Published:Updated:

மகாராஷ்டிரா: 250 நாய்க்குட்டிகளைக் கொன்ற குரங்குகள் - மிருகங்களுக்கும் பழிவாங்கும் குணம் இருக்கிறதா?

பழிவாங்கும் குரங்குகள்!
News
பழிவாங்கும் குரங்குகள்!

கண்ணில் படும் நாய்க்குட்டிகளை எல்லாம் பெரும் கட்டடங்கள், மரங்கள் போன்ற உயரமான இடங்களுக்குத் தூக்கிச்சென்று கீழே வீசிக் கொன்று வருகின்றன இந்த குரங்குகள். சுமார் 250 நாய்க்குட்டிகளை இதுவரை இப்படிக் கொன்று இறந்திருக்கலாம் என்கிறார்கள்.

குட்டியைக் கொன்றதற்காக நாய்களை ஸ்கெட்ச் போட்டு குரங்குகள் கொல்லும் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியிருக்கிறது. பழிவாங்குவது மனிதனுக்கே உரியக் குணம் என நாம் நினைத்துக்கொண்டிருக்க மற்ற விலங்கினங்களிடம் இந்தப் பழிவாங்கும் உணர்வு காணப்படுகிறது என அவ்வப்போது சில சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

'கோவில்' படத்தில் புல்லட் பாண்டியை ஞாபகம் வைத்து விலங்குகள் பழிவாங்குவது போல் உண்மையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் பெண் புலியைக் கொன்ற வேட்டைக்காரனைத் தேடிவந்து ஆண் புலி கொன்றதாகச் செய்திகள் வெளியாகின. பழிதீர்க்கவே இதை அந்தப் புலி செய்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். ஆனால், விலங்கு ஆர்வலர்கள் அப்படித் திட்டம் போட்டுக் கொல்லும் திறன் புலிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்றனர்.

பழிவாங்கும் குரங்குகள்!
பழிவாங்கும் குரங்குகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதே போன்று இமாச்சல் பிரதேசத்திலிருந்து உத்தரப்பிரதேசம் வரை பயணம் செய்த ஒரு பெண் சிறுத்தை பிடிபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையின் இந்த நீண்ட பயணத்தின் நோக்கம் என்னவென்று முதலில் யாருக்கும் தெரியவில்லை. தனது குட்டிகளைக் கடத்தி கொன்ற வேட்டைக்காரனைத் தேடியே இந்தப் பாதையில் சிறுத்தை பயணித்திருக்கக்கூடும் என பின்பு தெரியவந்தது.

இப்படிச் சில சம்பவங்கள் இருந்தாலும் இந்த விலங்குகளுக்குப் பழிவாங்கும் உணர்வு இருக்கிறது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்க போதிய ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. முதல்கட்டமாகப் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு முந்தைய படிநிலையில் இருக்கும் குரங்கினங்களில் இந்த பழிவாங்கும் உணர்வு இருக்கிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சிம்பன்சி உட்பட சில இனங்களில் அது நிச்சயம் இருப்பதாக இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சரி இப்போது சம்பவத்திற்கு வருவோம்!

மகாராஷ்டிரா மாநிலத்தின் லாவூல் கிராமத்தில் நாய்களைக் குரங்குகள் தேடிச் சென்று கொல்லும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு குரங்கு குட்டி ஒன்றைச் சுற்றிவளைத்துக் கடித்துக் கொன்றிருக்கிறது ஒரு நாய் கூட்டம். அன்றிலிருந்து தொடங்கியிருக்கிறது குரங்குகளின் இந்த வேட்டை. கண்ணில் படும் நாய்க்குட்டிகளை எல்லாம் பெரும் கட்டடங்கள், மரங்கள் போன்ற உயரமான இடங்களுக்குத் தூக்கிச்சென்று கீழே வீசிக் கொன்று வருகின்றன இந்தக் குரங்குகள்.

சுமார் 250 நாய்க்குட்டிகளை இதுவரை இப்படிக் கொன்றிருக்கலாம் என்கிறார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் இந்தக் கிராமத்தில் நாய்களுக்கும் குரங்குகளுக்கும் இடையே பெரும் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் கிராம மக்கள் இதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட அவர்கள் மீதும் கோபத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கின்றன இந்தக் குரங்குகள். குரங்குகளின் இந்த போக்கால் சிலர் காயமடைந்துள்ளனர். இப்போது பள்ளி செல்லும் குழந்தைகளையும் குரங்குகள் அச்சுறுத்தத் தொடங்கியதால் மக்கள் வனத்துறையிடம் புகாரைக் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து லாவூல் கிராமத்திற்கு வந்த நாக்பூர் வனத்துறையினர் இந்தக் கொலைகளில் ஈடுபடும் முக்கியமான குரங்குகள் இரண்டையும் பெரும் போராட்டத்திற்குப் பிறகு பிடித்துச் சென்றுள்ளனர். பிடிபட்ட இந்தக் குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்துள்ளனர். இந்த விசித்திர சம்பவம் உலக கவனம் பெற்றிருக்கிறது. #MonkeyvDoge என்ற ஹேஷ்டேக்கில் செம கலாட்டாவான மீம்ஸ் பகிரப்பட்டு வருகின்றன.

இப்படி விலங்குகள் திட்டம் போட்டுப் பழிவாங்குவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கமென்ட்களில் உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்!