Published:Updated:

`வனக்காவலர்களுடன்தான் செல்வேன்!' - அடம்பிடித்த குட்டி யானையின் சுட்டித்தனம்... என்ன நடந்தது?

குட்டி யானையின் மேல் மனித வாடை படாத வகையில் பார்த்துக்கொண்ட அந்த மீட்பு குழுவினர், படாதபாடு பட்டு மறுநாள் இரவு அந்தக் குட்டியை கூட்டத்துடன் சேர்த்துவிட்டு கண்ணீருடன் வீடு திரும்பினர்.

காட்டு மாட்டு மந்தை முதல் புள்ளிமான் கூட்டம் வரை அந்தந்த கூட்டத்தில் இருக்கும் வலிமை வாய்ந்த ஆண் விலங்கே அந்த கூட்டத்தை வழிநடத்தும். ஆனால் யானைக் கூட்டத்தைப் பொறுத்தவரை அந்தக் கூட்டத்தில் இருக்கும் பாட்டி யானை என்று சொல்லப்படும் மூத்த பெண் யானைக்கே பொறுப்புகள் அதிகம்.
யானைக் கூட்டம்
யானைக் கூட்டம்

கூட்டத்தை நீர் நிலைகளுக்கு அழைத்துச் செல்வது, அடுத்த தலைமுறைக்கு அதன் வழித்தடத்தை பழக்கப்படுத்துவது, கூட்டத்தில் 'மஸ்த்' எனப்படும் மதங்கொண்டிருக்கும் இளம் ஆண் யானைகள் அதே கூட்டத்தில் இருக்கும் மற்ற பெண் யானைகளுடன் இணைசேர விடாமல் வேறு கூட்டத்துக்கு விரட்டியடிப்பது, கூட்டத்தில் குட்டியீனும் பெண் யானைக்கு அரண் அமைப்பது, பிறந்த குட்டியின் மீது வீசும் ரத்த வாடையைப்‌ போக்க சேற்றை பூசி வேட்டை விலங்குகளிடமிருந்து காப்பது என தமக்குத் தெரியாத பல வேலைகளை செய்து யானைகளின் குலம் தழைக்கச்‌ செய்வது பாட்டி யானை தான்.

அதேபோல் தாய் யானை தன் குட்டிக்கு பாலூட்டுவதோடு மற்றுமொரு முக்கியமான வேலை இருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத குறும்புத்தனத்தேடு புது நடை பயின்று பின்னால் நடந்துவரும் குட்டியானையின் பின் தொடர்தலை தன் வாலால் தொட்டுணர்ந்து உறுதி செய்துகொள்வது.

இந்தப் பாதுகாப்பையும் மீறி தாயை விட்டு சில நேரங்களில் குட்டிகள் பிரிவதுண்டு‌. ஒரு சில குட்டிகள் தாயுடன் சேரலாம் அல்லது சேராமல் போகவும் நேரிடலாம். காட்டில் தாயை இழந்து தவிக்கும் குட்டி யானைகள் வேட்டை விலங்குகளுக்கு இரையாகும், ஒரு வேளை மனிதர்கள் கண்ணில் தென்பட்டால் வனத்துறை கட்டுப்பாட்டில் வளர்ப்பு யானைகளாக மாற்றப்படும். முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு அப்படி வந்தவைதான் மசினி, பொம்மி, ரகு போன்ற யானைகள். இன்றைக்கு நம்மிடையே கும்கிகளாக இருக்கும் பெரும்பாலான யானைகள் ஒரு காலத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானைகள்தான். எனவேதான் தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று கண்டறியப்பட்டால், எப்பாடுப்பட்டேனும் அதை அந்தக் கூட்டத்துடன் சேர்க்கும் பணியை வனத்துறை ஒரு மாதம் வரை மேற்கொள்கிறது. முடியாத பட்சத்தில்தான் முகாமுக்கு கொண்டு வரப்படுகிறது.

தாயுடன் குட்டி யானை
தாயுடன் குட்டி யானை

கூடலூர் வனத்தில் தாயைப் பிரிந்து தவித்த யானை குட்டி யானை ஒன்றை தாயுடன் சேர்த்திருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள நாடுகாணி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 யானைகளைக் கொண்ட ஒரு யானைக் கூட்டம் உணவு தேடி வந்திருக்கிறது. பிறந்து ஒரு மாதம்கூட முழுதாக முடிந்திராத குட்டி ஒன்றும் இருந்திருக்கிறது. அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக தோண்டப்பட்டிருந்த தங்கச் சுரங்க குழியில் அந்தக் குட்டி தவறி விழுந்திருக்கிறது. தவறி விழுந்த குட்டியை மீட்க கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் போராடியுள்ளன. காடே அதிரும் வகையில் வழக்கத்துக்கு மாறாக யானைகளின் பிளிறல் சத்தத்தைக் கேட்டு பதறிய கிராம‌ மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வனத்துறையினர்‌ அங்கு சென்று பார்த்தபோது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தங்கச் சுரங்கக் குழியில் யானை குட்டி ஒன்று மேலே வரமுடியாமல் தவித்துக் கொண்டிப்பதைக் கண்டனர். உடனடியாகக் குட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சோர்வுடன் இருந்த அந்தக் குட்டிக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீராதாரங்களை அளித்தனர். குட்டியை தாயுடன் சேர்க்கும் வேலையைத் துவக்கிய வனத்துறையினர் இரவு பகல் பாராது உயிரைப் பணயம் வைத்து காடு மேடுகளில் அலைந்து அந்த யானைக் கூட்டத்தை கண்டறிந்தனர்.

கூட்டத்தின் அருகில் குட்டியை விட்டுவிட்டு வனத்துறையினர் ஓட்டமெடுத்தனர். ஆனால், அந்தக் குட்டியும் இவர்களுடனேயே திரும்பி ஓடி வந்துள்ளது.

இதனால் அந்த யானைக் கூட்டமும் இவர்களை விரட்டியுள்ளது. இப்படியே 10க்கும் அதிகமான முறை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களை முழுமையாக நம்பிய‌ அந்த யானை குட்டி, அவர்களை விட்டு செல்லாமல் குறும்புத்தனமாக முரண்டு பிடித்தது. குட்டியின் மேல் மனித வாடை படாத வகையில் பார்த்துக்கொண்ட அந்த மீட்பு குழுவினர், படாதபாடு பட்டு மறுநாள் இரவு அந்தக் குட்டியை கூட்டத்துடன் சேர்த்துவிட்டு கண்ணீருடன் வீடு திரும்பினர்.

அவர்கள் அந்தக் குட்டியை தாயுடன் மட்டும் சேர்க்கவில்லை, காட்டை விட்டு துண்டிக்கப்படவிருந்த ஒரு பேருயிருக்கு அதன் காட்டை மீண்டும் ஒப்படைத்திருக்கிறார்கள். அதுவும் அது ஒரு பெண் யானை குட்டி. அது வளர்ந்து நிச்சயம் பல காடுகளை பிரசவிக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு