Published:Updated:

நார்வேயில் இறந்த 200 துருவ மான்கள்... காலநிலை மாற்றம்தான் காரணமா?

மு.ராஜேஷ்

கணக்கெடுப்பு தொடங்கிய 1978-ம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு எண்ணிக்கையில் மான்கள் இறப்பது இதுவே முதல் முறை

துருவ மான்
துருவ மான்

ஒவ்வொரு வருடமும் நார்வே போலார் இன்ஸ்டிட்யூட் அமைப்பு ஸ்வால்பார்ட் (Svalbard) என்ற தீவுப் பகுதிகளில் வாழும் துருவ மான்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பது வழக்கம். நார்வேவுக்கும் வட துருவத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்தத் தீவுக்கூட்டம் அமைந்திருக்கிறது.

மான்களின் உடல் பாகங்கள்
மான்களின் உடல் பாகங்கள்

இந்த வருடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது சுமார் 200-க்கும் மேற்பட்ட மான்களின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

``தொடர்ந்து இறந்த விலங்குகள் கண்டெடுக்கப்படுவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. காலநிலை மாற்றம் இயற்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்" என ஆய்வாளர்களில் ஒருவரான ஆஷில்ட் ஆன்விக் பீடர்சன் தெரிவித்திருக்கிறார்.

மான்களின் உடல் பாகங்கள்
மான்களின் உடல் பாகங்கள்

ஆர்டிக் வட்டத்தில் வாழும் தாவர உண்ணிகளில் துருவ மான்கள் மிக முக்கியமானவை. ஒருவேளை அவை காணாமல் போனால் அந்த இடமே வேறு விதமாக மாறிவிடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த குளிர்காலத்தின்போது இவை இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

பொதுவாகக் குளிர்காலத்தில் அனைத்து விலங்குகளுக்கும் உணவு கிடைப்பது கடினமான ஒன்றாகவே இருக்கும். துருவ மான்கள் தாவரங்களை மட்டுமே உணவாக உட்கொள்பவை என்பதால் அவற்றில் நிலைமை இன்னும் சிக்கலாகியிருக்கிறது.

துருவ மான்கள்
துருவ மான்கள்

கடந்த டிசம்பர் மாதம் வழக்கத்துக்கு மாறாகப் பெய்த மழையால் அவற்றால் உணவைத் தேடிச் செல்ல முடியவில்லை. காலநிலை மாற்றத்தின் காரணமாகவே அவைகளுக்கான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் பசியின் காரணமாகவே அவை இறந்திருக்கின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.