Published:Updated:

நீலகிரி: அரை மயக்கத்திலும் ஆக்ரோஷம் குறையாத `உடைந்த கொம்பன்’ - நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்!

ஆபரேஷன் `ரோக்கன்‌ டஸ்கர்'
ஆபரேஷன் `ரோக்கன்‌ டஸ்கர்'

நீலகிரி மாவட்டம், சேரம்பாடி வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆண் காட்டுயானையைப் பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நள்ளிரவில் க்ராலில் அடைத்தனர்.

`உடைந்த கொம்பன்’, `ஷங்கர்’ ஆகிய பெயர்களில் சேரம்பாடி பகுதி மக்களால் அழைக்கப்பட்டுவந்த ஆண் காட்டுயானை மனிதர்களைத் தாக்கும் சுபாவம்கொண்டதாக வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டது.

ஆபரேஷன் `ரோக்கன்‌ டஸ்கர்'
ஆபரேஷன் `ரோக்கன்‌ டஸ்கர்'

தந்தை, மகன் உட்பட மூன்றுபேரின் உயிரிழப்புக்கு இந்த யானையே காரணம் என இந்த யானையைப் பிடிக்க வனத்துறையினர் களமிறங்கினர்.

`ஆபரேஷன் ரோக்கன்‌ டஸ்கர்' என்ற பெயரில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் பணி இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்தது. கும்கி யானைகள், கால்நடை மருத்துவர்கள், ட்ரோன் கேமராக்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் என ஒரு பெரும்படையுடன் காட்டுக்குள் இறங்கியும், இந்த யானையின் அருகில் நெருங்க முடியாத நிலையே நீடித்தது. ஒரு சில முறை மயக்க ஊசி செலுத்தியும் அந்த யானை அடர்ந்த வனத்துக்குள் தப்பிச் சென்றுவிட்டது.

ஆபரேஷன் ரோக்கன்‌ டஸ்கர் - யானை
ஆபரேஷன் ரோக்கன்‌ டஸ்கர் - யானை

சேரம்பாடி வனப்பகுதியில் மற்ற யானைகளுடன் கூட்டமாக உலவுவதைக் கண்டறிந்த வனத்துறையினர், அதே பகுதியில் மரங்களில் பரண் அமைத்து, மயக்க ஊசி பொருத்தப்பட்ட துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர்.

ஆபரேஷன் ரோக்கன்‌ டஸ்கர்
ஆபரேஷன் ரோக்கன்‌ டஸ்கர்

நேற்று மதியம் இவர்கள் எதிர்பார்த்த இடத்துக்கு யானை வந்ததும், கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன் மற்றும் ராஜேஷ் இருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். அரை மயக்கத்தில் இருந்த யானைக்கு கும்கி யானைகளின் பாகன்கள் மற்றும் வனத்துறையின் களப்பணியாளர்கள் கயிறு மூலம் கால்களைப் பிணைத்தனர்.

யானை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததும் சாடிவயலில் வரவழைக்கப்பட்ட யானை வண்டியில் ஏற்றி, முதுமலையிலுள்ள அபயரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு வந்தனர்.

ஆபரேஷன் `ரோக்கன்‌ டஸ்கர்'
ஆபரேஷன் `ரோக்கன்‌ டஸ்கர்'

இந்த யானைக்கென்றே அபயரண்யத்தில் வலிமையான க்ரால் எனப்படும் மரக்கூண்டை மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தனர். லாரியில் இருந்த கொம்பனை க்ராலுக்குள் அனுப்ப மொத்தக் குழுவும் முழு முயற்சியில் களமிறங்கியது.

பிடிபட்ட கொம்பனுக்கு இது மதம்கொண்ட சமயம் என்பதால், அது ஆக்ரோஷமாகவே காணப்பட்டது. இதன் அருகில் கும்கிகள் நெருங்கவே தயங்கின.

ஆபரேஷன் ரோக்கன்‌ டஸ்கர் - யானை
ஆபரேஷன் ரோக்கன்‌ டஸ்கர் - யானை

பல மணி நேரம் நீடித்த கடுமையான போராட்டத்துக்குப் பிறகு நள்ளிரவில் கொம்பனை க்ராலில் அடைத்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய கால்நடை மருத்துவர்கள், ``நான்கு டன் எடையுள்ள இந்த ஆண் காட்டுயானை, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. இந்தக் காட்டுயானையை நமது பழக்கத்துக்குக் கொண்டுவர ஒன்று முதல் ஆறு மாதங்கள் ஆகலாம்.

ஆபரேஷன் ரோக்கன்‌ டஸ்கர்
ஆபரேஷன் ரோக்கன்‌ டஸ்கர்

யானையை க்ராலில் அடைப்பது மிகவும் கடினமான பணியாகவே இருந்தது. அரை மயக்கத்திலும் அது ஆக்ரோஷமாகவே இருந்தது. போராடித்தான் க்ராலில் அடைத்தோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு