டி ஆரோக்கியமாய் இருக்கும். பொதுவாக, நாய்க் குட்டிகளைச் சுத்தமான இடத்தில் கட்டிப் போட்டு பராமரிக்க வேண்டும். அதற்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கும் பாத்திரத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நாய்கள் அறிவுள்ள வளர்ப்புப் பிராணி. நம்முடைய கோபம், சந்தோஷத்தைக் கூட புரிந்துகொள்ளும் இயல்புடையவை. குட்டிகளைப் பேர் சொல்லி அழைத்தால் இயல்பான குரலாகவும், எதாவது தவறு செய்தால் தவற்றைச் சுட்டிக் காட்டும் விதத்தில் கட்டளைக் குரலாகவும், சொன்ன பேச்சைக் கேட்டால் பாராட்டு தரும் வகையிலும் பேசினால் நாய்க்குட்டிகளை நமக்கு ஏற்ற விதத்தில் பழக்க முடியும்.

நாய்க்குட்டிக்கென்று நேரம் ஒதுக்கி, வெளியில் யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் மலம் கழிக்க உரிய இடத்தைத் தேர்வு செய்து பழக்க வேண்டும். நாய்க்குட்டிகள் பற்கள் முளைக்கத் துவங்கும் போது கண்ட பொருட்களையும் கடிக்கத் துவங்கும்.அத்தகைய நேரத்தில் நாம் காரட் அல்லது கடிக்க முடியாத எலும்புத் துண்டுகளைப் போட்டால் அதனைக் கடித்துக் கொண்டிருக்கும். வீட்டில் உள்ள பொருட்களைக் கடிக்கும் போது உரத்தச் சத்தத்தில் கட்டளை இட்டால் திருத்திக் கொள்ளும்.

எல்லாவற்றிலும் திறமையான நாய் ஒருவர் கொடுக்கும் நஞ்சு உணவைச் சாப்பிட்டு விட்டால் அது கற்றதெல்லாம் வீண் தான். எனவே வீட்டில் உள்ள குழந்தையிடம் தெரியாதவர் கொடுக்கும் பொருளை வாங்கக் கூடாது என சொல்லிக் கொடுப்பது போல நாம் வளர்க்கும் நாய்க்கும் சொல்லி பழக்கப்படுத்த வேண்டும். கீழே கிடக்கும் பொருட்களைச் சாப்பிடவும் பழக்க கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறு செய்தால் உடனே கண்டித்துத் திருத்த வேண்டும். மாதம் ஒருமுறை காதுகளைச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் துர்நாற்றம் ஏற்படக் கூடும். வாரம் ஒரு முறை குளிப்பாட்ட வேண்டும். அதற்கான ஷாம்பூ, சோப்புகளையே பயன்படுத்த வேண்டும். வெறிநோய் தடுப்பூசி போன்ற தடுப்பூசிகளை அவ்வப்போது போட்டு பராமரிக்க வேண்டும்.

நாய் குட்டிகளுடன் நாம் நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் தன் எஜமான் யாரென்று நாய்க்குட்டிகளுக்குத் தெரியும். வலுவான பாசப்பிணைப்பு உண்டாகும். சொல்லுக்குக் கீழ்ப்படியும். உயிர்கொடுக்கும் தோழனாகவும் மாறும். எத்தனை நாள் பிரிந்திருந்து சந்தித்தாலும் மனிதனைப் போல் அல்லாது உப்பிட்டவரை மறவாது நினைத்திருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு நாய் ஒரு வரப்பிரசாதம். தனிமையை மறக்கடித்து மனநிம்மதி தரும். பொதுவாகச் செடி வளர்ப்பு, செல்லப் பிராணிகள் வளர்ப்பு போன்றவை சிலருக்குப் பொருளாதார லாபம் ஈட்டுவதாக இருந்தாலும், அவற்றை மேற்கொள்ளும் எல்லாருக்கும் மனமகிழ்வைத் தந்திடும் ஒரு நிறைவான செயல்தான்.

நீங்கள் நாய் வளர்ப்பவரா? உங்கள் நாயின் பெயர் என்ன? கமெண்ட் பாக்ஸில் பகிரவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு