Published:Updated:

கடற்சிங்கத்தை ஒரே கல்ப்பில் 'விழுங்கிய' திமிங்கிலம்- கேமராவில் சிக்கிய அதிசயச் சம்பவம்! #Viral

ம.காசி விஸ்வநாதன்

இப்படியொரு காட்சி இதற்கு முன்பு எங்கும் பதிவானது இல்லை!

கடற்சிங்கத்தை 'விழுங்கிய' திமிங்கிலம்
கடற்சிங்கத்தை 'விழுங்கிய' திமிங்கிலம் ( சேஸ் டெக்கர் | Chase Tekker )

இன்று பலர் கைகளில் கேமராக்கள் இருக்கின்றன. நம் வீட்டில் இருக்கும் சிறிய பொருள்கள் தொடங்கி காட்டில் கம்பீரமாக வாழும் விலங்குகள் வரை தினமும் ஏராளமான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சில போட்டோக்கள்தான் பார்த்ததுமே ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு போட்டோ தற்போது இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கிறது.

கடற்சிங்கம் இருக்கும் இடத்தை நோக்கித்தான் திமிங்கிலம் வாயைத் திறக்கிறது என்பதை உணர்ந்ததும் ஒரு சில நொடிகள் மட்டுமே எனக்கு இருந்தன.
சேஸ் டெக்கர்

திமிங்கிலம் ஒன்று ஒரு கடற்சிங்கத்தை முழுவதுமாக விழுங்கும் காட்சிதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரல். ஹம்பேக் இனத் திமிங்கிலமான இதை சேஸ் டெக்கர் என்னும் புகைப்படக்கலைஞர் படம்பிடித்துள்ளார். கலிபோர்னியா மான்டரே விரிகுடா பகுதியில் திமிங்கிலங்களைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்போது இதை அவர் க்ளிக் செய்துள்ளார். சுமார் மூன்று திமிங்கிலங்கள், இருநூறு கடற்சிங்கங்கள் அங்குக் கூட்டமாகச் சுற்றித்திரிந்த சிறு மீன்களை உணவாக்கிக் கொண்டிருந்தன. அப்போது வாயைத் திறக்கும்போது ஒரு கடற்சிங்கத்தை முழுவதுமாக விழுங்கியிருக்கிறது ஒரு திமிங்கிலம்.

இந்தப் புகைப்படத்தை எடுத்த சேஸ் டெக்கர் பேசுகையில்,"சில நேரங்களில் 100 திமிங்கிலங்கள், 3000 கடற்சிங்கங்கள் என இந்தச் சிறிய மீன்கள் சுற்றும் இடங்கள் கலவர பூமியாக இருக்கும். ஆனால் இந்தச் சம்பவம் நடக்கும்போது அந்தளவு பரபரப்பு இல்லைதான். நாங்கள் பொறுமையாக இந்த விலங்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் இந்த அபூர்வ நிகழ்வு நடந்தேறியது. கடற்சிங்கம் இருக்கும் இடத்தை நோக்கித்தான் திமிங்கிலம் வாயைத் திறக்கிறது என்பதை உணர்ந்ததும் ஒரு சில நொடிகள் மட்டுமே எனக்கு இருந்தன. அதற்குள் சரியாகப் படம்பிடித்துவிட்டேன்" என்றார்.

கடற்சிங்கத்தை 'விழுங்கிய' திமிங்கிலம் #Viral
கடற்சிங்கத்தை 'விழுங்கிய' திமிங்கிலம் #Viral
Chase Tekker

என்னதான் விழுங்கியதுபோல் இருந்தாலும் நிச்சயம் கடற்சிங்கம் உயிர்பிழைத்திருக்கும். காரணம் திமிங்கிலம் இவ்வளவு பெரிய உயிரினத்தைச் சாப்பிடாது. சாப்பிடவும் முடியாது. அதனால் எப்படியும் வாயிலிருந்து வெளிவந்திருக்கும். இதை சேஸும் உறுதிப்படுத்துகிறார்.

"சொல்லப்போனால் அந்தத் திமிங்கிலம் முழுவதுமாக வாயை மூடக்கூட இல்லை. அதனால் கடற்சிங்கத்திற்கு எதுவும் ஆகியிருக்காது. ஆனால் நிச்சயம் பதைபதைத்திருக்கும்." என்றார் அவர்.

Vikatan
சேஸ் டெக்கர் | Chase Tekker
சேஸ் டெக்கர் | Chase Tekker

வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டதே இல்லை. இந்தப் புகைப்படம் உண்மையிலேயே அரிதான ஒன்றுதான் என்று வியந்துவருகின்றனர் நெட்டிசன்கள்.