Published:Updated:

``ரெண்டு கீரி, நாலு பூனை... எல்லாரும் எம் பேரப்புள்ளைக!"- வித்தியாச மனிதர் அமீர்

கீரிக்கு உணவளிக்கும் அமீர் அம்சா
News
கீரிக்கு உணவளிக்கும் அமீர் அம்சா

`அறிவு', `எலிக்குஞ்சு' எனக்கூப்பிட்டால் அடுத்த நொடியில் முன் வந்து நிற்கின்றன இரண்டு கீரிப்பிள்ளைகள். தினமும் உணவளித்து பேரப்பிள்ளைகள்போல பாசம்காட்டி வளர்த்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த அமீர் அம்சா.

சிற்றினம் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவரிடத்திலும் பரவலாகப் பரவிக்கிடப்பது அன்பு ஒன்றுதான். அதனால்தான், அன்புக்கு மட்டுமே அடிமையாவதும், அடிபணிவதும் நிகழ்கிறது. மனிதனுக்கு மனிதன் என்றாலும் சரி, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே என்றாலும் சரி, அன்புதான் பாலமாய் உள்ளது. பிரமாண்ட விலங்குகளும், விஷமுள்ள பிராணிகளும்கூட மனிதன் சொன்ன சொல்லுக்கு கட்டுப்படும் மாயாஜாலம், அன்பெனும் மாயையால்தான் நிகழ்கிறது.

அமீர் அம்சா
அமீர் அம்சா

இயல்பாக வீடுகளில் நாய், பூனை, முயல், புறா, கோழி, வாத்து, காதல் பறவைகள் ஆகியவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறோம். ஆனால் அமீர் அம்சா, ஒரு கீரியை செல்லப்பிராணியாக வளர்க்கிறார். `பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்பார்கள். அந்தப் பாம்பையும் நடுங்கச்செய்யும் சக்தி கீரிப்பிள்ளைக்கு உண்டு. கீரியின் தடித்த தோலும் சடுதியாக இயங்கும் ஆற்றலும் பாம்புகளுக்கு கிலி ஏற்படுத்தும். இதன் தோலில் `அசிட்டைல்கோலின்’ என்னும் வேதிப்பொருள் இருப்பதால் பாம்பின் நஞ்சை எதிர்க்கும் திறன் உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆங்கிலத்தில் `மங்கூஸ்' என்றழைக்கப்படும் இந்தப் பிராணி, உண்மையில் கூச்ச சுபாவம் உடையது. மனிதர்களிடத்தில் அவ்வளவு எளிதில் அண்டாது. மனிதர்களின் நடமாட்டத்தை உணர்ந்தாலே அவ்விடத்தைவிட்டு தொலைதூரத்துக்கு ஓடிச்செல்லும் சுபாவம் உடைய இந்தப் பிராணியைத் தனது பேரக் குழந்தைகளுக்கு இணையாகப் பாசத்துடன் வளர்த்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த அமீர்.

பொரிகடலை தின்னும் கீரி
பொரிகடலை தின்னும் கீரி

தூத்துக்குடி - பழைய துறைமுகம் செல்லும் சாலையில் உள்ளது ஜாமியா பள்ளிவாசல். இந்தப் பள்ளிவாசலில் `கபர்ஸ்தான்' என்று சொல்லப்படும் இடுகாட்டில் வேலைசெய்து வருபவர்தான் அமீர் அம்சா. பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள இடுகாட்டில் தினமும் தோட்ட வேலைகளைக் கவனிப்பதும், தன் வரவை எதிர்நோக்கும் செல்லப்பிராணிகளான பூனை, கீரிகளின் வயிற்றுப் பசியைப் போக்குவதும்தான் அவரது பணி. தினமும் பள்ளிவாசலுக்கு வரும்போது தனக்கான மதிய உணவுடன் சேர்த்து கீரிப் பிள்ளைகளுக்கும் பூனைகளுக்கும் சாப்பாடு எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அமீர் அம்சா பாய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செல்லப்பிராணிகளுக்காக மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளையும் வாங்கி மதிய உணவோடு சேர்த்து தருகிறார். மதிய உணவு இடைவேளையின்போது `அறிவு', `எலிக்குஞ்சு' எனக் கூப்பிடும் ஒற்றைச் சத்தத்கு எங்கிருந்தாலும் ஓடிவந்து முன் நிற்கின்றன கீரிப்பிள்ளைகள். பூனைகளோடு, கீரிப்பிள்ளைகளும் இணக்கமாக இருந்து அவர் தரும் உணவை மகிழ்ச்சியுடன் உண்டு செல்கின்றன. ``வா" என்றால் ஓடி வருவதும் ``போ" என்றால் ஓடிச் செல்வதும் எந்தப் புரிதலின் அடிப்படையில் நிகழ்கிறது என ஆராய்ந்தால் நமக்கு ஆச்சர்யம் மட்டுமே விடையாகக் கிடைக்கிறது.

உணவளிக்கும் அமீர்
உணவளிக்கும் அமீர்

கீரிப்பிள்ளைகளை செல்லப்பிராணிகளானது பற்றி அமீர்பாயிடம் பேசினோம், ``15 வருஷமாவே இங்கதான் வேலை பார்த்துட்டு இருக்கேன். தினமும் தோட்டத்திலும் இடுகாட்டிலும் வேலை செய்யும்போது அங்கு சுற்றித் திரிந்த பூனைகள் என்னையும் சுற்றி வந்துச்சு. மதியம் நான் சாப்பிடும்போதும், என் முன்னால வந்து நிற்கும். சாப்பாட்டுல ரெண்டு உருண்டை பிடிச்சு வைப்பேன்.

சாப்பிட்டுட்டு போயிடும். தொடர்ந்து நான் எங்க போனாலும் எங்கூடவே வர ஆரம்பிச்சுது. என்னை யாராவது திட்டினாலும் எதிர்த்துப் பாயுற அளவுக்கு ரொம்ப பாசமாயிடுச்சு. தினமும் காலையில 10 மணிக்கு உளுந்த வடையைப் பிச்சுப் போடுவேன். மதியம் நான் கொண்டு வர்ற சாப்பாட்டு உருண்டை. மதியம் 3 மணிக்கு முறுக்குகளை உடைச்சுப் போடுவேன். வடைக்குப் பதிலா பொரிகடலை, மிக்சர், காரச்சேவுகளையும் போடுவேன். சில நேரங்கள்ல மீன், சிக்கன், மட்டன் வாங்கிப் போடுவேன். நாலு மாசத்துக்கு முன்னால ஒரு நாள் பூனைகளுக்கு மதியம் சாப்பாடு போடும்போது ஒரு கீரிப்பிள்ளை வந்துச்சு. பயந்து பயந்து சாப்பிட்டுட்டு ஓடிடுச்சு. அடுத்தநாளும் அதே நேரத்துக்கு வந்துச்சு. நாலாவது நாள் என் பக்கத்துல வந்து நின்னுச்சு. ஒரு உருண்டை சாதத்தை உருட்டி வச்சேன்.

பூனைகளுடன் உணவு தின்னும் கீரி
பூனைகளுடன் உணவு தின்னும் கீரி

வழக்கமா சாப்பிட்டதும் ஓடிப்போகும் கீரி, அன்னைக்கு ஓடாம 10 நிமிசம் கீச்... கீச்...னு சத்தம் போட்டுக்கிட்டே நின்னுச்சு. ``போ...”ன்னு சொன்னேன்... கொஞ்ச தூரம் ஓடிப் போயி நின்னுச்சு. ``வா...”ன்னு கூப்பிட்டேன். உடனே, ஓடி வந்துச்சு. 'ச்சே... இவ்வளவு அறிவா இருக்கே'ன்னு `அறிவு'னு பேரு வச்சுட்டேன். அதற்கு அடுத்த நாள் மதியம் `ஏய் அறிவு…' னு கூப்பிட்டதும் ஓடி வந்து முன்னால நின்னுச்சு. அதுக்குப் பிறகு, 10 நாளா அறிவைக் காணோம். திடீர்னு ஒருநாள் ஒரு கீரிக்குஞ்சுடன் வந்து நின்னுச்சு. `குட்டி போடுறதுக்காகத்தான் வேற இடத்துக்குப் போனியா'னு சிரிச்சபடியே கேட்டுட்டு சாப்பாட்டை உருட்டி வச்சேன்.

அறிவோட கீரிக்குட்டி, பார்ப்பதற்கு எலிக்குஞ்சு போல இருந்ததால, குட்டிக்கு ``எலிக்குஞ்சு”ன்னு பேரு வச்சுட்டேன். ``ஏய்…. அறிவு… எலிக்குஞ்சு”ன்னு கூப்பிட்டா தாயும் பிள்ளையும் வந்துடும். தொடர்ந்து பூனைகளும் கீரிகளும் ஒண்ணா சேர்ந்தே சாப்பிட ஆரம்பிச்சுது. பார்க்குறதுக்கும் சந்தோஷமா இருந்துச்சு. பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வர்றவங்க எல்லாருமே நான் கூப்பிட்ட குரலுக்கு பூனைகளும் கீரிகளும் ஓடி வர்றதை ஆச்சர்யமாகப் பார்த்தாங்க. இந்த விஷயம் பள்ளிவாசல் பஜார் முழுக்கப் பரவ… கீரியைப் பார்க்க தினமும் ஒரு கூட்டமே வர ஆரம்பிச்சுது. சரியா காலையில 10 மணிக்கும் மதியம் 2 மணிக்கும், சாயங்காலம் 4 மணிக்கும் கீரியைக் கூப்பிடுவேன். இதற்கு இடைப்பட்ட நேரத்துல கூப்பிட்டா சில நேரங்களில் வருவதற்கு தாமதமாகும்.

கீரியை அழைக்கும் அமீர்
கீரியை அழைக்கும் அமீர்

ஒருநாள் நான் வரலேன்னாகூட அந்த நேரத்துக்கு தோட்டத்துல அங்கயும் இங்கயும் ஓடிக்கிட்டு இருக்கும். இவங்களுக்காகவேகூட நான் லீவு போட யோசிக்கிறேன். பெத்த பிள்ளைகளே இந்தக் காலத்துல சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்குது. வழக்கமா நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள்தாம் சொல்வதைக் கேட்கும். ஆனா, கீரிப்பிள்ளை சொன்ன பேச்சைக் கேட்குதுன்னா எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு. இந்த ரெண்டு கீரிப்பிள்ளைகளுமே என்னோட பேரப்பிள்ளைகள்” என்றபடியே அறிவையும் எலிக்குஞ்சையும் பாசத்துடன் உரத்த குரலில் கூப்பிட, முயல் வேகத்தில் அமீரின் முன் வந்து நின்றன அவரின் பேரப்பிள்ளைகள்.