Published:Updated:

`இதுவே எங்களுக்கு கடைசி வழி'- மதம் பிடித்த யானை மீது கற்களை வீசி சர்ச்சையான பாகன்கள்!

ரா.சதீஸ்குமார்

முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் மதம் பிடித்த ஜான் என்ற கும்கி யானையை பாகன்கள் கற்களால் தாக்கி யானையை கட்டுபடுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mudumalai Kumki elephant Jhon
Mudumalai Kumki elephant Jhon

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாமில் தற்போது 20 ஆண், 6 பெண் என மொத்தம் 26 வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த யானைகள் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும், காட்டு யானைகளை பிடிக்கவும் கும்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் யானை சவாரி, ரோந்து பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

Mudumalai Kumki elephant Jhon
Mudumalai Kumki elephant Jhon

யானைகளை பராமரிக்க பாகன்களாகவும், காவடிகளாகவும் பழங்குடிகளே உள்ளனர். ஆண் யானைகள் அதிகம் உள்ள இந்த முகாமில் அவ்வப்போது யானைகளுக்கு மதம் பிடிப்பது வழக்கம். அப்படி மதம் பிடிக்கும் யானைகளை கட்டி வைக்கப்பட்டு மதம் குறையும் வரை தனிமையில் பராமரிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ஜான் என்ற கும்கி யானையை அதன் பாகன் மாறன் காவடிகளுடன் அழைத்துச்சென்றார். அப்போது திடீரென யானைக்கு மதம் பிடித்து ஆக்ரோஷமாக மாறியது. பிளிறலுடன் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்து பாகன் மாறனின் பேச்சை கேட்க மறுத்தது. யானையை கட்டுப்படுத்த கையில் கிடைத்த கற்கள் மற்றும் கட்டைகளை யானை மீது தூக்கி எறிந்து கட்டுப்படுதினர். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mudumalai Kumki elephant Jhon
Mudumalai Kumki elephant Jhon

இது குறித்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் அதிகாரி ஒருவர் கூறுகையில் “கடந்த வாரம் சேரன் என்ற கும்கி யானைக்கு மதம் பிடித்து அதன் பாகன் ரவியை தாக்கியது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் நேற்று ஜான் என்ற கும்கி யானைக்கும் மதம் பிடித்து திடீரென பாகனை தாக்க வந்தது.

பாகன் மற்றும் உடன் இருந்தவர்களின் உயிரை காத்துக்கொள்ள வேறு வழியியின்றி கடைசி யுக்தியான கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எரிந்து யானையை கட்டுப்படுத்தினர். தற்போது யானை சாந்தமாக உள்ளது,” என்றார்.

Mudumalai Kumki elephant Jhon
Mudumalai Kumki elephant Jhon

இது குறித்து காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகையில் “வளர்ப்பு யானைகளுக்கும் இணைச்சேர்க்கை காலம் உண்டு. ஆனால் அவற்றுக்கு இணை சேரும் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. யானைகளுக்கு மதம் பிடிக்கும் சமயங்களில் அவற்றின் நடவடிக்கை முற்றிலும் மாறுபடும். மிகுந்த ஆக்ரோஷமாக காணப்படும். மதம் குறைய 45 நாள்களுக்கு மேல் ஆகும். அதுவரை உணவு கொடுக்கக்கூட பாகன்கள் அருகில் செல்ல முடியாது. முதுமலை பழங்குடிகள் யானைகளை மிகுந்த அன்போடு பராமரிப்பார்கள். ஆனால் மதம் பிடித்த யானையை தாக்கி கட்டுப்படுத்திய சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும்” என்றனர்.