Published:Updated:

`குதிரைங்க அதிர்ஷ்டத்தை சுழிய வச்சே சொல்லிடலாம்!' கொடைக்கானல் `குதிரை' ரமேஷ்

குதிரை
குதிரை

குதிரைகளின் குணநலன்கள் தொடங்கி குதிரைகளின் அதிர்ஷ்ட நம்பிக்கைகள் வரை பலவிஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ரமேஷ்.

சில்லென வீசும் மாலைக் காற்று; கொடைக்கானல் ஏரிச் சாலையில் குதிரை சவாரி! குதிரை ‘பாலாஜி’யின் உரிமையாளர், எம்.கே.ரமேஷ். ஜாலி பயணத்தின் நடுவே ரமேஷிடம் பேச்சுக்கொடுத்தேன். ``எங்க அப்பா லேக் யூனியன்ல தலைவரா இருந்தவரு. அப்பாதான் குதிரை பத்தி எல்லாமே சொல்லிக்கொடுத்தார். எட்டாவது வரைக்கும் படிச்சேன். அப்போ இருந்து இப்போ வரைக்கும் குதிரைன்னா அவ்வளவு பிடிக்கும்” எனத் துள்ளுகிறார். பாலாஜி - சீட்டா என ஜோடிக்குதிரைகளை வளர்க்கிறார். உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய குதிரைகளின் தரத்தை இவரிடம் வந்து பரிசோதித்துக் கொள்கின்றனர். அந்த அளவுக்கு குதிரை வளர்ப்பில் அத்தனை நுணுக்கங்கள் அறிந்தவர். நல்ல குதிரையேற்ற வீரரும் பயிற்சியாளருமான ரமேஷ் ``ஆர்வத்தோட என்கிட்டே வந்தா, ஒருமணிநேரத்தில குதிரையேற்றப் பயிற்சி கொடுத்து முடிச்சிடுவேன்” என்கிறார்!

குதிரையுடன் ரமேஷ்
குதிரையுடன் ரமேஷ்
படம்: மு.முத்துக்குமரன்

ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை விலைக்குக் கிடைக்கும் நாட்டுக்குதிரைகளைப் பராமரிப்பதற்குத் தினமும் 500 ரூபாய் வரை செலவாகும். வெள்ளையாய் வாட்டசாட்டமாக உள்ள குதிரைகள் ஐந்து லட்சம் வரை விலை போகும். ரேஸ் குதிரைகள் விலை 50,000 ரூபாய்தான் என்றாலும் தினசரிச் செலவு 800 ரூபாயைத் தாண்டும். ரமேஷ் வளர்க்கும் இரண்டு குதிரைகளுமே அசல் நாட்டுக்குதிரைகள்! ஒரு குதிரை சராசரியாக 15 லிட்டர் நீர் அருந்துகிறது. மாலையில் 6 கிலோ கோதுமை தவிடு. "தவிடு கிலோ 30 ரூபா. 35 கிலோ வாங்கினா மூணு நாளைக்கு வரும்” என்கிறார், ரமேஷ். பச்சைக்கடலை, கம்பு, சோளம் எல்லாம் கலந்து ஆளுக்கு 10 கிலோ வரைக்கும் சாப்பிடுகிறார்கள், பாலாஜியும் சீட்டாவும். இருவருக்கும் ஆறு வயதாகிறது!

பற்களைக் கணக்கிட்டு வயது அறியலாம். வாய்க்கு மேலும் கீழும் என 60 முதல் 64 பற்கள் வரை குதிரைக்கு இருக்கும். குட்டி பிறந்து முதல்முறை பல் முளைக்கத் தொடங்கியதும் ஒரு வயது. இப்படித்தான் வயது கணக்கு. சிங்கப்பற்கள் இல்லாத குதிரையை வாங்க மாட்டார்கள். நான்காவது பல் முளைக்கும்போது இரண்டு சிங்கப்பற்கள் முளைக்கும். அந்தப் பற்களுக்கிடையேதான் குதிரையோட்டத்தைக் கட்டுப்படுத்தும் லகான்களைப் பொருத்துகிறார்கள். லகான், கடிவாளம், மிதி இரும்பு, உட்காருவதற்காகக் குதிரைமுதுகில் பொருத்தப்படும் `சேடல்’ என எல்லாவற்றையும் கழற்றிவிட்டுத்தான் குதிரையை விற்பார்கள். ``நல்லா அன்பா பார்த்துக்கிட்டோம்ன்னா, விற்கப்போறோம்ங்கிறத தெரிஞ்சிக்கிட்டு அழத்தொடங்கிடும். அவ்வளவு உணர்வுபூர்வமான விலங்கு, குதிரை” என்கிறார், ரமேஷ்.

லாடம்
லாடம்
படம்: மு.முத்துக்குமரன்

குதிரையின் முடிகள் மிகவும் முக்கியம். முடிஉதிர்வு ஏற்பட்டால் நாட்டுக் கத்தாழை சிகிச்சைசெய்து முடிவளரச்செய்கிறார்கள். எல்லாத் தட்பவெப்பங்களிலும் குதிரை உயிர்பிழைத்திருக்கும் என்றாலும் ஓரிரு ஆண்டுகளுக்கு அவற்றைக் கவனமாகக் காத்துப் பராமரித்து விட்டால், காலப்போக்கில் அவை தானாகவே பழகிக்கொள்ளும். குளிர்காலங்களில் குதிரை முதுகில் பெட்ஷீட்கள் போர்த்திவிடுகின்றனர். உடம்பு சூடேற நெல்களைச் சாப்பிடக்கொடுக்கின்றனர். வெப்பக் காலங்களில் குளிர்ச்சி கொடுக்கும் துளசி, வெந்தயம் ஆகியற்றை குதிரை உண்ணத் தருகின்றனர். தட்பவெப்பம் மாறுகையில் குதிரைகளுக்கு வயிற்று வலி ஏற்படும். அந்த மாதிரித் தருணங்களில் முதலுதவியாகப் பெருங்காயம் கலந்த நீரை குதிரை பருகத் தருகின்றனர்.

பின்னர், குதிரைக்கான ஸ்பெஷல் வண்டிகளில் ஏற்றி மருத்துவமனை கூட்டிச்செல்கின்றனர். மூன்றுமணிநேரத்துக்குள் அவற்றைக் குணப்படுத்திவிட வேண்டும். காலதாமதம், குதிரையின் உயிருக்கு ஆபத்து. படுத்துப் படுத்து எழுந்திருப்பது, வயிற்றையே திரும்பித் திரும்பிப் பார்த்து மோப்பது, கோபமாய் தரையை லாடக் கால்களால் உதைத்துக்கொண்டே இருப்பது எல்லாமே வயிற்றுவலிக்கான அறிகுறிகள். சுதாரிக்க வேண்டும். குதிரைகளுக்கு வாரமொருமுறை லாடம் அடித்துவிட வேண்டும். லாடம் என்பது, சாலையில் நடக்க வசதியாகக் குதிரையின் கால் அளவுக்கேற்ப வளைத்துச்செய்யப்பட்ட இரும்புக்கவசம். குதிரையை லாடம் அடிக்கும் இடத்துக்குக் கூட்டிச்சென்றால், 500 ரூபாய்ச்செலவில் லாடம் அடித்துத் தருகிறார்கள். சுழிபார்த்துக் குதிரை வாங்குவது பற்றிய தங்கள் நம்பிக்கைகளைப் பட்டியலிட்டார், ரமேஷ்.

காதுகளின் முன்னும் பின்னும், `முன்பாடை பின்பாடை சுழி’. வாங்கியவர் வீட்டில் முதல் துக்கமும், 16-ம் நாளில் இரண்டாவது துக்கமும் நிகழும். முதுகுப்புறம், `அசவுச் சுழி’. எப்பேர்ப்பட்ட செல்வந்தனும் இந்தக் குதிரை வாங்கியதும் ஏழையாவான். கால்மூட்டுகளுக்குப் பின்னால் இறங்குவது, `ஒத்த விலங்கு இரட்டை விலங்கு சுழி’. இந்தச் சுழியுடைய குதிரை வாங்கியிருந்தால் குற்றமேதும் செய்யாதபோதும் வழக்குகள் தேடி வரும். பின்காலில், `ஒத்த அம்பு சுழி’. உரிமையாளர் வீட்டில் ஆடு, மாடு, கோழி ஆகிய வேறெந்த உயிரினங்களும் தங்காது. மார்புக்கு நடுவில் `குலவாசி சுழி’. குடும்ப நிம்மதி இருக்காது.

நல்ல சுழிகள் என நான்கைச் சொல்கிறார். இரண்டு கண்களுக்கும் மேலே நெற்றிப்பொட்டில் உள்ள `ஸ்தான சுழி’யும் வலது பக்கம் போகும் `குபேரமேடு சுழி’யும் நல்ல சுழிகள். கழுத்தில் `ராஜாமந்திரி சுழி’ இருந்தால், உரிமையாளர் செல்வந்தராவார். அடிவயிற்றில் `பாடு பட்டறை சுழி’ கொண்ட குதிரை, வாழ்வு முழுக்க ஓயாது உழைக்கும். பக்கத்தில் அமையும் `தன பட்டறைச் சுழி’ நல்வாழ்வு தரும்.

குதிரை வாங்கி மூன்று நான்கு நாள்களில் அதன் குணம் தெரிந்துவிடும்.

குதிரை வாங்கி மூன்று நான்கு நாள்களில் அதன் குணம் தெரிந்துவிடும். நன்றாக அன்பொழுகப் பழகி, அவற்றுக்குப் பிடித்தவற்றை உண்ணக் கொடுத்துப் பாசம் காட்டினால் பல மடங்கு அன்பை அது திரும்பத் தருகிறது. ``அன்புக்கும் மசியாதபோதுதான் எப்போவாச்சும் அடிக்கிறதுண்டு. ஆனாலும் அது ஒரேயொரு அடிதான். பிள்ளையாத்தானே வளர்க்கிறோம். கண்டிக்கிறதில்லையா? அதுபோலத்தான்” என்று சிரிக்கிறார், ரமேஷ். குதிரைகளுக்கு நினைவாற்றல் அதிகம். எங்கேனும் கீழே விழுந்து அடிபட்டால் மீண்டும் அந்த இடத்துக்கு போவதற்கே அஞ்சுமாம்.

Vikatan

பாலாஜி, 120 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. ஓய்வின்றி 60 கி.மீ. தூரம் வரையிலும் ஓடக்கூடியது. மார்வாரிப் பகுதியிலிருந்து வந்த உயர்ரகக்குதிரை. வண்டி, ரேக்ளா பந்தயம் என எல்லாவற்றுக்கும் பயன்படும் குதிரை, இது. இவரிடம் சீட்டா என்ற பெண் குதிரையும் உள்ளது. ``அடம் பண்ணாதுங்க. ரெண்டும் சமர்த்து. பன்னிரண்டு வருசமா எனக்குக் குழந்தை இல்லை. பிற்பாடுதான் என் மனைவிக்குக் கர்ப்பப்பையில நீர்க்கட்டி இருந்தது தெரியவந்துச்சி. சிகிச்சை முடிச்சு, இப்போ மனைவி மூணு மாசக் கர்ப்பிணி. எந்தக் குழந்தை பிறந்தாலும் பாலாஜியும், சீட்டாவும்தான் என்னோட மூத்தப் பிள்ளைங்க!” என பாலாஜியின் கழுத்தைக் கட்டியணைத்தபடி ரமேஷ் கண்கலங்குகிறார். பாலாஜியும் தன் முகத்தால் ரமேஷின் முதுகை வருடுகிறது.

அறிவின் எண்ணிக்கைகளைத் தோற்கடிப்பதெல்லாம், அன்பின் உச்சம்!

அடுத்த கட்டுரைக்கு