“பாதமிரண்டில் பன்மணிச்சதங்கை... கீதம் பாட... கிண்கிணி ஆட!’’ - கதிரவன் முழுதாகக் கண்விழித்திடாத அதிகாலைப்பொழுது. சென்னை அருகே பம்மலில் இருக்கும் விஜயபிரியாவின் வீட்டிற்குள் நாம் உள்ளே நுழையும்போது, மெல்லிய ஓசையாய் செவிகளை நிறைத்துக்கொண்டிருந்தது கந்தசஷ்டி கவசம். பறவைகளின் கீச்சொலிகள், அந்த கீதத்துக்குப் பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டிருந்தன. எங்குமே கேட்டிராத ஓர் இசைக்கோவை.

நம்மை வரவேற்ற கையோடு, மூன்று வாளிகளை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் செல்கிறார் விஜயபிரியா. ஒரு பாத்திரம் நிறைய பால் சாதம்; மற்றொன்றில் நன்கு ஊறியிருந்த அரிசி; இன்னொன்றில் கம்பும் சோளமும் கலந்த உணவுக்கலவை... ஆங்காங்கே சின்னச்சின்னக் குவியலாய் பால் சாதத்தை வைத்துவிட்டு, அங்கிருந்த மரப்பலகையிலும் திண்டிலும், ஊறிய அரிசியை இடைவெளி விட்டு வைக்கிறார். கம்பு, சோளத்தை மொட்டை மாடியெங்கும் விதை தூவுவது போலத் தூவி விடுகிறார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஆறு மணிக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் மென்மையாய்ப் பரவும் நேரத்தில், வானத்திலிருந்து எல்லா திசைகளிலும் அந்த விருந்தாளிகள் பறந்து வரத்தொடங்குகிறார்கள். கூட்டமாய் வந்த காகங்கள், பால் சாதத்தை உண்டு சிறகுகளைப் படபடத்து நன்றியையும் உற்சாகத்தையும் அறிவிக்கின்றன. எங்கிருந்தோ ஒரே ஒரு கிளி வந்து உட்கார்ந்து ஒரே ஒரு கீச்சொலி எழுப்ப... அடுத்த நொடியே சுற்றிலும் மரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான கிளிகள் மொத்தமாய் அந்த மரப்பலகை களையும், திண்டு களையும் ஆக்கிரமித்தன. திடீரென மற்றொரு திசையிலிருந்து பெரும் புறாக் கூட்டம் ஒன்று மொத்த மொட்டை மாடியையும் ஆட்கொண்டது. பிரியா முன்பெல்லாம் காகங்களுக்கு மட்டும் தான் உணவளித்து வந்துள்ளார். மூன்று வருடங்களுக்கு முன் ஒரு நாள் அவருடைய வீட்டு வாசலில் ஒரு கிளி இறகில் அடிபட்டுக் கிடந் துள்ளது. அந்தக் கிளியை மீட்டு அடிபட்ட இடத்தில் மருந்திட்டு, உணவளித்துப் பராமரித்துள்ளார். நான்கு நாள்களுக்குப் பின் சரியானதும் அந்தக் கிளி பறந்து சென்றுவிடுகிறது. அதற்கடுத்த இரண்டு நாள்கள் காகங்களுக்கு உணவளிக்கும் போது மூன்று கிளிகள் அவரின் வீட்டைச் சுற்றி வந்துள்ளன.

அதற்கடுத்த நாள் கிளிகளுக்கும் உணவு வைத்துப் பார்ப்போமே என்று தனியே உணவு வைத் துள்ளார். மூன்று கிளிகளும் அந்த உணவை உண்டு உற்சாகத்தோடு திரும்பி யிருக்கின்றன. அதற்கடுத்த ஒரு வாரத்திலேயே கிளிகளின் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனிடையே தான் இரண்டு வருடங்களுக்கு முன் புறாக்களும் வரத் தொடங்கியிருக்கின்றன. இப்போது மினி சரணாலயமாக மாறியிருக்கிறது விஜயபிரியாவின் வீடு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘நான் வெளியூர் சென்றாலும் பறவைகளுக்கு ஒருநாளும் உணவளிக்காமல் இருந்ததில்லை. மாற்று ஏற்பாடு செய்துவிட்டுத் தான் எங்கும் செல்வேன். புயல் மழை என்று எதற்காகவும் நிறுத்தியதே கிடையாது. என் குடும்பத்தினர் அனைவரின் ஒத்துழைப்பில்லாவிட்டால் இது சாத்தியமேயில்லை. என்னைப் பார்த்துவிட்டு அக்கம்பக்கம் இருக்கும் பலரும், கிளிகளுக்கு உணவு வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நண்பர்கள் சிலர் அரிசி மூட்டைகளைக் கொடுத்து விட்டுப் போவார்கள்’’ என்று தன் பறவைக் காதலை விளக்குகிறார் விஜயபிரியா.
தனக்குப் பின் இந்தப் பணியைத் தொடர்வதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கும் திட்டத்திலும் இருக்கிறார், இந்தப் பறவைகளின் காதலி.