Published:Updated:

கேரளா: மாஸ் யானை `மங்கலம்குன்னு கர்ணன்' மரணம்... கண்ணீரில் `கடவுளின் தேசம்!'

கர்ணன்

கர்ணன் என்ற ஒரு வளர்ப்பு யானையின் மரணம் ஒட்டுமொத்த கேரளாவையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

கேரளா: மாஸ் யானை `மங்கலம்குன்னு கர்ணன்' மரணம்... கண்ணீரில் `கடவுளின் தேசம்!'

கர்ணன் என்ற ஒரு வளர்ப்பு யானையின் மரணம் ஒட்டுமொத்த கேரளாவையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

Published:Updated:
கர்ணன்

நம் நாட்டில் பல மாநிலங்களில் நடிகர்கள், கிரிக்கெட் அணிகள், வீரர்களை மையமாக வைத்துத்தான் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், கேரளாவில், அது சற்று வித்தியாசமாக இருக்கும். அங்கு போட்டி, யானைகளின் ரசிகர்களுக்குள்தான். ஆம், கேரளாவுக்கும் யானைக்குமான பந்தம் என்பது மிகவும் ஆழமானது. கேரள அரசு முத்திரையில் யானைகள் இடம் பெற்றிருக்கும். யானைகளால் ஒரு ஊரே மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

கர்ணன் யானை
கர்ணன் யானை

மங்கலம்குன்னு பிரதர்ஸ் என்றழைக்கப்படும் பரமேஸ்வரன், ஹரிதாஸ், கேரளாவில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பதில் முக்கிய இடத்தில் உள்ளனர். குருவாயூர் தேவஸ்தானத்தையடுத்து, அங்கு தனியார் தரப்பில் அதிக யானைகள் இருப்பது இவர்களிடம்தான். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அந்த மங்கலம்குன்னில்தான் கர்ணனும் இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யூடியூபில் மங்கலம்குன்னு கர்ணன் என்று தேடிப்பார்த்தால், வரும் ஏராளமான வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளை கடந்திருக்கும். செண்ட மேளம், கலர் புகை, அதிரடி பி.ஜி.எம், சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம், நடனம் என்று ஒரு பக்கா மாஸ் ஹீரோ என்ட்ரி போலதான் கர்ணன் யானை என்ட்ரி இருக்கும். கேரளாவில் இப்படி பல வளர்ப்பு யானைகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. கிட்டத்தட்ட 9 அடி உயரம், மக்களிடம் அன்பாக பழகுவது போன்ற காரணங்களால் கர்ணனுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

கர்ணன் யானை
கர்ணன் யானை

தலபூக்கம் என்று சொல்லப்படும் தலையை நீண்ட நேரம் உயர்த்தி வைக்கும் போட்டியில், பலமுறை வென்று மாஸ் காட்டியிருக்கிறது கர்ணன். அந்தப் போட்டியில் மற்ற யானைகள் கர்ணனை வெல்வது மிகவும் கடினம். அதைவிட உயரமாக இருக்கும் யானைகள்கூட, கர்ணனிடம் தோற்றுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `உயிரே' மற்றும் நடிகர்கள் மோகன்லால், ஜெயராமன் ஆகியோரின் திரைப்படங்களில் கர்ணன் நடித்துள்ளது. கேரளாவில, சில டிவி நிகழ்ச்சிகளிலும் கர்ணன் பங்கேற்றுள்ளது. கர்ணனுக்கு அங்கு பயங்கர டிமாண்ட் என்பதால், ரூ.2.5 கோடி வரை அதை விலைக்கு கேட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. கிட்டத்தட்ட 60 வயதைக் கடந்துவிட்ட கர்ணன், சமீபகாலமாக வயது முதிர்வு பிரச்னையால் சிரமப்பட்டு வந்துள்ளது.

கர்ணன் யானை
கர்ணன் யானை

இந்நிலையில், கடந்த வாரம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கர்ணன் யானை உயிரிழந்துவிட்டது. இதனால், ஒட்டுமொத்த கேரளாவும் கர்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. உயிரிழந்த நாளில், அந்த யானைகள் முகாமுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர், சமூக வலைதளங்களில், தற்போதுவரை கர்ணன் சம்பந்தமான வீடியோக்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன.

மங்கலம்குன்னு பிரதர்ஸில் ஒருவரான பரமேஸ்வரன் மகன் பிரவீன் கூறுகையில், ``கர்ணன் உத்தரப்பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட யானை. முன்பு ஹரிதாஸ் என்பவரிடம் இருந்தது. 2000-ம் ஆண்டில் இருந்து கர்ணன் எங்களிடம் இருக்கிறது. அன்று ஒரு கோயில் நிகழ்ச்சிக்காக, மற்றொரு யானையைத் தயார் செய்து புறப்பட்டுக்கொண்டிருந்தோம். பாகனிடமிருந்து அழைப்பு வந்தது. `கர்ணனால் எழ முடியவில்லை. உடனே வாங்க' என்று கூறினார். பதறியடித்து போய்ப்பார்த்தால், கர்ணன் படுத்துக்கொண்டிருந்தது.

கர்ணன் யானையுடன் பிரவீன்
கர்ணன் யானையுடன் பிரவீன்

அதன் கை, கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. டாக்டர்களை அழைத்தோம். ஆனால், சில நிமிடங்களிலேயே எல்லாம் முடிந்துவிட்டது. ஒரு உயிர் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதை நேரடியாகப் பார்த்தோம். அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல உணர்கிறோம். அதில் இருந்து எங்களால் மீளவே முடியவில்லை.

இறந்தவுடன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், எப்படிதான் தகவல் சென்றது என்று தெரியவில்லை, காலை 6 மணி முதல் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட 20,000 மக்கள் இங்கு குவிந்துவிட்டனர். அதிகாலை 3 மணிக்கு இறந்த யானையின் உடலை இறுதி காரியம் எல்லாம் முடித்து எடுத்துச் செல்ல மாலை 4 மணி ஆகிவிட்டது. மக்கள் கூட்டம் குறையவேயில்லை. நாங்கள் இப்போது வாழும் இந்த வாழ்க்கை யானைகளால்தான் நிகழ்ந்தது.

அதனாலேயே, எங்கள் வீட்டில் எல்லோரும் யானைகள் மீது உயிராக இருப்போம். முன்பெல்லாம், எங்களின் யானைகள் தினசரி எங்கள் வீட்டுக்கு வரும். எந்தப் பிரச்னையும் செய்யாது. வீட்டுக்குச் சென்றால், ஏதாவது ஸ்பெஷல் உணவு கிடைக்கும். அதுதான் காரணம். அப்போது மட்டும் பாகன்கள் பேச்சையும் கேட்காமல் நிற்கும்.

வெல்லம் கேட்டு வீட்டுக்குள் தலையை விடும். அடம்பிடிச்சு ஏதாவது சாப்பிட்டுட்டுத்தான் நகரும். சமயத்தில் யானை பாகன் பேச்சையும் கேட்காமல் சேட்டை செய்துகொண்டிருக்கும். அப்போது, கொஞ்சம் பழத்தைக் கொடுத்து, வாடானு நாங்க சொன்னால் அமைதியாகிடும். கர்ணனுக்கு வயது 60. ஆனால், இப்பவும் நாங்கள் அருகில் செல்லும்போது, தும்பிக்கையில் இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொள்ளும். நம் கைகளை வாயில் வைத்து கொஞ்சும்.

கர்ணன் யானை
கர்ணன் யானை

இறப்பதற்கு முந்தைய நாள் இரவுகூட அதைப் பார்த்து வந்தேன். எந்தப் பிரச்னையும் தெரியவில்லை. எங்கே சென்றாலும் கர்ணனின் நினைவுகள்தான். பிரேதப் பரிசோதனை முடிந்து, அதன் உடலை எரித்துவிட்டோம். தற்போது, அதன் அஸ்தியை வைத்து இறுதி காரியங்கள் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கர்ணன் எங்கள் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருப்பான்" என்றார்.