Published:Updated:

`மயக்க மருந்தே தேவைப்படாமல் சிகிச்சை..!' - சிறுத்தையைக் காப்பாற்றப் போராடும் நீலகிரி வனத்துறை

சிறுத்தைக்கு சிகிச்சை
சிறுத்தைக்கு சிகிச்சை

காட்டு மாடு தாக்கியோ அல்லது கீழே விழுந்தோ சிறுத்தையின் பின்னங்காலில் உள்காயம் ஏற்பட்டிக்கலாம். மயக்கமருந்து எதுவும் இல்லாமல் சர்வசாதாரணமாக அருகில் சென்று சிகிச்சை அளிக்க ஒத்துழைக்கிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ஊழியர்கள் கடந்த மாதம் 16-ம் தேதி காலை நேரத்தில் அதிர்ச்சியான காட்சி ஒன்றைப் பார்த்துள்ளனர். அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையோரத்தில் அரை மயக்கத்தில் நடக்க முடியாமல் சிறுத்தை ஒன்று தவித்துள்ளது. இதையடுத்து உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

காயம்பட்ட சிறுத்தை
காயம்பட்ட சிறுத்தை

வனத்துறையினர் பல மணிநேரம் போராடி சிறுத்தையை மீட்டு ஊட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் மிக மோசமான நிலையில் இருந்த இந்தச் சிறுத்தை உணவு எதுவும் உட்கொள்ளாமல் உயிரிழக்கும் நிலையில் இருந்தது. வனத்துறை, கால்நடை மருத்துவர்கள், காட்டுயிர் ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் தொடர் கண்காணிப்பில் சிறுத்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

சிறுத்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சை
சிறுத்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சை

வனத்துறை ஊழியர்கள் சிலர் இரவுபகலாகக் கண்விழித்து பராமரித்துக்கொண்டனர். மேலும் இறைச்சியையும் உணவாக வழங்கிவந்தனர். இதனால் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் சிறுத்தை எழுந்து நடப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதற்கான சிகிச்சை வசதியும் இங்கு இல்லை. எனவே மேல் சிகிச்சைக்காக சென்னை வண்டலூருக்குச் சிறுத்தை கொண்டு செல்லப்பட உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், " நடமாட முடியாமல் தவிக்கும் சுமார் 6 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் சிறுத்தை, காட்டுமாடு தாக்கியோ அல்லது கீழோ விழுந்தோ பின்னங்காலில் உள்காயம் ஏற்பட்டிக்கருக்கலாம். இங்கு சிகிச்சை அளித்து வந்தோம். மயக்கமருந்து எதுவும் இல்லாமல் சர்வசாதாரணமாக அருகில் சென்று சிகிச்சை அளிக்க ஒத்துழைக்கிறது.

leopard treatment
leopard treatment

இதற்கு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கவும் மேல் சிகிச்சை அளிக்கவும் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியில் பூங்காவுக்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு கொண்டு சென்று ஸ்கேன் செய்த பின், தேவையான சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அங்குள்ள பராமரிப்பு மையத்தில் வைத்துப் பராமரிக்கப்பட உள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு