அறிவுள்ள விலங்கு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வாலில்லாக் குரங்கு, பிற குரங்கு இனங்கள், ஓங்கில் எனப்படும் டால்ஃபின்கள், யானை, காக்கை போன்ற பறவைகள் ஆகியவைதான். இவைதான் விலங்கு அறிவாற்றல் தொடர்பான சோதனைகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாலூட்டிகள். குறைந்தபட்சம் இவை முதுகெலும்புள்ள உயிரினங்களாகவாவது இருந்துவிடுகின்றன. ஆக, அறிவாற்றல் என்பது பரிணாம வளர்ச்சியில் மேல் அடுக்கில் உள்ள உயிரினங்களுடனே பொதுவாகத் தொடர்புப்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு முக்கிய விதிவிலக்கு, பேய்க்கணவாய் (Octopus), ஊசிக்கணவாய் (Squid) மற்றும் ஓட்டுக்கணவாய் (Cuttlefish) போன்ற விலங்குகளைக் கொண்ட தலைக்காலிகள் இனம். இவை முதுகெலும்பற்ற உயிரிகளாக இருந்தாலும், தொடர்ந்து அறிவாற்றல் சோதனைகளில் வெற்றிபெற்று விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. அதிலும் குறிப்பாகப் பேய்க்கணவாய்கள் மற்ற தலைக்காலிகளைவிட அறிவுக்கூர்மை மிக்கவை. பாட்டில் மூடியைத் திறப்பது, புதிர்ப்பாதைகளில் வழி கண்டுபிடித்துத் தப்பிப்பது, சிக்கலான பவளப்பாறை வாழிடங்களில் வெற்றிகரமாகத் தப்பிப் பிழைப்பது என அவற்றின் அறிவாற்றலுக்குப் பல சான்றுகள் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த அதீத அறிவாற்றல் எப்படிச் சாத்தியமானது என்று பல பத்தாண்டுகளாகவே விஞ்ஞானிகள் தேடிவருகிறார்கள். ஐரோப்பாவில் நடத்தப்பட்ட சமீபத்திய மரபணு ஆராய்ச்சி ஒன்றில் சில முக்கியமான பதில்கள் கிடைத்திருக்கின்றன.
தாவும் மரபணுக்கள் அல்லது இடம்மாறும் மரபணுக்கள் (Jumping genes) என்பவை பெரும்பாலான யூகெர்யோட்டிக் வகை செல்களில் காணப்படும் மரபணு வகைமைகள். இவை ஆங்கிலத்தில் Transposon என்று அழைக்கப்படுகின்றன. ஒரு மரபணுத் தொகுதியில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தாவும் தன்மை கொண்ட இந்தத் தாவும் மரபணுக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு புரதங்களை உருவாக்குவதில்லை. மரபணு மாற்றம் அல்லது செல்களில் உள்ள பாதுகாப்பு வழிமுறைகளால் இவை முடக்கியே வைக்கப்படுகின்றன.

மனிதர்களின் உடலுக்குள்ளும் பலவகையான தாவும் மரபணுக்கள் உண்டு. இவற்றில் பெரும்பாலானவை முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் LINE (Long Interspersed Nuclear Element) என்று அழைக்கப்படும் ஒருவகை தாவும் மரபணுக்கள் மட்டும் தொடர்ந்து இயங்குகின்றன. கற்றுக்கொள்ளுதல், நினைவுகளைச் சேகரித்தல் போன்ற முக்கியமான மூளைச் செயல்பாடுகளுக்கு இவை தேவைப்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கட்டுரை எதைநோக்கிப் போகிறது என்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள். அதேதான். பேய்க்கணவாய்களிலும் இந்த லைன் வகை தாவும் மரபணுக்கள் இயங்குவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பேய்க்கணவாய்களின் மூளையில், கற்றுக்கொள்வதற்கு உதவும் மூளை பாகங்களில் இந்த மரபணுக்கள் பரபரப்பாக இயங்குகின்றனவாம். கணவாய்களின் இந்த மூளைப்பகுதி நினைவுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளுவது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுவது, கற்றுக்கொண்ட விஷயங்களை மறக்காமல் இருப்பது ஆகியவற்றுக்கு உதவும் மனித மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியைப் போலவே செயல்படுகிறதாம். ஆகவே கணவாய்களின் அதீத அறிவாற்றலுக்கு இது ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.
எல்லா வகைக் கடல்களிலும் காணப்படும் கணவாய்கள், கலிஃபோர்னியாவின் கடற்பகுதியில் மட்டுமே இருக்கும் கணவாய் இனம் என்ற இரு இனங்களில் இந்த அம்சம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த மரபணுக்கள் மூலம் உருவாகும் புரதங்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் செயல்பாடுகளிலும் உதவுகின்றனவாம். இது 'Behavioural plasticity' என்று அழைக்கப்படுகிறது. சுற்றியிருக்கும் சூழலில் புதுவிதமான சவால்கள் வரும்போது அதற்கு ஏற்றவாறு தன்னுடைய செயல்பாடுகளைத் தகவமைத்துக்கொள்வது அறிவாற்றலின் ஒரு அம்சமாகப் பார்க்கப்படுகிறது. லைன் வகை மரபணுக்களிலிருந்து வரும் புரதங்கள், கணவாய்களுக்கு இந்த ஆற்றலை வழங்குகின்றன.

இதில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது - பரிணாமத்தில் பல அடுக்குகள் மேலே இருக்கும் மனித இனத்தில் இருக்கும் மரபணு இயக்கங்கள், முதுகெலும்பற்ற உயிரிகளான கணவாய்களிலும் காணப்படுவது எப்படி? நடுவில் இருக்கும் எந்த உயிரிகளுக்கும் இந்தத் தன்மை இருப்பதாகத் தெரியவில்லையே?
இங்குதான் பரிணாமவியலின் ஆச்சரியமிக்க ஒரு அம்சம் வருகிறது. அதன் பெயர் குவி படிமலர்ச்சி. ஆங்கிலத்தில் 'Convergent Evolution'. அதாவது, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இனங்களாக இருந்தாலும், அவற்றின் சூழ்நிலை தரும் சவால்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில், இரண்டு இனங்களும் தனித்தனியாகப் பரிணாம வளர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான பண்புகளைப் பெறுகின்றன. இங்கும் அப்படிப்பட்ட குவி படிமலர்ச்சிதான் நடந்திருக்கிறது.

கணவாய்களிலும் தாவும் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பல புதிய கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. அடிப்படையில் அறிவாற்றல் என்பது என்ன, மனிதனின் அறிவாற்றல் பரிணாம வளர்ச்சியில் எப்படி உருவானது, அறிவாற்றலுக்கும் மரபணுவுக்கும் இடையே உள்ள நுணுக்கமான பிணைப்புகள் எப்படி இயங்குகின்றன என்பது போன்ற பல கேள்விகளுக்குக் கணவாய்களிடமிருந்து எதிர்காலத்தில் விடை கிடைக்கலாம்!