Published:Updated:

அரைகுறை ரிப்போர்ட்... எச்சரித்த உச்ச நீதிமன்றம்! `மாலாச்சி’ விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்

யானையை வனத்துறை வசம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் லட்சுமணன். தற்போது அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

மலாச்சி
மலாச்சி

அந்தமான் உரிமையாளரை ஏமாற்றி வாங்கிய ‘மாலாச்சி’ யானையை, ஆவணங்களின்றி மதுரையில் வளர்த்த மீனாட்சியம்மன் கோயில் ஊழியர் லட்சுமணனைப் பற்றி ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். யானையை வனத்துறை வசம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் லட்சுமணன். தற்போது அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

Vikatan
மலாச்சி
மலாச்சி

உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 12-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஜூன் 14-ம் தேதி மாலாச்சி யானை தமிழக வனத்துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. மதுரை தென்பழஞ்சி அருகே லட்சுமணனுக்குச் சொந்தமான இடத்தில் யானை நிறுத்தப்பட்டிருந்தது. இடத்தையும் யானையையும் மாவூத்களையும் அதிரடியாகத் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குட்படுத்தினர் வனத்துறையினர். ஜூன் 17 அதிகாலையில் யானையை வனத்துறைக்குச் சொந்தமான இடத்துக்குக் கொண்டுசெல்வதாகத் திட்டம் எனத் தகவல் வந்தது. ஆனால், காலையில் கேட்டபோது, ‘உயர்மட்ட ஆலோசனை நடந்துவருகிறது’ என வனத்துறை உயரதிகாரிகள் கூறினர்.

அந்த மனுவை ஜூன் 19 அன்று வழக்காகப் பதிவுசெய்துகொண்டது உச்ச நீதிமன்றம். விசாரணைக்காக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், திருநெல்வேலி கால்நடை மருத்துவர் சுகுமார் ஜூன் 28 அன்று மாலாச்சி யானைக்கு மருத்துவச் சான்று வழங்கினார். மதுரை தல்லாகுளத்திலுள்ள ஆய்வகத்தில் யானையின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் தரப்பட்டன. காசநோய்ப் பரிசோதனை முடிவுகள் மட்டும், சென்னைக் கால்நடை மருத்துவக்கல்லூரியிலிருந்து வழங்கப்பட்டது. அதில், மாலாச்சிக்குக் காசநோய் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

யானை கொடுத்தவரும் வாங்கியவரும்
யானை கொடுத்தவரும் வாங்கியவரும்

வழக்கமாக மருத்துவப் பரிசோதனை விவ்ரங்கள் ஒவ்வொன்றும் தெளிவான விளக்கங்களோடு குறிப்பிடப்பட்டிருக்கும். நோய்க்கான அறிகுறிகள், நோய்த்தன்மைகள் உள்ளிட்டவை அனைத்தும் பரிசோதனை முடிவுகளில் இடம்பெற்றிருக்கும். ஆனால், சென்னைக் கல்லூரியிலிருந்து மருத்துவர் விஜயராணி பெயரில் மதுரை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், ‘டியூபர்குலோசிஸ் பாசிட்டிவ்’ என்று மட்டும் ஒற்றைவரியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொலைபேசியில் விஜயராணியிடம் விபரம் கேட்டோம். “உடனடியாக முடிவுகளைக் கேட்டார்கள். அதனால்தான் மெயில் அனுப்பினோம். ஆனால், முதல்கட்ட ஆய்வுதான் முடித்திருக்கிறோம். இரண்டாம்கட்ட ஆய்வு இன்னும் முடியவில்லை. அதற்குள் முடிவுகளை அனுப்பியது தவறுதான்.

ஒப்புக்கொள்கிறேன்” என்றார். ஆனால், அவசரகதியில் அனுப்பப்பட்ட இந்த முடிவின் அடிப்படையில், ‘பயணப்படத் தகுதியற்ற உடல்நிலை’ எனச் சுகுமார் சான்றளித்திருக்கிறார். யானையைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் கூறப்பட்டது.

விஜயராணி
விஜயராணி

மேல்முறையீட்டு வழக்கை ஜூலை 2-ம் தேதி விசாரித்து முடித்து 8-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘மேல்முறையீடெல்லாம் பிறகு செய்யலாம். முதலில் உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து நடந்துகொள்ளுங்கள். யானையை வனத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, பின்னர் வழக்கு தொடருங்கள்’ என உத்தரவு பிறப்பித்து லட்சுமணன் தரப்பினரின் மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது. மாலாச்சி விவகாரத்தைக் கவனித்து வருவோர் இதில் சம்பந்தப்பட்டுள்ள வனத்துறையினர் மீதும், கால்நடை மருத்துவர்கள் மீதும் சந்தேகம் எழுப்புகிறார்கள். அதை உறுதிசெய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது, உச்ச நீதிமன்ற உத்தரவு. நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடக்கும் மாலாச்சியின் ஒருமாதச் சிறைவாசம் நீடிப்பதும் முடிவதும் வனத்துறை கையில்தான் உள்ளது.