Published:Updated:

இந்தியா 75: தேங்காய் நண்டு, நார்கொண்டம் இருவாச்சி டு சோலைமந்தி - பெரிதும் அறியப்படாத 15 உயிரினங்கள்!

இந்தியாவின் அறியப்படாத உயிரினங்கள்

உயிர் வலைப்பின்னலில் ஒவ்வொரு கண்ணியும் அவசியம்தான். அவற்றைப் பற்றியும் பேசவேண்டும், அவையும் பாதுகாக்கப்படவேண்டும். அதிகம் அறியப்படாத சில இந்திய உயிரினங்களைச் சந்திப்போமா?

இந்தியா 75: தேங்காய் நண்டு, நார்கொண்டம் இருவாச்சி டு சோலைமந்தி - பெரிதும் அறியப்படாத 15 உயிரினங்கள்!

உயிர் வலைப்பின்னலில் ஒவ்வொரு கண்ணியும் அவசியம்தான். அவற்றைப் பற்றியும் பேசவேண்டும், அவையும் பாதுகாக்கப்படவேண்டும். அதிகம் அறியப்படாத சில இந்திய உயிரினங்களைச் சந்திப்போமா?

Published:Updated:
இந்தியாவின் அறியப்படாத உயிரினங்கள்
"சிங்கத்தின் சாகச உணர்வும் வீரமும் இப்போது தடைபட்டிருக்கின்றன. ஏனென்றால் காட்டு ராஜாவுக்கு அளவுக்கு மீறி தாகம் எடுக்கிறது. நாக்கைத் தொங்கவிட்டபடி அது வாயைத் திறந்து திறந்து மூடுகிறது, மூச்சு வாங்குகிறது, பிடரியை சிலுப்பிக்கொள்கிறது. அந்த சிங்கம் அருகிலிருக்கும் யானைகளைக் கண்டுகொள்ளவில்லை. பற்றியெரியும் கோடைகாலம் இரண்டு இனங்களுக்கு நடுவில் இருக்கும் வெறுப்பைக் குளிர்வித்து அழித்துவிட்டது."
கோடைகாலத்தில் விலங்குகள் படும் துன்பத்தை இப்படி விவரிக்கிறார் காளிதாசர்.

இந்தியாவைச் சேர்ந்த எல்லா மொழிகளின் நாட்டார் மற்றும் செவ்வியல் இலக்கியங்களும் இயற்கையின் அழகைப் பாடிக்கொண்டே இருக்கின்றன. பனிபடர்ந்த மலைகள், பாலைவனங்கள், மழைக்காடுகள், புல்வெளிகள், புதர்க்காடுகள், கடற்கரைப்பகுதிகள், வனங்கள் நிரம்பிய மலைகள், சமவெளிகள், தீவுகள், உப்புப் பாலைவனங்கள், எரிமலை, நீர்வீழ்ச்சிகள், சதுப்பு நிலக்காடுகள், பவளத்திட்டுகள் என இந்தியாவில் எல்லா வகையான நிலப்பரப்புகளையும் வாழிடங்களையும் பார்க்கலாம். அந்தமான் தீவுகளில் மண் குழம்பைத் துப்பும் சிறு எரிமலைகள் உண்டு. இந்தியாவின் பல கடலோரப் பகுதிகளில் மழைக்காடுகளுக்கே சவால் விடும் பவளத் திட்டுகள் உண்டு. நிகோபார் தீவுகளையும் உள்ளடக்கிய சுண்டா நிலப்பரப்பு, இமயமலை, இண்டோ-பர்மா பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் என அதிகமான உயிரிப்பல்வகைமை கொண்ட நான்கு biodiversity hotspot பகுதிகள் இங்கு காணப்படுகின்றன.

சதுப்பு நில காடுகளில் வாழும் பறவைகள்
சதுப்பு நில காடுகளில் வாழும் பறவைகள்
உ.பாண்டி

சற்றே புள்ளிவிவரப் புலியாகி இந்தியாவின் உயிரிப் பல்வகைமையை ஆராய்ந்தால், கிடைக்கும் தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. உலகின் நிலப்பரப்பில் 2.4% மட்டுமே இருக்கும் இந்தியாவில், உலகின் உயிரிப் பல்வகைமையில் 8% உயிரிகள் காணப்படுகின்றன. 90,000 விலங்கினங்கள், 45,000 தாவர இனங்கள் இந்தியாவில் உண்டு என்கிறது ஒரு சமீபத்திய குறிப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் கடற்பகுதிகளிலும் ஆராய்ச்சிகள் நடத்தப்படும் ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் வருகிறது. இன்னும் இந்தியாவில் 40 லட்சம் உயிரினங்கள் கண்டறியப்படலாம் என்றும் ஒரு கணிப்பு இருக்கிறது.

வங்கப்புலி, ஆசிய சிங்கம், ஆசிய யானை, காண்டாமிருகம் போன்ற பேரினங்களே "இந்திய உயிரினங்கள்" என்று பரவலாக அறியப்படுகின்றன. சூழலியல் ரீதியாகப் பார்த்தால் இவை வாழிடங்களையும் மற்ற உயிரினங்களையும் பாதிக்கக் கூடிய குடை இனங்கள் என்பதால் இந்த முக்கியத்துவம் ஓரளவு சரிதான். ஆனாலும் இந்தியப் பல்லுயிர்ப்பெருக்கத்தில் புலிக்கும் சிங்கத்துக்கும் இருக்கும் அதே முக்கியத்துவம் கைசர்-ஈ-ஹிந்த் பட்டாம்பூச்சிக்கும் கருநாகத்துக்கும் கீரிப்பிள்ளைக்கும்கூட உண்டு. உயிர் வலைப்பின்னலில் ஒவ்வொரு கண்ணியும் அவசியம்தான். அவற்றைப் பற்றியும் பேசவேண்டும், அவையும் பாதுகாக்கப்படவேண்டும். அதிகம் அறியப்படாத சில இந்திய உயிரினங்களைச் சந்திப்போமா?

1. ஆசிய காட்டுக் கழுதை (Asiatic Wild Ass/Indian Wild Ass)

ஆசிய காட்டுக் கழுதை (Asiatic Wild Ass/Indian Wild Ass)
ஆசிய காட்டுக் கழுதை (Asiatic Wild Ass/Indian Wild Ass)
Sumeet Moghe, via Wikimedia Commons

குஜராத்தி மொழியில் குட்குர் என்று அழைக்கப்படும் காட்டுக் கழுதை முன்னொரு காலத்தில் மேற்கு இந்தியாவில் தொடங்கி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை பரவி இருந்தது. இப்போது ரான் ஆஃப் கட்ச் உப்புப்பாலைவனம் மட்டுமே இதன் வாழிடமாக சுருங்கிவிட்டது. ஒட்டுண்ணி நோய்கள், வேட்டையாடுதல், அயல் ஊடுருவி இனங்கள், வாழிட இழப்பு ஆகியவற்றால் இது முன்னொரு காலத்தில் வேகமாக அழிந்தது. சமீபகாலமாக இந்தக் கழுதைகளின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்திருக்கிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி. பளபளக்கும் பழுப்பு நிறத்தில் கம்பீரமாக குஜராத்தின் பாலைவனங்களில் ஓடியாடும் இவை வீட்டு விலங்குகளான கழுதைகளை விட அளவில் பெரியவை.

2. தேங்காய் நண்டு (Coconut Crab)

தேங்காய் நண்டு (Coconut Crab)
தேங்காய் நண்டு (Coconut Crab)
Drew Avery, via Wikimedia Commons

துறவி நண்டு அல்லது கடல்பூச்சி (Hermit crab) இனத்தைச் சேர்ந்தவை தேங்காய் நண்டுகள். உலகின் மிகப்பெரிய தரைவாழ் பூச்சிகளான இந்த நண்டுகள், மூன்று அடி நீளமும் நான்கு கிலோ எடையும் கொண்டு பிரமாண்டமாக வளரக்கூடியவை. இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் இவை, தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து உண்ணக்கூடியவை. தரையில் கிடக்கும் எந்தப் பொருளானாலும் அவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும் என்பதால் இவை "கொள்ளைக்கார நண்டுகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

3. ஆவுளியா (Dugong)

ஆவுளியா (Dugong)
ஆவுளியா (Dugong)
Julien Willem, via Wikimedia Commons

கடற்பசு (Sirenia) இனத்தைச் சேர்ந்த இந்த கடல் பாலூட்டி, இந்தியாவில் கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் இவற்றின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம். அந்தமான் பகுதிகளில் யாராவது ஒரு ஆராய்ச்சியாளர் ஆவுளியாவைப் பார்த்துவிட்டால், அது மாதக்கணக்கில் பேசுபொருளாகும். அந்த அளவுக்கு அந்தமானின் ஆவுளியாக்கள் வேகமாக அருகிவருகின்றன. கடற்புல் படுகைகளில் உள்ள புற்களை மாடுகளைப் போலவே மேயும் இந்தப் பெருவிலங்குகள், ஒருகாலத்தில் கடற்கன்னிகள் பற்றிய கட்டுக்கதைகளுக்கும் ஆரம்பப் புள்ளிகளாக இருந்தன.

4. மீன்பிடிக்கும் பூனை (Fishing cat)

மீன்பிடிக்கும் பூனை (Fishing cat)
மீன்பிடிக்கும் பூனை (Fishing cat)
Kell & Ryan | Kelinahandbasket, via Wikimedia Commons

வீட்டுப்பூனைகளை விட இரண்டு மடங்கு பெரிதான இந்தக் காட்டுப் பூனைகள், 15 கிலோ வரை வளரக்கூடியவை. நீருக்குள் டைவ் அடித்து இவை மீன்பிடிக்கும் அழகே தனி. சதுப்பு நிலக்காடுகளில் வசிக்கும் இவை, வாழிட இழப்பினாலும் தவறான மீன்பிடி முறைகளாலும் பாதிக்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தின் மாநில விலங்குகளான இவை அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

5. நார்கொண்டம் இருவாச்சி (Narcondam Hornbill)

நார்கொண்டம் இருவாச்சி (Narcondam Hornbill)
நார்கொண்டம் இருவாச்சி (Narcondam Hornbill)
Rohitjahnavi, via Wikimedia Commons

அந்தமானில் உள்ள நார்கொண்டம் தீவுகளில் மட்டுமே காணப்படுகிற பறவை இது. உலகில் வேறு எங்கும் இதைப் பார்க்க முடியாது. ஆசிய இருவாட்சிகளிலேயே மிகச்சிறிய வாழிடத்தைக் கொண்ட இனம் இதுதான். தங்களுடைய தடிமனான மூக்குகளால் இவை அத்திப் பழங்களைப் பறித்துச் சாப்பிடுகின்றன.

நார்க்கொண்டம் என்பது ஒரு ஆளில்லாத தீவு. ஆகவே வேட்டையாடுதல் போன்ற நேரடிப் பிரச்சனைகள் இல்லாவிட்டாலும் காலநிலை மாற்றம் இந்தப் பறவைகளுக்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். இப்போதைக்கு இவற்றின் எண்ணிக்கை சமநிலையில் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

6. கங்கை ஓங்கில் (Gangetic Dolphin)

கங்கை ஓங்கில் (Gangetic Dolphin)
கங்கை ஓங்கில் (Gangetic Dolphin)
Zahangir Alom / Marine Mammal Commission / National Oceanic and Atmospheric Administration, Public domain, via Wikimedia Commons

தெற்காசிய ஆற்று ஓங்கில்களில் இது ஒரு கிளை இனம், மற்றொன்று சிந்து ஆற்றில் காணப்படுகிறது. கங்கை ஓங்கில் என்பது 1801ல் கண்டுபிடிக்கப்பட்ட நன்னீர் ஓங்கில் இனம். கிட்டத்தட்ட இதற்குக் கண்பார்வையே இல்லை எனலாம். இவை ஒலிகளை மட்டுமே வைத்து வழி கண்டுபிடிக்கின்றன. 2009ம் ஆண்டில் இது தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டது. அமிதவ் கோஷ் எழுதிய 'தி ஹங்ரி டைட்' நாவலில் இந்த ஓங்கிலின் பண்புகள் அற்புதமாக வர்ணிக்கப்பட்டிருக்கும். தவறுதலாக வலைகளில் மாட்டி இறப்பது, அதிக இரைச்சல், நீர் மசுபாடு போன்ற பிரச்சனைகளால் இவை பாதிக்கப்படுகின்றன.

7. கான மயில் (Great Indian Bustard)

Great Indian Bustard
Great Indian Bustard
Mohib Uddin

மூன்று அடி வளரக்கூடிய பறவை இனம் இது. இந்தியாவின் தேசியப் பறவையாக இதுதான் இருக்கவேண்டும் என்று பறவையியலாளர் சலீம் அலி வாதிட்டிருக்கிறார். இந்தப் பறவை ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் சிரிப்பை வரவழைக்கும், காரணத்தை கூகுளிடம் கேட்டுப்பாருங்களேன்...

பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும் இந்தப் பறவைகள் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. 2013ல் கானமயில் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.

8. கங்கை சுறா (Gangetic Shark)

கங்கை சுறா (Gangetic Shark)
கங்கை சுறா (Gangetic Shark)
Naturalis Biodiversity Center, Public domain, via Wikimedia Commons

உலகின் ஆறு நன்னீர் சுறா இனங்களில் இதுவும் ஒன்று. மற்ற சுறாக்களாவது அவ்வப்போது கடற்பகுதிகளுக்கு வலசை போகும், ஆனால் இதுவோ நன்னீரில் மட்டுமே காணப்படும் சுறா இனம். உலகில் அதிவேகமாக அழிந்துகொண்டிருக்கும் இருபது சுறா இனங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கடல்சூழலுடன் ஒப்பிடும்போது ஆறுகளில் கலங்கல் தன்மை அதிகம் என்பதால் ஒலிகள், மின்சார உணர்வு, மோப்ப சக்தி ஆகியவற்றின்மூலம் இவை வேட்டையாடலாம் என்று நம்பப்படுகிறது. 250க்கும் குறைவான சுறாக்களே மீதமிருக்கும் நிலையில், இவை பற்றிய அடிப்படைத் தகவல்களே நமக்குத் தெரியாது என்று கவலையுடன் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

9. சோலைமந்தி (Lion tailed Macaque)

சோலைமந்தி (Lion tailed Macaque)
சோலைமந்தி (Lion tailed Macaque)
Chris huh, via Wikimedia Commons

"கூட்டமாக மயில்கள் அடர்ந்த காட்டில் மழை பெய்யும்போது அங்கு இருக்கும் நரைமுக ஊகங்கள் தங்கள் குட்டிகளை அணைத்துக்கொண்டு பயந்தவாறு இருக்கும். அப்படிப்பட்ட நிலத்தைச் சேர்ந்தவர் என் தலைவர்" என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல். இதில் வரும் நரைமூக ஊகம் என்பது சோலைமந்தி எனப்படும் குரங்கினம்தான். உலகிலேயே மிகவும் அரிதான, வேகமாக அழிந்துவரக்கூடிய முதனி (primate) இனங்களில் இதுவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இந்தக் குரங்குகள் வாழிடம் துண்டாடப்படுவதால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

10. ஊதா தவளை அல்லது பன்றிமூக்குத் தவளை (Purple Frog/Pignose Frog)

ஊதா தவளை அல்லது பன்றிமூக்குத் தவளை (Purple Frog/Pignose Frog)
ஊதா தவளை அல்லது பன்றிமூக்குத் தவளை (Purple Frog/Pignose Frog)
Karthickbala at ta.wikipedia, via Wikimedia Commons

இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் தவிர இந்தத் தவளைகளை வேறு எங்கும் பார்க்க முடியாது. 2003ல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தவளை இனம் பெரும்பாலும் மண்ணுக்கு அடியிலேயே இருக்கும் பண்பு கொண்டது. வாழிடங்கள் இழப்பால் அதிகம் பாதிக்கப்படும் இந்தத் தவளை இனம், அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

11. இந்திய மலை அணில் (Indian Giant Squirrel)

இந்திய மலை அணில் (Indian Giant Squirrel)
இந்திய மலை அணில் (Indian Giant Squirrel)
Yathin S Krishnappa, via Wikimedia Commons

மலபார் மலை அணில் அல்லது இந்திய மலை அணில் என்று அழைக்கப்படும் இந்த இனம், இந்தியாவில் மட்டும் காணப்படும் மர அணில் வகையாகும். இதன் உடல் மட்டுமே ஒரு அடி நீளம் இருக்கும். அடர்ந்த காடுகளில் தலையைத் தூக்கிப் பார்க்கும்போது இவற்றின் செம்பழுப்பும் ஊதாவும் கலந்த உடலைக் காண்பது ஓர் அற்புதமான அனுபவம். "பொதுவாக பாலூட்டிகளின் உடலில் அடர்சிவப்பு அல்லது ஊதா நிறங்கள் காணப்படுவதில்லை, அந்த வகையில் இந்த விலங்கின் நிறமே கொஞ்சம் ஸ்பெஷல்தான்" என்கிறார்கள் விலங்கியலாளர்கள்.

12. நிகோபார் புறா (Nicobar Pigeon)

நிகோபார் புறா (Nicobar Pigeon)
நிகோபார் புறா (Nicobar Pigeon)
Devin Morris, via Wikimedia Commons

மலாய் தீவுக்கூட்டங்களிலும் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் காணப்படும் புறா இனம் இது. அழிந்துபோன டோடோ பறவைக்கு நெருக்கமான இந்தப் புறா வகை, அட்டகாசமான அழகு கொண்டது. நீலம், பச்சை, பழுப்பு என பல வண்னங்களில் மினுங்குகிற உடலைக் கொண்ட நிகோபார் புறா, ஒரு அடி நீளம் வரை வளரக்கூடியது. உணவுக்காகவும் நகை செய்யவும் செல்லப் பிராணிகளாக வளர்க்கவும் இவை அதிகம் வேட்டையாடப்படுவதால் நிகோபார் புறாக்கள் அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் விரைவில் சேர்க்கப்படலாம்.

13. கரும்வெருகு (Nilgiri Marten)

கரும்வெருகு (Nilgiri Marten)
கரும்வெருகு (Nilgiri Marten)
Navaneeth Kishor

இந்தியாவில் காணப்படும் இரண்டு வெருகு இனங்களில் இதுவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் நீலகிரியின் குன்றுகளிலும் வசிக்கும் இந்தப் பாலூட்டி இனத்தில் மொத்தம் 1000 விலங்குகளே மிச்சமிருக்கின்றனவாம். வாழிட இழப்பால் இவை அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.

14. வரையாடு (Nilgiri Tahr)

வரையாடு (Nilgiri Tahr)
வரையாடு (Nilgiri Tahr)
A. J. T. Johnsingh, WWF-India and NCF, via Wikimedia Commons

உலகிலேயே நீலகிரி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஆட்டு இனம் இது. மலை ஆடுகளின் சூழல் பண்புகள் மிகவும் சுவாரஸ்யமானவை. பிற விலங்குகளால் எளிதில் சமாளிக்க முடியாத ஆபத்துகள் நிறைந்த மலைப்பகுதிகளில் வெற்றிகரமாகத் தங்களை நிறுவிக்கொண்ட இனங்கள் இவை. மலை ஆடு ஒன்று அடிவாரத்திலிருந்து உச்சியை நோக்கி ஏறுவதையோ மேலிருந்து கீழே வருவதையோ பார்த்தாலே அந்த வாழ்வு எத்தகைய சவால்கள் நிறைந்தது என்பது புரிந்துவிடும். வேட்டையாடுதல் மூலம் பாதிக்கப்பட்ட வரையாடுகள் இப்போது அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் இருக்கின்றன.

15. பாண்டிச்சேரி சுறா (Pondicherry Shark)

பாண்டிச்சேரி சுறா (Pondicherry Shark)
பாண்டிச்சேரி சுறா (Pondicherry Shark)
J.A.F. Garrick, Public domain, via Wikimedia Commons

கடல்சார் ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை இந்த இனம், "கண்டா வரச் சொல்லுங்க, கையோட கூட்டி வாருங்க" என்ற நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவில் இது கடைசியாக 1979ல் பார்க்கப்பட்டது. 2019ல் இலங்கையில் இதைப் போலவே பண்புகள் கொண்ட ஒரு சுறா கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பாண்டிச்சேரி சுறாதானா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அதிகமாக அழிந்துவரும் (Critically endangered) இனங்களில் ஒன்றான இந்தக் கடல் சுறா இனம் இப்போது உண்மையில் அழிந்துவிட்டது என்றுகூட சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இண்டோ பசிபிக் கடற்பகுதிகளில் பரவலாகக் காணப்பட்ட இந்த இனம் வேட்டையாடுதலால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இந்தியாவின் அதிசயத்தக்க உயிரிப் பல்வகைமையைக் காட்ட இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. ஆழ்கடலிலும் அடர்ந்த காடுகளிலும் இன்னும் பல விலங்குகள் கண்டறிப்படாமல் காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் அழியாமல் பாதுகாப்பது, இயற்கை சூழலோடு தங்களது வாழ்வைப் பிணைத்துக்கொண்ட நில மற்றும் கடல் தொல்குடிகளின் உரிமைகளை நசுக்காமல் இருப்பது, எதிர்காலத்தில் எல்லா திட்டங்களையும் சூழலை பாதிக்காமல் அமல்படுத்துவது ஆகியவை நம் முன் இருக்கும் கடமைகள். "நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணைக் கொடுத்தானே பூர்வக்குடி" என்ற 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.