Published:Updated:

செயற்கைத் தீவுகளால் வளம்பெறும் ஊசுட்டேரி... மீண்டெழும் பறவைகளின் சொர்க்கம்!

Ousteri Lake

செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருவதன் மூலம் மீண்டும் பொலிவு பெறுகிறது ஊசுட்டேரி.

செயற்கைத் தீவுகளால் வளம்பெறும் ஊசுட்டேரி... மீண்டெழும் பறவைகளின் சொர்க்கம்!

செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருவதன் மூலம் மீண்டும் பொலிவு பெறுகிறது ஊசுட்டேரி.

Published:Updated:
Ousteri Lake

புதுச்சேரி என்றாலே அதனுடைய அழகான கடற்கரையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், இவற்றைத் தாண்டி அங்கு ரசிக்கப்படும் இன்னொரு விஷயம் அங்கு வந்துசெல்லும் பறவைகள். இங்குள்ள ஏரிகள் மற்றும் ஈர நிலங்களுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பறவைகளை புகைப்படம் எடுக்க நாடு முழுவதும் இருக்கும் புகைப்படக்காரர்கள் அடிக்கடி இங்கே வருகை தருவார்கள். அப்படிப்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் ஏரிகளில் ஒன்றுதான் ஊசுட்டேரி. இது புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் உள்ள வில்லியனூரில் அமைந்துள்ளது.

Ousteri Lake
Ousteri Lake

மழைக்காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து வரும் மழைநீர் மூலம் இந்த ஏரி நிரம்புகிறது. இங்கு பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து பூநாரை, கரண்டி வாயன், உன்னி கொக்கு, குள்ளத்தாரா, நத்தைகொத்தி நாரை, மஞ்சள்மூக்கு நாரை, பட்டைத்தலை வாத்து, அன்னம், வெண்தலை சிலம்பன் உள்ளிட்ட 166-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வலசையாக வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து குஞ்சுகள் பொறிக்கின்றன. பறவைகளின் வருகை அதிகமாக இருப்பதால் 2008-ம் ஆண்டு பாண்டிச்சேரி அரசு ஊசுடு ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பராமரித்து வருகின்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் சில வருடங்களாக பருவமழை பொய்த்துப் போனதால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. வரலாறு காணாத வகையில் ஊசுடு ஏரியில் நீர்வற்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. மேலும், நீண்ட தொலைவிலிருந்து வரும் பறவைகள், இங்கு தங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாததாலும், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பாதுகாப்பற்ற நிலையினாலும் அருகில் உள்ள ஏரிகளுக்குச் சென்றுவிடுகின்றன. இதை அறிந்த உள்நாட்டுப் பல்லுயிர் அமைப்பு மற்றும் ஆரண்யம் பவுண்டேஷன் தன்னார்வலர்கள் ஆய்வு ஒன்றினை நடத்தினர். அதில் ஏரியில் பறவைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் வருகை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, இதைச் சமாளிக்க ஏரியின் நடுவில் செயற்கைத் தீவுகளை உருவாக்கினால் நல்ல பயன்தரும் என்று நினைத்து வனத்துறையிடம் அனுமதி கேட்டனர். அவர்களும் ஒத்துழைப்பு தரவே ஏரியில் செயற்கைத் தீவுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், புதுச்சேரி லயன்ஸ் கிளப் போன்றவர்களும் கைகோத்துள்ளனர். இந்தப் பணியில் இதுவரை 15 செயற்கைத் திட்டுகளை அமைத்துள்ளனர்.

Ousteri Lake Volunteers
Ousteri Lake Volunteers

செயற்கைத் தீவுகளை அமைப்பது குறித்து ஆரண்யம் பவுண்டேஷன் & உள்நாட்டுப் பல்லுயிர் அமைப்பைச் சேர்ந்த ராமன், விமல், பிரபு, ரதீஷ் ஆகியோரிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், "இப்படி பறவைகளுக்காக செயற்கைத் திட்டுகள் அமைப்பது புதிதல்ல. வேடந்தாங்கல், சேலம் போன்ற இடங்களிலும் இவை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுச்சூழலில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. இதன்மூலம் சூழல் சமன்தான் செய்யப்படுகிறது. அதேபோல் இங்கும் செயல்படுத்த முடிவுசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 15 செயற்கைத் திட்டுகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 8 செயற்கைத் தீவுகளும் 7 மண்மேடுகளும் அடங்கும். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 100, 200 மீ கொண்ட நீளமும், அகலமுமாக பல்வேறு வடிவங்களில் அமைக்கப்படுகிறது. இதில் திட்டுகளை உறுதிப்படுத்த ஓரங்களில் கோரை, வெட்டிவேர் புல் வகைகளும் வைக்கப்படுகின்றன. பனைமர விதைகள், நீர்க்கடம்பை, மூங்கில், இலுப்பை, ஆல், அத்தி, நீர்மரங்கள் போன்ற மரங்களையும் நடவு செய்திருக்கிறோம். அதிகமாக நீர்க்கடம்பு மரத்தை நட்டிருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை 365 நாள்களும் தண்ணீரிலே வளரக்கூடியவை. இது நீரில் உள்ள மாசுக்களைச் சுத்திகரிக்கும் இயல்புடையவை. மரங்கள் குட்டையாகவும் நெருக்கமாகவும் வளரக்கூடியது. எளிதில் பறவைகள் கூடுகட்டுவதற்கு படர்ந்து காணப்படும். அதனாலேயே பறவைகளின் வரத்தும் அதிகரிக்கும். அந்தத் திட்டுகளைச் சுற்றி பள்ளங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் மற்ற வேட்டை விலங்குகளிடமிருந்தும் பறவைகள் காப்பாற்றப்படுகின்றன. பறவைகளின் எச்சம் நீரை மாசுப்படுத்துகிறது, சுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்ற கருத்து மக்களிடத்தில் பெரும்பாலும் பரவிவருகிறது. இது முற்றிலும் தவறான கருத்து. பறவைகளின் எச்சம் ஏரிகளில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு உணவாக இருக்கிறது. அதை உண்டுவாழும் மீன்களும், தவளைகளும் ஏரியை மேலும் சுத்தம் செய்கின்றன. இதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது" என்கிறார்கள்.

Ousteri Lake
Ousteri Lake

செயற்கைத் திட்டுகள் மூலமாக பறவைகளின் வலசையும் அதிகரிக்கும். இதன்மூலம் புதுச்சேரியின் சுற்றுலாத்தலமும் மக்களின் வாழ்வும் மேம்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் உள்ள மற்ற ஏரிகளிலும் புனரமைப்புப் பணிகள் செய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் பறவைகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism