Published:Updated:

ரைய்னே தீவிற்கு வந்த 64,000 பச்சை ஆமைகள்... நவீன முறையில் கணக்கெடுத்த ஆய்வாளர்கள்!

பச்சை ஆமைகள்/ Green sea turtle
பச்சை ஆமைகள்/ Green sea turtle ( Christian Miller )

பச்சை ஆமைகள் பொதுவாக எந்த ஆபத்தும் இல்லையென்றால் சராசரியாக 80 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. பருவ நிலை மாற்றத்தாலும் மனிதனின் பேராசையினாலும் அவை மெல்ல அழிந்து வந்தன.

கடல் ஆமைகளிலேயே மிகப்பெரியது பச்சை ஆமைகள் (green turtles/Chelonia mydas) தான். இந்த வகை ஆமைகள் தாவர உணவை மட்டுமே உண்ணக்கூடியவை. வித்தியாசமான குருத்தெலும்பினாலும் கொழுப்புத் தன்மையினாலும்தான் அதற்குப் ’பச்சை ஆமை’ என்ற பெயர் வழங்கப்பட்டது. பச்சை ஆமைகள் அதிகளவில் வெப்ப மண்டலத்தின் தண்ணீர்ப் பகுதிகளிலும் குறைந்த வெப்பமுடைய தண்ணீர் பகுதிகளிலுமே காணப்படுகின்றன. இவை ஆழ்கடலுக்குள்ளேயே வாழும் பழக்கம் கொண்டவை. பிற ஆமைகளைப் போலவே இதுவும் முட்டையிட உணவு கிடைக்கும் இடத்திலிருந்து வெகு தூரம் பயணம் செய்யும் இயல்பைக் கொண்டது.

ட்ரோனைப் பயன்படுத்தி கணக்கெடுப்பதன் மூலம் அந்த வரலாற்றுப் பிழையைச் சரி செய்துள்ளோம்.
ரிச்சர்ட் ஃபிட்ஸ்பாட்ரிக் (Richard Fitzpatrick), பயோ பிக்சல் ஓசன் ஃபவுண்டேஷன் (Biopixel Oceans Foundation) அமைப்பின் விஞ்ஞானி

முட்டைகளுக்காவும் மாமிசத்திற்காகவும் மனிதனால் இந்த ஆமைகள் வேட்டையாடப்படுகின்றன. மேலும் அவ்வப்போது மீன் வலைகளிலும் சிக்கி உயிரிழந்து விடுகின்றன. இப்படிப்பட்ட காரணங்களினால் பச்சை ஆமைகள் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ரைய்னே தீவில் கூட்டம் கூட்டமாகத் தண்ணீரில் பச்சை ஆமைகள் கரை நோக்கி வருவது படம்பிடிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட இந்தக் காணொலி, கிரேட் பேரியர் ரீஃப் ஃபவுண்டேஷன் (Great Barrier Reef) அமைப்பின் சார்பில், ரைய்னே தீவின் மீட்புப் பணித் திட்டத்திற்காக எடுக்கப்பட்டதாகும். குஞ்சு பொரிப்பதற்காக சாரை சாரையாக இவை ரைய்னே தீவை நோக்கி வந்துள்ளன. ரைய்னே தீவுதான் பச்சை ஆமைகள் முட்டையிடுவதற்கான மிகப் பெரிய இடம் என கிரேட் பாரியர் ரீஃப் அமைப்பு தெரிவிக்கிறது.

கடல் ஆமைகளைக் கணக்கெடுப்பது சற்றே கடினமான காரியம்தான். இத்தனை வருடங்களாக அதனுடைய முட்டை ஓட்டில் வெள்ளை நிறச் சாயம் பூசி அதைப் படகிலிருந்தவாறே கணக்கெடுத்தனர். இப்போது ட்ரோன் மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பானது எளிதாகவும் அதேநேரம் துல்லியமாகவும் இருக்கிறதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தூரத்திலிருந்து பார்க்கும்போது இவை சிறிய நகரும் புள்ளிகளாகத் தோன்றும். பின்னர் அந்தக் காணொலியைப் பெரிதாக்கிப் பார்த்தால் அவை பச்சை ஆமைகள் என்பது கண்களுக்குப் புலப்படும். இந்த ஆண்டில் மட்டுமே, 64,000 ஆமைகள் ரைய்னே தீவிற்கு முட்டையிடுவதற்காக வந்துள்ளன.

கரையை நோக்கி வந்த பச்சை ஆமைகள் கூட்டம்
கரையை நோக்கி வந்த பச்சை ஆமைகள் கூட்டம்
Great Barrier Reef Foundation and Queensland Government

இது குறித்து பயோ பிக்சல் ஓசன் ஃபவுண்டேஷன் (Biopixel Oceans Foundation) அமைப்பின் விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபிட்ஸ்பாட்ரிக் (Richard Fitzpatrick) கூறுகையில் "ட்ரோன் மூலம் எடுத்த கணக்கெடுப்புகளையும் படகில் பார்வையாளராக இருந்து எடுத்த கணக்கெடுப்புகளையும் பார்த்தால் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முன்னர் நாங்கள் இதன் எண்ணிக்கையைக் குறைத்தே மதிப்பீடு செய்துவிட்டோம். ட்ரோனைப் பயன்படுத்தி கணக்கெடுப்பதன் மூலம் அந்த வரலாற்றுப் பிழையைச் சரி செய்துள்ளோம். முன்னர் பல மணி நேரங்கள் எடுத்துக்கொண்ட ஆய்வானது இப்போது சில மணி நேரங்களிலேயே முடிந்து விடுகிறது" என்றார்.

பச்சை ஆமைகள் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில வருடங்களாக அதன் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையும் எண்ணிக்கை அதிகரிக்க உதவியாக உள்ளது.

ரைய்னே தீவிலேயே கடந்த இரண்டு பருவங்களில் பச்சை ஆமைகளின் எண்ணிக்கை 20,000 ஆகத்தான் இருந்துள்ளது. இந்தப் பருவ காலத்தில்தான் அவை 64,000-ஐத் தொட்டுள்ளன. இனி வரும் காலங்களிலும் இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ரைய்னே தீவின் மீட்புப் பணியிலிருக்கும் குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர். கடல் அரித்த பகுதிகளினால் பச்சை ஆமைகள் உயிரிழக்காமல் தடுக்கும் வகையில் வேலி அமைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளைப் பற்றி கிரேட் பேரியர் ரீஃப் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் அன்னா மார்ஸ்டேன் (Anna Marsden) கூறுகையில், "ரைய்னே தீவுதான் உலகிலேயே பச்சை ஆமைகள் அதிகளவில் முட்டையிடும் மிகப்பெரிய தீவாகும். இதனால்தான் ஆமைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளோம். மேலும் அவை தம் குஞ்சுகளைப் பொரிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். அவை இறந்துவிடாமல் இருக்கத் தடுப்பு வேலிகளையும் அமைத்துள்ளோம். மொத்தத்தில் ரைய்னே தீவில் பச்சை ஆமைகளையும் மற்ற உயிரினங்ளையும் பாதுகாக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.

ஆமைக் குஞ்சுகள்
ஆமைக் குஞ்சுகள்
Queensland Government

பச்சை ஆமைகள் பொதுவாக எந்த ஆபத்தும் இல்லையென்றால் சராசரியாக 80 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. பருவ நிலை மாற்றத்தாலும் மனிதனின் பேராசையினாலும் அவை மெல்ல அழிந்து வந்தன. இப்போது தான் சற்றே அதன் எண்ணிக்கையானது கூடியுள்ளது. இனி வரும் காலங்களிலும் பச்சை ஆமைகளைப் பேணி காக்கவேண்டியது மனிதனின் கடமையாகும். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த உலகத்தில் மனிதன் மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. பிற உயிர்களுடன் இணைந்து வாழ்வதே இயற்கைக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

உலகம் நமக்கானது மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதுதான் என்பதை உணர்ந்து மனிதன் செயல்பட வேண்டியது அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு