Published:Updated:

1 யானை, 4 காட்டுப்பன்றிகள், 2 கீரிகள், 1 பாம்பு, சில காகங்கள்... நீலகிரியில் கருகிசாக யார் காரணம்?

mass wildlife death
mass wildlife death

இந்த வழியாகச் சென்ற யானை மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது. யானையின் சடலத்தை உண்ண வந்த காட்டுப்பன்றிகளும் பாம்பு ஒன்றும் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.

வனவிலங்குகள் நிறைந்த நீலகிரிக் காடுகளில் வேட்டை, வன விலங்குகளின் நடமாட்டம், வனத்திற்குள் அத்துமீறும் நபர்களைக் கண்காணிக்க எனப் பல்வேறு பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு வனத்துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

near erumad
near erumad

அதன்படி, நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி பகுதியில், நேற்று முன்தினம் வனத்துறையைச் சேர்ந்த ஒரு குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேரம்பாடி - எருமாடு காப்புக்காடுக்கு இடையில் உள்ள ஒரு தனியார் தோட்ட வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகித்த வனத்துறை ஊழியர்கள், துர்நாற்றம் வீசும் இடத்திற்குச் சென்று பார்த்தனர். கண்முன் தெரிந்த காட்சியால், ஊழியர்கள் மிரண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

காரணம், அந்த இடத்தில் யானை, காட்டுப்பன்றி, பாம்பு, கீரி, பறவைகள் என காட்டுயிர்கள் ஒரே இடத்தில் கூட்டமாக செத்துக் கிடந்ததுதான். இதைப் பார்த்த ஊழியர்கள், அலறியடித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் பார்வையிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இந்த கோரக் காட்சி பெரும் அதிர்ச்சியை அளித்தது.

mass wildlife death
mass wildlife death
`உணவு, தண்ணீர் எடுக்கவில்லை!' - குட்டியின் சடலத்தருகே 6-வது நாளாக காத்துக்கிடக்கும் தாய் யானை

எதனால் இத்தனை விலங்குகள் இறந்தன என ஆராய்ந்தபோது, அருகில் மின்கம்பி கிடப்பதைக் கண்டனர். அதன்பின்னரே, இவை அனைத்தும் மின்சாரம் தாக்கியதால்தான் உயிரிழந்துள்ளன என யூகித்தனர். ஆய்வு மேற்கொண்டதில், சிங்காராவில் உற்பத்தி செய்யப்பட்டு சேரம்பாடி வழியாக கேரளாவுக்குச் செல்லும் உயர்மின் அழுத்த கோபுரத்தில் மின் கசிவு ஏற்பட்டதால், யானை முதல் பறவைகள் வரை காட்டுயிர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன என்பதைக் கண்டறிந்தனர்.

இந்தத் துயர நிகழ்வுகுறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர், "பராமரிக்கப்படாத மின் தடத்தில் கசிவு ஏற்பட்டு, அருகில் இருந்த செடி கொடிகளுக்கும் மின்சாரம் பரவியுள்ளது. இந்த வழியாகச் சென்ற யானை, மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இறந்த யானையின் சடலத்தை உண்ணவந்த காட்டுப்பன்றிகளும் இருந்துள்ளன. இதேபோல், பாம்பு ஒன்றும் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இறந்த பாம்பை உண்ணவந்த கீரிகளும் இறந்துள்ளன. காக்கை உள்ளிட்ட பறவைகளும் மின்சாரம் தாக்கி இறந்துகிடந்தன. இந்த இடமே வன விலங்குகளின் சடலக்குவியலாகக் காட்சியளித்தது" என்று மிரட்சியுடன் விவரித்தார்.

mass wildlife death
mass wildlife death

இந்தக் கோர நிகழ்வுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, "இந்தச் சம்பவம் நடந்து சுமார் ஐந்து நாள்கள் இருக்கும். இந்தப் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவால்தான் இத்தனை உயிர்ப்பலிகள். வனச்சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மின் வாரியத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வனத்தின் பேரிழப்பு குறித்து 'ஆக்சிஜன் சுற்றுச்சூழல்' அமைப்பைச் சேர்ந்த சுரேஷ், "சிங்காரா மின் நிலையத்திலிருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் கள்ளிக்கோட்டைக்கு, உயர் அழுத்த மின்கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. பெரும்பாலும், வனப்பகுதி வழியாக இந்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் கோபுரத்தில் உள்ள இரும்புக் கம்பத்திற்கு, மின் கம்பிகளிலிருந்து மின்சாரம் பாயாமல் தடுக்க பீங்கான் தடுப்புகள் உள்ளன. அந்த பீங்கான்கள் உடைந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை ஒரு விபத்தாகப் பார்க்க முடியாது.

mass wildlife death
mass wildlife death
`சுருக்குக் கம்பியில் சிக்கிய புலி; அலட்சிய வனத்துறை!' - 17 மணி நேர கோத்தகிரி திக் திக் #SpotReport

வழக்கம்போல் காட்டுயிர்களின் மீதான அலட்சியத்தையே காட்டுகிறது. பல்வேறு இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு வாழும் ஒன்றிரண்டு விலங்குகளையும் இதுபோன்று அலட்சியத்தால் கொல்வது மிகவும் வேதனையானது. வனத்திற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு. மின் வழித்தடங்களை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியமாக இருந்த மின்சாரத்துறை மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு