Election bannerElection banner
Published:Updated:

வெறிச்சோடிய சாலைகள், படையெடுக்கும் குரங்குகள்...ஒற்றை வாழைப்பழத்திற்கு நடக்கும் யுத்தம்! #Corona

வெறிச்சோடிய சாலைகள், படையெடுக்கும் குரங்குகள்
வெறிச்சோடிய சாலைகள், படையெடுக்கும் குரங்குகள்

லோப்புரி நகரில் இரண்டு குரங்கு கேங்குகள் இருக்கின்றன. கோயில் குரங்குகள் ஒரு கேங், நகரத்தைச் சுற்றிவரும் குரங்குகள் ஒரு கேங். இந்த கேங்குகளிடையேதான் மோதல் வெடித்துள்ளது.

உலகமெங்கும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்க சுற்றுலாக்களை அனைவரும் தவிர்த்துவருகின்றனர். தாய்லாந்திலும் இதே நிலைதான். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இந்தக் கோடை சீசனில் சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் என அனைவரும் பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் அங்கு இன்னொரு முக்கிய உயிரினத்திற்கும் இந்தச் சூழல் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகிறது.

Corona Virus
Corona Virus

பாங்காக்கின் வடகிழக்கில் இருக்கும் சுற்றுலா நகரமான லோப்புரி (Lopburi) சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. அதிகளவில் குரங்குகள் வாழும் இந்த ஊரில் இப்படி சுற்றுலாப் பயணிகள் வராமல் இருப்பது குரங்குகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குரங்குகள் உணவுக்குப் பயணிகளையே நம்பியிருந்தன.

பாபநாசம், குற்றாலம் போன்ற இடங்களுக்குச் சென்றிருப்பவர்கள் உணவுக்காகக் குரங்குகள் செய்யும் சேட்டைகளைப் பார்த்திருப்பார்கள். பயணிகள் கீழே போடும் உணவுகளைச் சாப்பிடும், இல்லை பயணிகளிடமிருந்து உணவைத் திருடக்கூடச் செய்யும். இப்படியாகத்தான் லோப்புரி நகரிலும் வாழ்ந்துவந்தன குரங்குகள்.

ஆனால், மனித நடமாட்டமே இல்லாததால் உணவு தேடி சாலைகளில் படையெடுத்துள்ளன இந்தக் குரங்குகள். கிடைக்கும் குறைந்தபட்ச உணவுக்குச் சிறிய யுத்தங்கள் அங்கு நிகழ்ந்துவருகின்றன. அந்த ஊரின் காலியான சாலைகள் போர்க்களம் போலத்தான் காட்சியளிக்கின்றன. இதை வீடியோ எடுத்து சிலர் பதிவிட இப்போது சமூக வலைதளங்களில் அவை வைரலாகி வருகின்றன. அப்படியான வீடியோ ஒன்றை எடுத்த சசாலுக் ரட்டனசாய் (Sasaluk Rattanachai), ``அவை குரங்குகளைப் போலவே நடந்துகொள்ளவில்லை, காட்டுநாய்கள் போல மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டன. அவை, பசியின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்; மறைத்த அரசு? - ஈரானின் நிலையும் சாட்டிலைட் புகைப்பட சர்ச்சையும் #Corona

கேங் வார்!

ஒரு வாழைப்பழத்திற்காக நடந்திருக்கும் இந்தச் சண்டை இரு குரங்கு கேங்குகளிடையே நடந்ததாகத் தெரியவந்துள்ளது. Bangkok Post என்னும் உள்ளூர்ப் பத்திரிகையின்படி லோப்புரி நகரில் இரண்டு குரங்கு கேங்குகள் இருக்கின்றன. கோயில் குரங்குகள் ஒரு கேங், நகரத்தைச் சுற்றிவரும் குரங்குகள் ஒரு கேங்.

குரங்குகளின் கேங் வார்!
குரங்குகளின் கேங் வார்!

தாதாக்களின் கேங் போல இரண்டு குரங்குகளின் கேங்கும் தங்களுக்கென ஏரியாக்களைப் பிரித்து ஆதிக்கம் செலுத்திவந்தன. இந்த இரு குழுக்களின் ஏரியாவையும் ஒரு ரயில் தண்டவாளம் பிரித்து வைத்துவந்தது. பொதுவாக அந்தக் கோட்டைத் தாண்டி இரு குழுக்களுமே செல்வது கிடையாது. ஆனால், இந்த உணவுப் பற்றாக்குறை இரு கேங்குகளிடையேவும் பெரும் மோதலை ஏற்படுத்தியிருக்கிறது.

`பசியில் நீ நீயாக இருக்க மாட்ட' என்ற பிரபல விளம்பரம் ஒன்றைப் பார்த்திருப்போம். அது குரங்குகளுக்கும் பொருந்தும் போல. இந்த நிகழ்வு நம்மைச் சார்ந்து எத்தனை உயிர்கள் இருக்கின்றன. அவை எப்படி கொரோனாவால் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஒரு சிறிய சான்று.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு