Published:Updated:

தானாக கடைக்குப் போய் வரும் ஆச்சர்ய நாய்... `நாலு கால் தேவதை' சீனுவும் விவேகானந்தனும் #Video

விவேகானந்தனுடன் சீனு
விவேகானந்தனுடன் சீனு

விவேகானந்தனின் வளர்ப்பு நாயான சீனு செய்யும் செயல்களைப் பார்த்து ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி அருகே சேந்தாக்குடியில் இருக்கிறது விவேகானந்தனின் குடிசை. அதன் ஒரு மூலையில் இருக்கிறது சீனுவின் கூடாரம். தான் வளர்க்கும் பெண் நாய்க்கு சீனு என்று பெயர்வைத்து, பிள்ளைபோல பாராட்டிச் சீராட்டி வளர்க்கிறார் விவேகானந்தன். விவேகானந்தனின் சொல்லை அப்படியே கேட்கும் சீனு, தன் வேலைகள் பலவற்றைத் தானே பார்த்துக்கொள்கிறது. விவேகானந்தன் சொல்லும் வேலைகளையும் தட்டாமல் செய்கிறது.

`சாப்பாடு தட்டை எடுத்துட்டு வா சீனு' என்று விவேகானந்தன் சொல்கிறார்.

சீனு
சீனு

அடுத்த நிமிடமே எடுத்துக்கொண்டு ஓடி வந்து சாப்பாட்டுக்குத் தயாராகிவிடுகிறது. மளிகைப் பொருள்களின் விவரங்களைக் காகிதத்தில் எழுதி ஒரு கூடையில் போட்டுக்கொடுத்தால், கூடையை வாயில் கவ்விக்கொண்டு, கடைக்குப் போய் அந்தப் பொருள்களை வாங்கிக்கொண்டு சிறிது நேரத்தில் திரும்பிவிடுகிறது. இதனால் சீனுவை அனைவருமே ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். `வா வந்து மடியில படு சீனு' என்று விவேகானந்தன் கூறியவுடன் மடிக்குத் தாவி வந்து படுத்துக்கொள்கிறது சீனு.

சீனுவைத் தன் மடியில் அமர வைத்தவாறு நம்மிடம் பேசினார் விவேகானந்தன்.

``சின்ன வயசிலயிருந்தே நாய்கள்னா எனக்கு ரொம்பப் பிரியம். நாலு வருஷத்துக்கு முன்னால குடும்பப் பிரச்னையில் ரொம்பவே மன உளைச்சல்ல இருந்தேன். அந்த நேரத்துலதான் சீனு எனக்குக் கிடைச்சது. அப்போது அது ஆறு மாசக் குட்டி. இப்ப சீனுவுக்கு நாலு வயசு. பலரும் சீனுவை வெளிநாட்டு நாயான்னு கேட்கிறாங்க. அது நம்ம நாட்டு நாய்தான்.

பொதுவா நாய்கள்கிட்ட நாம பழகிட்டா, சொல்றத அப்படியே கேட்கும்னு சொல்லுவாங்க. ஆரம்பத்துல எல்லா நாய்களைப்போலவும் சீனுவும் சொல்ற விஷயங்களை செஞ்சிக்கிட்டு இருந்துச்சு. போகப் போக, புதுசா நெறையா விஷயங்களை அதுவா செய்ய ஆரம்பிச்சுது. அது செஞ்ச சில விஷயங்கள் எனக்கே ஆச்சர்யமா போச்சு. குறிப்பா, நம்ம கைதவறி வெச்சிட்டு தேடுற பொருளை, இதைத்தான் தேடுறாங்கன்னு அதுவா யூகிச்சு அந்தப் பொருளை எடுத்துக்கொண்டு வந்து கையில கொடுக்கும்.

புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி அருகே சேந்தாக்குடியை சேர்ந்த விவேகானந்தன் தன் பெண் நாய்க்கு சீனு என்று பெயர்வைத்து,...

Posted by Aval Vikatan on Tuesday, December 15, 2020

அப்படி, பல முறை நான் எங்கேயோ வெச்சிட்டு தேடிக்கிட்டிருக்கும் டிவி ரிமோட்டை எடுத்துக்கொடுத்திருக்கு. டிவியைப் போட்டாலே அடுத்து ரிமோட்டைத்தான் தேடுவாங்கன்னு, உடனே ரிமோட்டை எடுத்துட்டு வந்து கையில கொடுத்திடும். கேட்ட பொருளை எடுத்துக்கிட்டு வர்றது, பால் விளையாடுறது, கம்பு சுத்துறதுன்னு நம்ம பண்ற பல விஷயங்களைச் செய்யும்.

ரொம்ப அறிவா பல விஷயங்களைச் செஞ்சதாலதான் சீனுவை கடைக்கு அனுப்பிப் பார்க்கலாம்ங்கிற ஐடியா வந்துச்சு. கொஞ்சம் பயிற்சியும் கொடுத்தேன். ஆரம்பத்துல கொஞ்சம் சொதப்பிச்சு. பாதி தூரத்திலயே கூடையை வெச்சிட்டு வந்திடும். ஆனா, இப்போ எல்லாம் கடைக்குப் போய் பொருள்கள் வாங்கிட்டு பத்திரமா வந்து சேர்ந்திடும். எங்களோட தேவைக்கு அதைக் கடைக்கு அனுப்ப மாட்டோம். நாங்க அனுப்புறது எல்லாம், அதுக்கு பால், பிஸ்கட் வாங்கவாதான் இருக்கும்.

இவ்வளவு அறிவும் திறமையும் இருக்க எங்க சீனுவைப் பத்தி, வெளி உலகத்துக்குத் தெரியணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. கடைக்குப் போக, மெயின் ரோட்டை கிராஸ் பண்ணிதான் போகணும். நம்மகூட அவ்வளவு நேர்த்தியா கிராஸ் பண்ணுவோமான்னு தெரியலை. ரொம்ப கவனமா கிராஸ் பண்ணி போயிட்டு வந்திடும். சீனுக்கு ஏதாச்சும் உடம்புக்கு முடியலைன்னா, எனக்கு மனசே சோர்ந்துபோயிடும். வேலைக்குக்கூட போகாம கூட இருந்து அதைப் பார்த்துக்குவேன். அதுக்கு சரியானாதான் நானும் சரியாவேன்.

 சீனு
சீனு

சாப்பாடு போட்டு பார்த்துக்கிறத தவிர அதுக்குப் பெருசா நாம ஒண்ணும் செய்யலை. ஆனா சீனு பாம்பு, தேள், பூரான்னு விஷப்பூச்சிகள்கிட்ட இருந்தும் ரெண்டு, மூணு தடவை என் குடும்பத்துல உள்ளவங்க உசுர காப்பாத்தியிருக்கு. சீனு ரோட்டுல கூடையைத் தூக்கிக்கிட்டுப் போறதைப் பார்த்துட்டு தேடி வந்து பலரும், `உங்க சீனு எப்படி கடைக்கு எல்லாம் போயிட்டு வருது, நீங்க சொல்றத எப்படி அப்படியே கேட்குது?'னு ஆச்சர்யமா கேட்பாங்க. குறிப்பா, `எங்க நாய்க்கும் கடைக்குப் போயிட்டு வர்ற மாதிரி டிரெயினிங் கொடுக்க முடியுமா?'னு கேட்பாங்க. கண்டிப்பா முடியாதுன்னு சொல்லிடுவேன். அதோட, `சீனுகிட்ட நான் ஒரு மடங்கு அன்பு காட்டுறேன், பதிலுக்கு அது ரெண்டு மடங்கு அன்பு காட்டுது. அதனாலதான் நான் சொல்றத அப்படியே கேட்குது. உங்க நாய்கிட்ட நீங்களும் நல்லா அன்பு காட்டுங்க, அதுவும் அந்த அன்பை உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்'னு சொல்லி அவங்களை அனுப்பிடுவேன்.

வசதியான குடும்பம் எல்லாம் இல்லை. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்தான். அண்ணனோட அரவணைப்பிலதான் இருக்கேன். நமக்கு இருக்கோ இல்லையோ, வாயில்லா ஜீவனுக்கு சாப்பாடு போடுறதுக்காகவே நான் வேலைக்குப் போற மாதிரி இருக்கும். கூலி வேலை செஞ்சு கிடைக்கிற வருமானத்தை வெச்சு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கோம். சீனுவை பலரும் பார்த்து, `உங்க நாய் சூப்பர்'னு பாராட்டுறாங்க. பாராட்டுறவங்களால சீனுவுக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்கூட கிடைக்காதே? அதுக்காக சீனுவை வெச்சு சம்பாதிக்கணும்னு எல்லாம் எனக்கு நோக்கம் இல்ல.

வெளியூர்ல ஒரு தோப்புல நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சது.

விவேகானந்தனுடன் சீனு
விவேகானந்தனுடன் சீனு

ஆனா, சீனு அங்க இருக்கக்கூடாதுன்னு ஓனர் கண்டிப்பா சொல்லிட்டாரு. சீனு இல்லாத அந்த வேலையை நானும் வேண்டாம்னு சொல்லிட்டேன். சீனு இல்லாம நான் இருக்க முடியாது, நான் இல்லாம சீனுவால இருக்க முடியாது.

சீனு கடைக்குப் போயிட்டு வர்றது, அதோட திறமையையெல்லாம் பார்த்துட்டுத்தான், ஒரு குறும்பட வாய்ப்புக் கிடைக்க, அதுல நடிச்சது. இப்போ, தமிழ் சினிமாவுல நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்தெல்லாம் படம் எடுக்கிறாங்க. அந்த வரிசையில சீனுவையும் திரையில பார்க்கணும். அந்த வாய்ப்புக் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில காத்துக்கிட்டு கிடக்குறோம்" என்றார் தன் செல்லத்தை தடவியபடி.

விவேகானந்தனின் கைகளுக்குள் சுருண்டுகொள்கிறது அந்த வெள்ளை தேவதை!

அடுத்த கட்டுரைக்கு