Election bannerElection banner
Published:Updated:

கிணற்றில் சிக்கிய யானை.... இயற்பியல் விதியைக்கொண்டு மீட்ட வனத்துறை அதிகாரிகள்!

கிணற்றில் சிக்கிய யானை
கிணற்றில் சிக்கிய யானை

இந்த விதியின் மூலம் வனத்துறை அதிகாரிகளுக்குப் பெரிய அளவிலான சிரமம் இல்லாமல் 3 மணி நேரத்தில் யானையை மீட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், அம்லியா டோலி என்ற கிராமத்தில் நீர் வழித்தடம் தேடி வந்த யானை ஒன்று அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணற்றில் விழுந்த அந்த யானையின் தவிப்பைக் கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் கிணற்றில் சிக்கியிருந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

யானை சிக்கியிருந்தது ஆழமான கிணறு என்பதால் அதை எப்படி மீட்பது என்று குழம்பிய வனத்துறை அதிகாரிகள் ஊர் மக்களுடன் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போதுதான் அந்த யோசனை அவர்களுக்குத் தோன்றியுள்ளது. பள்ளியில் படித்த ஆர்க்கிமிடீஸ் இயற்பியல் விதியைப் பயன்படுத்தி யானையை மீட்பது என முடிவு செய்துள்ளனர். அந்த விதியானது, ``ஒரு பொருள் ஒரு நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் போது அது இழந்ததாகத் தோன்றும் எடையானது அதனால் வெளியேற்றப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்" என்பதாகும்.

`தாழ்வாகத் தொங்கிய மின்கம்பி; தூக்கிவீசப்பட்ட காட்டு யானை!’- அதிர்ச்சி கொடுத்த ஆந்திர வனப்பகுதி

இந்த விதியைக்கொண்டு கிணற்றில் நீரைப் பாய்ச்சியுள்ளனர். இதற்காக மூன்று பம்பு செட்டுகள் அமைத்து மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர். அதோடு கிணற்றில் உள்ள யானை எளிமையாக வெளியேறுவதற்கு ஏதுவாகச் சறுக்கலான ஒரு பாதை வளைவையும் ஏற்படுத்தியுள்ளனர். கிணற்றினுள் நீர் செலுத்த, செலுத்த யானை மேலே மிதக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மிதந்துகொண்டிருந்த அந்த யானை சறுக்கலாக அமைக்கப்பட்ட பாதை வளைவின் வழியாக ஏறி மேலே வந்துள்ளது. இதனால் அந்த யானைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அதோடு வனத்துறை அதிகாரிகளுக்குப் பெரிய அளவிலான சிரமம் இல்லாமல் 3 மணி நேரத்தில் யானையை மீட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் யானை மீட்கப்பட்டதற்குப் பாராட்டு
சமூக வலைதளங்களில் யானை மீட்கப்பட்டதற்குப் பாராட்டு

வனத்துறை அதிகாரிகளும் ஊர் மக்களும் கூடி சமயோஜிதமாகவும் அறிவுப்பூர்வமாகவும் செயல்பட்டதை தொடர்ந்தே அந்த யானை மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே தெரிவித்துள்ளார். அதோடு மண்டல வனத்துறை அலுவலர் கும்லாவையும் மற்ற வனத்துறை அலுவலர்களையும் தனது ட்விட்டர் கணக்கில் பாராட்டியுள்ளார். யானை மீட்கப்பட்ட அந்தப் புகைப்படங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வனத்துறை அதிகாரிகளையும் கிராம மக்களையும் பாராட்டி வருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு