Published:Updated:

முக்கடல் அணைப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை!- அச்சத்தில் குமரி மக்கள்

முக்கடல் அணைப்பகுதியில் படுத்துக்கிடந்த சிறுத்தை
முக்கடல் அணைப்பகுதியில் படுத்துக்கிடந்த சிறுத்தை

முக்கடல் அணைப்பகுதியின் மேல்பகுதியில் சிறுத்தை இருப்பது உண்மைதான். அந்தப் பகுதியில் முள் காடாக இருப்பதால் சிறுத்தை இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகரத்துக்கு குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ளது முக்கடல் அணை. 25 அடி உயரம் கொண்ட முக்கடல் அணையிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் மூலம் வடசேரி அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு, மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு பணியில் இருந்த ஊழியர்கள் சிலர் அப்பகுதியில் ஒரு சிறுத்தை படுத்திருப்பதை பார்த்திருக்கிறார்கள். அதில் ஒருவர் சிறுத்தையை வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்தவரை சிறுத்தை திரும்பி பார்த்ததும் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வயதான சிறுத்தை என தகவல் வெளியாகியுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்

முக்கடல் அணைப் பகுதியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் சார்ந்த விளையாட்டுப் பொருள்கள் இருப்பதால் இங்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். எனவே, சிறுத்தையால் பூங்காவுக்கு வருபவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்ற அச்சம் எழுந்துள்ளது.

உடனே வனத்துறையினர் சிறுத்தையை வனத்தின் உள் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து முக்கடல் அணையில் பணிபுரிபவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதுபற்றி நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் பேசினோம், ``முக்கடல் அணைப்பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தையைப் பார்த்துள்ளனர். பகல் நேரத்தில் இதுவரை யார் கண்ணிலும் தென்படவில்லை. சிறுத்தை வந்திருப்பது இதுதான் முதன்முறை. அணைப்பகுதியில் பணிபுரியும் ஊழியர்களை எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.

முக்கடல் அணைப்பகுதியில் படுத்துக்கிடந்த சிறுத்தை
முக்கடல் அணைப்பகுதியில் படுத்துக்கிடந்த சிறுத்தை

இதுகுறித்து பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் (ரேஞ்ச் ஆபீஸர்) திலீபன் கூறுகையில், ``முக்கடல் அணைப்பகுதியின் மேல்பகுதியில் சிறுத்தை இருப்பது உண்மைதான். அந்தப் பகுதியில் முள் காடாக இருப்பதால் சிறுத்தை இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். முள் காடு இல்லையென்றால் புலி இருக்கும். ஆனால், முக்கடல் அணைப்பகுதியில் சிறுத்தை இறங்கியதை யாரும் பார்த்தது இல்லை. இப்போது அந்த வீடியோ வந்ததைப் பார்த்தேன். இதைத்தொடர்ந்து வனத்துறை ஊழியர்களை அங்கு ரவுண்ட்ஸ் போகச் சொல்லியிருக்கிறேன்" என்றார்.

பின் செல்ல