உலகின் மிக அழகற்ற நாய்களுக்கான போட்டியில் முதலிடத்தைப் பெற்று டிரெண்டாகிவிட்டது, `மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ்’ என்ற நாய்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், `Sonoma-Marin Fair' தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், உலகின் அழகற்ற நாய்களுக்கான போட்டி நடைபெற்றது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொரோனா பெருந்தொற்றால், இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போட்டி நடந்ததால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், நாய்கள் இப்போட்டியில் கலந்துகொண்டன.
இதில், அங்குள்ள மக்களை மட்டுமன்றி, நடுவர்களின் மனதையும் கவர்ந்து `மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ்’ என்ற நாய், உலகின் மிக அழகற்ற நாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ் என்ற நாய்க்கு, 17 வயது. உடலில் முடிகள் இல்லாமல், ஆங்காங்கே கட்டிகளோடு, நிமிர்ந்து நிற்க முடியாமல், நரம்பியல் பாதிப்புகளோடு ஒருபுறம் தலை சாய்ந்து, நாக்கை வெளியே நீட்டியபடி காணப்படுகிறது.
மிஸ்டர் ஹேப்பி ஃபேஸை, ஜெனெடா பெனெல்லி என்பவர் 2021-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அரிசோனாவில் இருந்து தத்தெடுத்துள்ளார்.
வயதான இந்த நாயை முதலில் பார்த்தபோது, நேசிக்கப்படுவதற்கு தகுதியுடைய, இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டிய ஜீவன் என நம்பி உள்ளார்.

``கால்நடை மருத்துவர், இந்நாய்க்கு ஏற்பட்டுள்ள கட்டிகள் மற்றும் உடல் நலக்குறைபாடுகள் காரணமாக, சில வாரங்கள் மட்டுமே அது உயிருடன் இருக்கும் என எச்சரித்தார். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, அன்பு, கருணை மற்றும் அம்மாவின் முத்தங்களே ஹேப்பியின் வாழ்நாளை நீட்டிக்க உதவின" என பெனெல்லி தெரிவித்துள்ளார்.
போட்டியில் வென்றதற்கான பரிசுத்தொகையாக $1,500 பணத்துடன், நியூயார்க் நகரத்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.