Published:Updated:

திமிங்கிலங்கள் மனிதர்களை விழுங்குமா? மைக்கேல் பேக்கார்ட்டுக்கு நடந்தது என்ன?

மைக்கேல் பேக்கார்ட்
மைக்கேல் பேக்கார்ட் ( AP )

மைக்கேலை விழுங்கிய கூன்முதுகுத் திமிங்கிலம் ஒரு பலீன் வகைத் திமிங்கிலம். வாயை அகலமாகத் திறக்கும்போது பலீன் திமிங்கிலங்கள் எதிரில் இருப்பதை கவனிப்பதில்லை. அதனால் மைக்கேலும் நீருடன் உள்ளே இழுக்கப்பட்டிருக்கிறார்.

கடல்சார் ஆராய்ச்சியாளர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி - "கடலுக்குள் ஆள்விழுங்கி சுறாக்கள்/திமிங்கிலங்கள் இருக்குமா?" என்பதுதான். சற்றே அச்சத்துடன் குழந்தைகளும், ஆச்சர்யத்துடன் பெரியவர்களும் இந்தக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஒரு திமிங்கிலத்தின் நீளம் சராசரியாகவே நாற்பது அடி எனும்போது, அத்தனை பெரிய விலங்கு நம்மை விழுங்கிவிடும் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.

வரலாற்றிலும் புனைகதைகளிலும் ஆள்விழுங்கித் திமிங்கிலங்கள் அடிக்கடி காட்சி தருகின்றன. பைபிளில் உள்ள ஜோனாவின் கதை, பினாக்கியோ அனிமேஷன் திரைப்படத்தில் வரும் மான்ஸ்ட்ரோ என்று பல புனைவுகளை உதாரணமாக சொல்லலாம். 1891ல், திமிங்கில வேட்டைக்கு சென்ற ஜேம்ஸ் ப்ராட்லி என்பவரை ஒரு திமிங்கிலம் விழுங்கிவிட்டதாகவும், கிட்டத்தட்ட ஒன்றரை நாள்களுக்குப் பிறகு திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து அவரை உயிருடன் மீட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. அவரைப் பலரும் 'நவீன ஜோனா' என்று புகழ்ந்தனர்.

மைக்கேல் பேக்கார்ட்
மைக்கேல் பேக்கார்ட்
Packard Family

சில ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வை விசாரித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், திமிங்கிலங்களின் வயிற்றுக்குள் ஆக்சிஜன் இல்லாமல் அமிலத்துக்குள் ஊறியபிறகு ஒன்றரை நாள்கள் கழித்து ஒருவர் வெளிவருவது சாத்தியமே இல்லை என்று தெரிவித்தார்கள். காலப்போக்கில் ப்ராட்லியுடன் கூட இருந்தவர்களும் அப்படி ஒன்று நடக்கவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவே, இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

2021 ஜூன் 11ம் தேதியன்று அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் சிங்கிறால் மீனவர் ஒருவரை ஒரு திமிங்கிலம் விழுங்கிய செய்தி வைரலாகியிருக்கிறது. அவர் பெயர் மைக்கேல் பேக்கார்ட். சிங்கிறால்களைப் பிடிக்கக் கடல் படுகைகளில் வைக்கப்படும் கூண்டுகளை எடுப்பதற்காகக் கடலுக்குள் இவர் நீந்தியபோது, கூன்முதுகுத் திமிங்கிலம் (Humpback whale) ஒன்று மைக்கேலை விழுங்கிவிட்டது. 30-40 விநாடிகளுக்குள் திமிங்கிலமே அவரை வெளியில் துப்பிவிட்டது. எலும்புமுறிவுகள் எதுவுமின்றி சிறு காயங்களுடன் மைக்கேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.

திமிங்கிலம் ஏன் அவரை விழுங்கவேண்டும்? விழுங்கியபின்பு துப்பியதற்கு என்ன காரணம்?

திமிங்கிலங்களில் இருவகை உண்டு. பற்கள் உடைய திமிங்கிலங்கள் (Toothed whales) என்ற வகைமையைச் சேர்ந்த திமிங்கிலங்களுக்கு வாயில் பற்கள் காணப்படும். இனத்துக்கு இனம் இவற்றின் உணவு முறை மாறும்.

பலீன் தகடு திமிங்கிலம் (Baleen whales) என்ற வகைமையைச் சேர்ந்த திமிங்கிலங்களுக்கு வாயில் பற்கள் கிடையாது. டூத்பிரஷ் போன்ற நீண்ட குச்சிகளைக் கொண்ட ஒரு வடிகட்டும் தகடு மட்டுமே உண்டு. வாயை மிகவும் அகலமாகத் திறந்து பல நூறு லிட்டர் கடல்நீரை இவை அப்படியே விழுங்குகின்றன. விழுங்கிய நீரிலிருந்து பலீன் தகடு சிறு உயிரிகளை வடிகட்டும். சிறு உயிரிகளை மட்டுமே இவை உண்கின்றன என்பதால் இவற்றின் உணவுக்குழலும் மிகவும் குறுகியதாக, அதிகபட்சம் ஒரு கைமுஷ்டியின் அளவே இருக்கும்.

கூன்முதுகுத் திமிங்கிலம் (Humpback Whale)
கூன்முதுகுத் திமிங்கிலம் (Humpback Whale)
மைக்கேலை விழுங்கிய கூன்முதுகுத் திமிங்கிலம் ஒரு பலீன் வகைத் திமிங்கிலம். வாயை அகலமாகத் திறக்கும்போது பலீன் திமிங்கிலங்கள் எதிரில் இருப்பதை கவனிப்பதில்லை. அதனால் மைக்கேலும் நீருடன் உள்ளே இழுக்கப்பட்டிருக்கிறார். வாய்க்குள் உணவுப்பொருளைத் தவிர வேறு ஏதோ ஒன்று இருக்கிறது என்று உணர்ந்த திமிங்கிலம் உடனடியாக அவரைத் துப்பியிருக்கிறது.

100 அடி நீளமும் 199 டன் எடையும் கொண்ட உலகின் மிகப்பெரிய பாலூட்டியான நீலத்திமிங்கிலம்கூட பலீன்வகைத் திமிங்கிலம்தான் என்பது ஆறுதலான செய்தி. திமிங்கிலங்கள் மனிதர்களை விழுங்கித் துப்பிய செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்படி மனிதர்களை விழுங்கித் துப்பும் திமிங்கிலங்கள் எல்லாமே பலீன் திமிங்கிலங்கள் என்பதால், வாயை அகலத்திறக்கும்போது வரும் கவனக்குறைவாலேயே இது நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பற்கள் உடைய திமிங்கிலங்கள் நம்மை விழுங்க வாய்ப்பு உண்டா?

பற்கள் உடைய திமிங்கில வகைகளிலும்கூட பெரும்பாலான இனங்களுக்கு உணவுக்குழல் மிகவும் குறுகியது. ஆனால் ஸ்பெர்ம் வகைத் திமிங்கிலத்தின் (Sperm whale) உணவுக்குழல் பெரியதாக இருக்கும். நாற்பது அடி வளரக்கூடிய பெரிய ஊசிக்கணவாயாக இருந்தாலும் ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் அதை அப்படியே விழுங்கும் இயல்பு கொண்டவை. உணவை அப்படியே விழுங்குவதற்கு ஏதுவாகவே அவற்றின் வாயும் பற்களும் உணவுக்குழலும் அமைக்கப்பட்டிருக்கும்.

தர்க்கரீதியாக இவை மனிதனை விழுங்க சாத்தியக்கூறுகள் உண்டு என்றாலும், இவை சராசரியாகவே 10,000 அடி ஆழத்துக்குக் கீழேதான் வேட்டையாடுகின்றன. அத்தனை ஆழத்த்தில் மனிதர்களால் சாதாரணமாக நீந்திச்செல்ல முடியாது. ஆகவே ஒரு தனி மனிதன் அந்த ஆழத்துக்குச் செல்வதும் அவனைத் திமிங்கிலம் விழுங்குவதும் சாத்தியமில்லை. அவ்வப்போது இவை கடல்பரப்புக்கு வந்தாலும் மனிதர்களிடம் இவை மூர்க்கமாக நடந்துகொள்வதில்லை என்று தெரிவிக்கிறார்கள் பல ஆண்டுகளாகக் கடலில் டைவ் செய்துவரும் புகைப்படக்காரர்கள்.

ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் (Sperm Whales)
ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் (Sperm Whales)
Gabriel Barathieu, CC BY-SA 2.0, via Wikimedia Commons

மனிதர்களை எளிதாகத் தாக்கி உண்ணக்கூடிய ஆற்றல் உள்ள வேறு ஒரு கடல் விலங்கு உண்டு. ஆனால் அதுவும் இதுவரை மனிதர்களை விழுங்கியதில்லை.

ஆர்கா (Orca/Killer whale) என்ற பெயருள்ள இந்தக் கடல்பாலூட்டி, உண்மையில் ஓங்கில் (டால்பின்) குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பெயரே துரதிருஷ்டவசமானது. திமிங்கிலங்களைக் கொல்லக்கூடிய விலங்கு என்ற அர்த்தத்தில் Whale killer என்று இருக்கவேண்டிய பெயர் தலைகீழாக மாறி இந்த விலங்கை வில்லனாக்கிவிட்டது.

இருபது அடி நீளம், ஐந்து டன் எடை கொண்ட இந்த விலங்குகள், கடலின் ஓநாய்கள் என்று அழைக்கப்படுகின்றன. கூட்டமாக வேட்டையாடும் இயல்புடையவை. மனிதர்களைக் கொன்று விழுங்கத் தேவையான உடல் அமைப்பும் ஆற்றலும் பலமும் இவற்றுக்கு உண்டு. ஆனாலும் இவை மனிதர்களைக் கொன்று சாப்பிட்டதில்லை. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஊழிக்காலம் - 23: காலநிலை மாற்றத்தை எப்படித் தடுப்பது? ஒரு தனிநபரும், அரசும் செய்யவேண்டிவை என்னென்ன?
ஆர்காக்கள் மிகவும் புத்திசாலியான விலங்குகள். தலைமுறை தலைமுறையாக அவை ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தைக் கடைபிடிக்கின்றன. திடீரென்று அவை அதை மாற்றிக்கொள்ளாது.

தூரத்திலிருந்து ஒரு மனிதன் கடல்பாலூட்டியைப் போலத் தெரிந்தாலும் அருகில் வந்து பார்த்தபிறகு இவை இரையை இனம்கண்டுகொள்வதால் மனிதர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகின்றன.

கடல்பாலூட்டிகளோடு ஒப்பிடும்போது மனிதனின் உடலில் கொழுப்பு விகிதம் மிகவும் குறைவு. ஆகவே மனிதனை அவை இரையாகவே மதிப்பதில்லை.

ஆர்கா (Orca/Killer whale)
ஆர்கா (Orca/Killer whale)

அதீத அறிவுடைய ஆர்காக்கள் மனித இனத்தை உணர்ந்து மனிதர்களை இரையாக்குவதை தன்னுணர்வோடு தவிர்க்கின்றன என்றுகூட ஒரு கருத்து உண்டு. அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

சீவேர்ல்ட் முதலான மீன் காட்சியகங்களில், பல ஆண்டுகளாக ஒரு சிறிய நீச்சல்குளத்தில் அடைபட்டுக்கிடந்த ஆர்காக்கள் பயிற்சியாளர்களைத் தாக்கிய சம்பவங்கள் உண்டு. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மன உளைச்சல் காரணமாகச் சொல்லப்படுகிறது.

மனிதர்களைக் கொன்று விழுங்கும் திமிங்கிலங்கள் இல்லை என்றாலும், திமிங்கிலத்தின் வாய்க்குள் சில நொடிகள் சென்றுவந்த மனிதர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாகவே இருக்கும். மற்றபடி ஆள்விழுங்கிக் கடல்விலங்குகளைப் பற்றிய விவரங்கள் எல்லாமே ஹாலிவுட் பிளாக்பஸ்டர் கதாசிரியர்களின் கற்பனையிலிருந்து உதித்த ஃபேன்டஸி புனைவுகள்தான்.
அடுத்த கட்டுரைக்கு