Published:Updated:

`இது பாவக் கணக்கு!' 30 வருடங்களுக்குப் பிறகு திமிங்கில வேட்டை தொடங்கிய ஜப்பான்

மு.ராஜேஷ்

30 வருடங்கள் காத்திருந்த ஜப்பான், இப்போது திமிங்கிலங்களை வணிகரீதியில் வேட்டையாட முடிவுசெய்துள்ளது.

ஜப்பான் திமிங்கில வேட்டை
ஜப்பான் திமிங்கில வேட்டை

முகத்தில் எப்போதும் புன்னகை பூத்தபடி இருக்கும் மக்கள், அணுகுண்டால் தாக்கினால்கூட மீண்டெழும் அவர்களின் வலிமை, பூகம்பமே வந்தாலும் அசைந்துகொடுக்காத மன உறுதி என ஜப்பானுக்கென்று ஒரு முகம் இருக்கிறது.

ஜப்பான்
ஜப்பான்

ஆனால், கடந்த ஒரு வார காலமாக செய்திகளில் அடிபட்டுவரும் ஜப்பானின் பெயர், அதன் இன்னொரு முகத்தை உலகுக்குக் காட்டியிருக்கிறது. அதுதான் திமிங்கில வேட்டை.

திமிங்கில வேட்டையின் வரலாறு

திமிங்கில வேட்டை
திமிங்கில வேட்டை

திமிங்கிலங்களை வேட்டையாடுவது என்பது உலகின் பல இடங்களில் காலம் காலமாகவே நடந்துவரும் விஷயம். கடலோரத்தில் வாழ்ந்த மக்கள், திமிங்கிலங்களை வேட்டையாடியிருக்கிறார்கள். உணவுக்காகத்தான் அந்த வேட்டை என்றாலும் அதன் பின்னர் அது, மக்களின் எண்ணெய்த் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் மாற்றமடைந்தது.

ஒரு சமூகத்தின் தேவையை அவர்கள் வாழும் நிலத்தில் கிடைக்கும் பொருள்களே தீர்மானிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, நமது ஊரில் எண்ணெய் தேவைப்பட்டபோது எண்ணெய் வித்துகள் நமது தேவையைப் பூர்த்திசெய்தன. ஆனால், ஆர்ட்டிக் போன்ற குளிரான பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடையாது. அவர்களுக்கு எண்ணெய்யை உருவாக்க இருந்த ஒரே வழி விலங்குகளின் கொழுப்புதான்.

வேட்டையாடப்பட்ட திமிங்கிலங்கள்
வேட்டையாடப்பட்ட திமிங்கிலங்கள்

அதுவும் திமிங்கிலம் போன்ற சில கடல் பிராணிகளுக்கு, தோலுக்கு அடியில் கொழுப்பு நிறையவே இருக்கும். எனவே, அவற்றை வேட்டையாடி எண்ணெய்த் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டார்கள். காலம் செல்லச்செல்ல தேவை அதிகரிக்கத் தொடங்கியது. பெட்ரோலியப் பொருள்களின் வருகையால் எண்ணெய்க்கான திமிங்கில வேட்டை குறைந்தது. ஆனாலும் மாமிசத்துக்காக வேட்டையாடுவது என்பது தொடர்ந்தது.

சில திமிங்கில இனங்கள் அழிவுக்கே சென்றதையடுத்து, வேட்டையை வரைமுறைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கின. 1946-ம் ஆண்டில் சர்வதேச திமிங்கில ஆணையம் (International Whaling Commission) உருவாக்கப்பட்டது. அதன் ஆலோசனையின்படி, பல நாடுகளில் வேட்டை தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பில் 1988-ம் ஆண்டு இனைந்தது ஜப்பான். அதன் பிறகு, அமைப்பிலிருந்த விதிப்படி வர்த்தக நோக்கத்துக்கான வேட்டையை முழுவதுமாக நிறுத்தியது. ஆராய்ச்சித் தேவைக்காக மட்டுமே திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டு வந்தன.

திமிங்கில வேட்டை
திமிங்கில வேட்டை

இந்நிலையில்தான், திடீரென கடந்த வருடம் அந்த அமைப்பிலிருந்து முழுவதுமாக விலக முடிவுசெய்தது ஜப்பான். அப்போதே, இந்த வருடம் முதல் வணிக ரீதியிலான வேட்டையைத் தொடங்கவிருப்பதாகவும் அறிவித்தது. சொன்னபடியே கடந்த சில நாள்களுக்கு முன் திமிங்கில வேட்டையைத் தொடங்கியிருக்கிறது.

30 வருடங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட வேட்டை

ஜப்பானின் கடல் எல்லைக்குட்பட்ட 370 கிலோ மீட்டர் பரப்பில் இந்தத் திமிங்கில வேட்டை நடைபெற உள்ளது. வேட்டை தொடங்கிய முதல் நாளே ஐந்து திமிங்கிலங்கள் கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. வேட்டைக்காகத் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட கப்பல்கள் கடலில் இறக்கப்பட்டன. இந்தக் கப்பல்களில் harpoons எனப்படும் வேட்டையாடும் கருவி ஒன்று இருக்கும். திமிங்கிலத் தூண்டில் எனப்படும் இது, சாதாரண தூண்டில் போல இருக்காது. சுடப்பட்டவுடன் நேரடியாக திமிங்கிலத்தின் உடலைத் தாக்கும். இந்த வருடத்துக்குள்ளாக மொத்தம் 227 திமிங்கிலங்களை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

திமிங்கிலம்
திமிங்கிலம்

இது, கடந்த வருடங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவுதான். கடந்த வருடம், ஆராய்ச்சி என்ற பெயரில் 333 திமிங்கிலங்களைக் கொன்று குவித்தது ஜப்பான். அவற்றில் 122-க்கும் மேற்பட்டவை வயிற்றில் குட்டிகளைச் சுமந்துகொண்டிருந்தன. ஆராய்ச்சி என்ற பெயரில் அவை வேட்டையாடப்பட்டாலும்கூட, பெருமளவு திமிங்கில மாமிசம் சந்தைகளில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டுதான் வந்தது. இப்போது, அரசே வணிக நோக்கத்துக்காக வேட்டையை அனுமதி கொடுத்திருப்பதால், மாமிசம் இனிமேல் சந்தையில் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இப்போது, திடீரென திமிங்கில வேட்டையைத் தொடங்க கலாசாரத்தை காரணமாகக் கூறுகிறது ஜப்பான். ஜப்பானிய உணவுகளில் காலம் காலமாக திமிங்கில மாமிசம் இடம்பெற்றுவந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தனைக்கும் நாட்டில் உணவாக உட்கொள்ளப்படும் திமிங்கில மாமிசத்தின் அளவு வெறும் 0.1 சதவிகிதம்தான் என ஜப்பான் அரசே 2016-ம் ஆண்டில் தெரிவித்திருக்கிறது.

திமிங்கிலம்
திமிங்கிலம்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜப்பானியர்களின் புரதத் தேவையை திமிங்கில மாமிசங்கள் பூர்த்திசெய்தன என்பது உண்மைதான். ஆனால் வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டதால், மாமிசத் தேவை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. திமிங்கில மாமிசத்தின் சுவையே அவர்களுக்கு மறந்துபோனது. ஒரு தலைமுறைக்கு திமிங்கில மாமிசத்தின் சுவையே தெரிந்திருக்காது. அப்படியிருக்கையில், மீண்டும் உணவுத் தேவையைக் காரணமாகவைத்து வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. மேலும் திமிங்கிலங்கள் அழியும் நிலையில் இல்லையென்பதால், இந்த வேட்டை பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற வாதத்தையும் ஜப்பான் வைக்கிறது.

அதேநேரம், திமிங்கில வேட்டைக்காரர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். "இது ஒரு சிறந்த நாள். 31 வருட காத்திருப்புக்கு இது தகுதியானதுதான்" எனத் தெரிவித்திருக்கிறார், சிறிய வகை திமிங்கில வேட்டை அமைப்பின் தலைவர் யோஷிஃபியூமி கை (Yoshifumi Kai). ஜப்பானிய உணவில் முக்கியமான அம்சம் எனக் கூறும் சச்சிக்கோ சகாய் (Sachiko Sakai) என்பவர், ''இந்த உலகம், திமிங்கிலங்கள் கொல்லப்படுவதை எதிர்த்து எங்களைப் பார்த்து கேள்வி எழுப்புகிறது. ஆனால், அவர்களும் கூட பல விலங்குகளை உணவுக்காகக் கொல்லவே செய்கிறார்கள்" என அவர் தரப்பு நியாயத்தை வைக்கிறார். ஏற்கெனவே காலநிலை மாற்றம், பிளாஸ்டிக் கழிவுகளின் தாக்கம் எனப் பல காரணங்களால் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. மாதத்துக்கு ஒரு முறையாவது ஏதோ ஒரு கடற்கரையில் திமிங்கிலம் செத்து கரைஒதுங்குவது சமீப காலமாக அதிகரித்துவருகிறது.

திமிங்கிலம்
திமிங்கிலம்

இந்நிலையில், வர்த்தகத்துக்கான ஜப்பானின் இந்த முடிவு நிச்சயமாக பரிசீலிக்கப்படவேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த வருடம் வேட்டையாட ஒதுக்கப்பட்ட திமிங்கிலங்களின் எண்ணிக்கை 227. ஆனால், இந்த எண்ணிக்கை இறுதிவரை கடைப்பிடிக்கப்படுமா என்பது சந்தேகம்தான். வணிக உலகில் இந்த எண்ணிக்கையெல்லாம் சர்வ சாதாரணம். தேவைப்பட்டால், அதை விடவும் அதிக அளவில் திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எப்படியோ ஏதோ ஒரு வகையில் கலாசாரம் என்ற பெயரில் பாவக்கணக்கை எழுதிக்கொண்டிருக்கிறது ஜப்பான்.