Published:Updated:

மண்புழு மன்னாரு: எருமைகளுக்கு மரியாதை! - கார் விலையைவிட எருமை விலை அதிகம்!

எருமைகளுக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
எருமைகளுக்கு மரியாதை

மாத்தியோசி

மண்புழு மன்னாரு: எருமைகளுக்கு மரியாதை! - கார் விலையைவிட எருமை விலை அதிகம்!

மாத்தியோசி

Published:Updated:
எருமைகளுக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
எருமைகளுக்கு மரியாதை

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் தன் குடும்ப நிகழ்ச்சியில் வட இந்திய இனிப்பு தயாரிக்க எருமைப் பால் 500 லிட்டர் வேண்டும் என்று கேட்டார். களத்தில் இறங்கி விசாரித்த போது ஒரு உண்மை தெரிந்தது. தமிழ்நாட்டில் எருமைப் பண்ணைகள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் உள்ளன. அங்கும் ஒரே நேரத்தில் 500 லிட்டர் பால் கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல் கிடைத்தது.

ஆவின் நிறுவனத்தில் கேட்டுப் பார்க்கலாம் என்று விசாரித்தால், ‘‘எருமைப் பால் வரத்து குறைவாகவே உள்ளது. ஆகையால், பசும் பாலையும் எருமைப்பாலையும் கலந்துதான் வாங்குகிறோம்’’ என்று கைவிரித்துவிட்டார்கள். இதன் மூலம் இன்னொரு உண்மையும் தெரிந்தது. பாக்கெட் பாலில் இருப்பது சுத்தமான பசும் பால் அல்ல எருமை பாலும் கலந்துதான் கொடுக்கிறார்கள். இதன் மூலம் எருமை மாடு வளர்ப்பை கொஞ்சம், கொஞ்சமாக கைவிட்டு வருகிறோம் என்பதை தெரிந்து கொண்டோம். மத்திய மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை (Ministry of Fisheries, Animal Husbandry and Dairying) 2019-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையும் இதைத்தான் உறுதி செய்கிறது. 2012-ம் ஆண்டு 3.77 லட்சம் எருமை மாடுகள் தமிழ்நாட்டில் இருந்துள்ளன. 2019-ம் ஆண்டில் 2.43 லட்சமாகக் குறைந்துவிட்டது. ஆக, 34 சதவிகிதம் கீழே விழுந்துவிட்டது. அதே சமயம் கலப்பினப் பசு மாடுகள் எண்ணிக்கை 2012-ம் ஆண்டு, 30.82 லட்சமாக இருந்தது. 2019-ம் ஆண்டு 37.99 லட்சமாகப் பெருகியுள்ளது. 23 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 9.13 லட்சத்திலிருந்து, 6.85 லட்சமாகக் குறைந்துவிட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே 1.46 கோடி எருமைகள் உள்ள மாநிலம் என்ற பெருமையை உத்தரப்பிரதேசம் பெற்றுள்ளது. நாம் டெல்லி எருமை, முர்ரா எருமை என்று சொல்வதெல்லாம், உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எருமை இனங்கள்தான். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ‘எருமைப் பால் டீ கடை’ என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளதைப் பார்த் துள்ளேன்.

மண்புழு மன்னாரு: எருமைகளுக்கு மரியாதை! - கார் விலையைவிட எருமை விலை அதிகம்!

பசு மாடு வளர்ப்பைக் காட்டிலும் எருமை வளர்ப்பு எளிது. பசுவுக்குக் கொடுக்கும் கவனிப்பைக் காட்டிலும் குறைவாகக் கொடுத்தாலும் குறை வில்லாமல் பால் கொடுக்கும். கொட்டகைகூடத் தேவையில்லை. மரத்தடியிலேயே கட்டி வைக்க லாம். மழைக்கும் வெயிலுக் கும்கூட அஞ்சாது. பசும்பாலைவிட, லிட்டருக்கு 10 ரூபாய் விலையும் அதிகம். புரதச்சத்து, கொழுப்புச் சத்து அதிகம்.

ஒரு காலத்தில் நம் ஊர் டீக்கடைக்காரர்கள் எருமைப் பால்தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்குவார்கள். காரணம் ஒன்றுமில்லை. பசும்பால் தண்ணியாக இருக்கும். எருமைப் பாலில் கூடுதலாகத் தண்ணீர் ஊற்றி டீ, காபி போடலாம் என்பதால்தான். கிராமங்களில் உள்ள டீக்கடைகளில்கூட பாக்கெட் பாலுக்கு மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

வெண்மைப் புரட்சி திட்டம் மூலம் நாட்டுப் பசுக்களை மட்டுமே கலப்பினம் செய்து இனத் தூய்மைக்கு வேட்டு வைத்தார்கள். இதிலிருந்து எருமைகள் தப்பினாலும், இதன் வளர்ப்பை ஊக்கப்படுத்தாமல் கைவிட்டு விட்டார்கள். இது மட்டுமல்ல. எருமைகள் மேய்ந்த மேய்ச்சல் நிலங்களையும் பட்டா போட்டு விற்றுவிட்டார்கள். வெயில் நேரத்தில் எருமைகள் சேற்றில் புரண்டு எழுந்த ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்... காணாமல் போய்விட்டன. இதனால், படிப்படியாக எருமை வளர்ப்பு கைவிடப்பட்டு வருகிறது. கூடவே, எருமை மாடுகளின் விலை 70,000, 80,000 ரூபாய் என்று ஏறிவிட்டதால் எருமை வளர்ப்பு, எல்லோருக்கும் ஏற்றதாக அமையவில்லை. ஆனால், இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எருமை களை மக்கள் வளர்த்து வருவதாக வரலாறும் இலக்கியங்களும் சொல்கின்றன. அதன் தொடர்ச்சியை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் இன பழங்குடி மக்களிடம் இன்றும் காணலாம்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை எருமை மாடுகளுடனே வாழ்பவர்கள் தோடர்கள். எருமை நெய் இல்லாமல் கோயில்களில் விளக்கு ஏற்ற மாட்டார்கள். எருமை மாடு இல்லாத தோடர் வீட்டைப் பார்ப்பது அரிது. தினமும் எருமை மாட்டின் முகத்தில் கண் விழிப்பது புனிதமாகக் கருதுகிறார்கள்.

இன்று கார் வைத்திருப்பவர் களுக்கு மரியாதை கொடுப்பதைப்போல ஒரு காலத்தில் எருமை மாடுகளின் எண்ணிக்கையை வைத்துதான், சமூகத்தில் மனிதர்கள் மதிக்கப் பட்டார்கள். இது தோடர்களிடம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த வேளாண்மை சமூகத்திடமும் மாடுகளின் எண்ணிக்கையை வைத்துதான் செல்வ நிலை மதிப்பீடு செய்யப்பட்டது. இதனால்தான் ‘மாடு’ என்பதைத் திருவள்ளுவர் ‘செல்வம்’ என்று சொல்லியிருக்கிறார்.

மண்புழு மன்னாரு: எருமைகளுக்கு மரியாதை! - கார் விலையைவிட எருமை விலை அதிகம்!

இந்தியாவில் உள்ள 12 எருமை இனங்களில் ‘தோடர் எருமை தனித்தன்மை வாய்ந்தது’ என்று கால்நடை விஞ்ஞானிகள் புகழ் கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,500 மீட்டர் உயரத்தில் இந்த இனம் வாழ்வது இதன் சிறப்பு. மலைப்பகுதிகளில் உள்ள புற்களையும் மூலிகைகளையும் உண்டு வாழ்வதால், இந்த எருமைப் பாலையும் பால் பொருள்களையும் உண்டு வாழும் மக்கள் ஆரோக்கியமாக உள்ளார்கள்.

17-வது நூற்றாண்டுக்கு முன்பு வரை நீலகிரி மலை முழுவதும் பல்லாயிரக்கணக்கில் இருந்த எருமைகள், இப்போது 1,500 எருமைகளே உள்ளன என்று அரசின் புள்ளி விவரம் சொல்கிறது.

அந்த எருமைகள் ஊட்டி பகுதியில் உண்டு களித்த புல்வெளிகள்தான், தேயிலைத் தோட்டங்களாகப் பரந்துகிடக்கின்றன. இதனால் எருமை இனம் அருகிவிட்டது என்று நீங்கள் நினைப்பது சரிதான். ஆனாலும், வேறு ஒரு முக்கியக் காரணமும் உண்டு.

மண்புழு மன்னாரு: எருமைகளுக்கு மரியாதை! - கார் விலையைவிட எருமை விலை அதிகம்!

‘‘முன்பெல்லாம், தோடர் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால். அவர் வீட்டில் உள்ள எருமையை அவிழ்த்து விட்டுவிடுவார்கள். அந்த எருமை, காட்டு விலங்குகள் மூலம் மரணமடைந்து, இறந்தவர்களுக்கு இன்னொரு உலகத்திலும் பால் கொடுக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அண்மைக் காலத்தில் இந்தப் பழக்கத்தை மாற்றி, இறந்தவர்களின் சவக்குழிக்கு அருகிலேயே, எருமையைக் கொன்று புதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படிச் செய்யக் கூடாது என அரசும் பல்வேறு அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு, இப்போதுதான் எருமைகளைக் கொல்வதை நிறுத்தியுள்ளார்கள்’’ என்கிறார் தோடர் இன மக்களிடம் பணியாற்றும் தொண்டு நிறுவன நண்பர்.

ஒருமுறை குஜராத் பயணத்தின்போது, ஆனந்த் மாவட்டத்தில் உள்ள விவசாயி ஒருவரை சந்தித்துப் பேசினேன். தன் வீட்டில் உள்ள உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியவர், ‘‘எங்கள் குடும்பத்தில் இன்னும் முக்கியமான ஒருவர் இருக்கிறார். வாருங்கள் பார்ப்போம்’’ என்று மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

கறுப்பு நிறத்தில் கம்பீரமாக நின்றிருந்தது ஒரு எருமை . ‘‘இது பன்னி எருமை (Banni Buffalo). நானோ கார் விலையை (1.5 லட்சம்) விட இது அதிகம். தினமும் 16 லிட்டருக்கு மேல் கொடுக்கிறது. 10 பசுக்கள், 10 எருமைகள் உள்ளன. பசும்பால் அமுல் நிறுவனத்துக்கும், எருமைப்பால் இனிப்புக் கடைகளுக்கும் கொடுக்கிறேன்’’ என்றார்.

மத்திய மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட அறிக்கை
மத்திய மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட அறிக்கை

பால் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் ‘அமுல் நிறுவனம்’, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால், அங்கு எருமை வளர்ப்பு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

பசும்பால் தனியாகவும், எருமைப் பால் தனியாகவும் பாக்கெட் செய்து விற்பனை செய்கிறார்கள். பசும்பாலைக் காட்டிலும் எருமைப் பால் உடனடியாக விற்று தீர்ந்துவிடுகின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய தகவல்.