Published:Updated:

இயற்கை விவசாயம், காயம்பட்ட பிராணிகளைப் பாதுகாத்தல்.... இது காரைக்குடி தம்பிமணியின் கதை!

செல்ல நாய் கூலியுடன் தம்பிமணி
செல்ல நாய் கூலியுடன் தம்பிமணி ( சாய்தர்மராஜ் )

காரைக்குடியில் இயற்கை விவசாயம் செய்துகொண்டே பிராணிகளைப் பராமரிக்கும் தம்பிமணியின் கதை!

`மா, பலா, வாழை என்று முக்கனி' மரங்கள் மட்டுமல்ல நெல்லி, வேம்பு, புங்கை, வாகை என்று பல்வேறு நாட்டு வகை மரங்களும் 5 ஏக்கர் அளவுள்ள இடத்தில் நிறைந்திருந்தன. இந்தப் பசுமையான சூழலுக்குள் அடிபட்ட நாய்க்குட்டி, சேவல், கோழி, கால் குளம்பு உடைந்த குதிரை, புண் ஏற்பட்டு புழுக்கள் வைத்த மாடுகள் என்று ஆதரவின்றி கைவிடப்பட்ட பல்வேறு ஜீவ ராசிகளும் `தம்பி மணி'யைச் சுற்றி வந்தன.

அடிபட்ட குதிரை
அடிபட்ட குதிரை
சாய்தர்மராஜ்

`இங்க வாத்தா, அங்க போத்தா', `சேட்ட செய்யாம சும்மா இருத்தா' என்று செட்டிநாடு மொழிநடையில் பிராணிகளைக் கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்தார், காரைக்குடியை அடுத்த கருநாவல்குடியைச் சேர்ந்தவர் தம்பி மணி. சாக்கோட்டைப் பகுதியில் டெய்லர் கடை நடத்திக்கொண்டு, இயற்கை விவசாயமும் செய்துவரும் தம்பி மணி, கவனிப்பாரற்று கிடக்கும் விலங்குகளுக்கு அடைக்கலம் தருகிறார். அதுமாதிரியான விலங்குகளைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து தனது தோட்டத்தில் மருந்து போட்டு பாதுகாத்து வருவதை எதிர்பார்ப்பற்ற சேவையாகச் செய்துவருகிறார்.

`தம்பிமணியை’ அவரது தோட்டத்தில் சந்தித்துப் பேசினோம். ``நாங்கள் பாரம்பர்யமாக விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கிணற்றுப் பாசனம் செய்துகொண்டிருந்த எங்களுக்குக் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியவில்லை. மழையும் கைகொடுக்கல.

தனது கடையில் டெய்லர் பணியில்
தனது கடையில் டெய்லர் பணியில்

விவசாயமே செய்ய முடியாமல் போய்விட்டதால் சிங்கப்பூருக்குப் போய்ட்டேன். அங்கே ஏழு வருஷம் வேலைபார்த்தேன். நான் செஞ்சுகிட்டு இருந்த எலெக்ட்ரிஷீயன் வேலையில வருமானம் வந்தாலும் திருப்தி வரல. அதனால் ஊருக்கே திரும்பி வந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். கடுமையான வறட்சியையும் சந்தித்த கட்டத்திலும் விவசாயம் செய்யவதில் உறுதியாக இருந்தேன். அப்போது சொட்டு நீர்ப் பாசனமும் கரிம உரங்களும் கைகொடுத்தது.

கூடுதலாக விவசாய நிலங்களையும் வாங்கிப் போட்டு விவசாயம் செய்தேன். `பசுமை விகடன்' படித்துப் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதன் மூலம் பொருளாதாரத்துலேயும் கொஞ்சம் முன்னேற்றம் கிடைத்தது. சிவகங்கை மண்ணில் வராது என்று சொன்ன பீட் ரூட், கேரட், பீன்ஸ், நூக்கல்னு பல காய்கறிகளையும் இயற்கை உரங்களால் பயிர்செய்து காட்டினேன்.

அடிபட்ட நிலையில் பாதுகாப்பு
அடிபட்ட நிலையில் பாதுகாப்பு

தற்போது நெல், வெண்டை, கத்திரி, பாகற்காய் போட்டுள்ளேன். கீரையில் நல்ல லாபம் கிடைத்தாலும் மழைக்காலம் என்பதால் அதைப் பயிரிடவில்லை.

மிளகு நெல் எனும் பாரம்பர்ய ரகத்தை சாப்பாட்டுக்கு பயிரிடுகிறேன். அதில் கஞ்சி வைத்தால் வாசனை கமகமவென வரும். இதனால் பலரும் என்னிடம் விதை நெல் வாங்கிச் செல்கின்றனர்" என்றவரிடம் விலங்குகளைப் பராமரிப்பது தொடர்பாகக் கேட்டேன்.

``சாக்கோட்டையில் டெய்லர் கடை வைத்துள்ளேன். மொத்தம் 7 நபர்கள் என்னுடைய கடையில் வேலை செய்கின்றனர். தோட்டத்தில் வீடு கட்டி வசிக்கிறோம். என்னுடைய குடும்பமும் தம்பியுடைய குடும்பமும் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம்.

சாலையில் கிடந்த மாட்டுக்கு வைத்தியம்
சாலையில் கிடந்த மாட்டுக்கு வைத்தியம்

இந்நிலையில்தான் குரங்கு, ஆடு, மாடு, நாய், குதிரை, பறவைகள் என்று எது அடிபட்டுக் கிடந்தாலும் எடுத்து வந்து அதற்கு இயற்கை முறையில் மருத்துவம் பார்த்து வளர்க்கிறோம். அதன் உரிமையாளர்கள் வந்து கேட்டால் அவர்களிடம் இனி இந்தப் பிராணியை சரியாகப் பார்த்துக்கொள்வோம் என்று எழுதி கையெழுத்து வாங்கிய பின்புதான் ஒப்படைக்கிறேன்.

செல்லப் பிராணிகள், கால்நடையை வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கு நோய் அல்லது காயம் ஏற்பட்டால் அவற்றைக் கவனித்துக்கொள்ள முடியாமல் சாலைகளில் விட்டுச் செல்கிறார்கள். பெற்ற குழந்தையையே குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் மனித இனம் பிற உயிரினங்களை உதாசினப் படுத்துவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. குழந்தைகளைக்கூட காப்பாற்ற பல ஆசிரமங்கள் உள்ளன.

நாய்க் குட்டிகள்
நாய்க் குட்டிகள்

ஆனால் சொறி சிரங்கு, காயம்பட்டுப் புழு வைத்தது, நொண்டி, முடமாகக் கிடக்கும் இந்த ஜீவ ராசிகளைப் பாதுகாக்கத்தான் யாருமில்லை. அதனால்தான் நான் இந்தக் குட்டிச் செல்லங்களை எடுத்து நோயிலிருந்து மீட்டு வளர்க்கிறேன். என்னுடைய பாதி வருமானம் இதுங்களுக்குத்தான் செலவு பண்றேன். நூற்றுக்கணக்கான நாய்கள், மாடுகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளேன். என்னுடைய தோட்டத்தில் கிடைக்கும் மூலிகைகளை வைத்துச் சரி செய்துவிடுகிறேன்.

என்னுடன் என் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் பெரும் ஆதரவை அளிக்கின்றனர். காரைக்குடியைச் சேர்ந்த மக்கள் உரிமைக் கழக நண்பர்கள் பல அடிபட்ட விலங்குகளை எடுத்து வந்து கொடுத்துள்ளனர். அவற்றைச் சரிசெய்து கொடுத்துவிடுவேன். எவ்வளவு பெரிய புண்ணாக இருந்தாலும் கிணற்றுப் பச்சிலை வைத்துச் கட்டினால் ஒரு வாரத்துக்குள் குணமாகி நடக்க ஆரம்பித்துவிடும்.

செல்லமாக ஓடிவரும் நாய்
செல்லமாக ஓடிவரும் நாய்

இப்படி ஒவ்வொரு நோய்க்கும் தனித் தனி மருத்துவம் செய்து குணமாக்கிவிடுவேன். எங்கிருந்து வேண்டுமானாலும் அடிபட்ட , நோய்வாய்ப்பட்ட விலங்களைக் கொண்டு வந்தாலும் சரி செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்.

அதற்காக நான் பணமும் பெறுவதில்லை. யாரும் விரும்பினால் இங்கிருக்கும் பிராணிகளுக்கு உணவு வழங்கலாம்.

தம்பி மணி
தம்பி மணி

என்னுடைய தோட்டத்தில் பிராணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதற்குத் தனி செட்டு தேவைப்படுகிறது. அதைச் சமூக ஆர்வலர்கள் செய்துகொடுத்து வருகின்றனர். இதனால் இன்னும் பல செல்லங்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை வருகிறது” என்றார்.

தன்னுடைய வருமானத்துக்கும் விஞ்சிய சேவை செய்துவருகிறார் தம்பிமணி. நாம் அவர் தோட்டத்தில் சென்று பார்க்கும்போது மிகவும் மோசமான நிலையில் பல உயிர்கள் இருந்தன. அவற்றைக் காப்பாற்றி புத்துயிர் கொடுத்துள்ளார் தம்பி மணி. அவரின் சேவை நம்மை நெகிழவைத்தது.

அடுத்த கட்டுரைக்கு