Published:Updated:

நடனமாடிய கரடிக் குட்டிகள்... அழகு காட்சியைப் படமெடுக்க நாள் முழுக்க காத்திருந்த உடற்கல்வி ஆசிரியர்!

கரடிக்குட்டிகள்
கரடிக்குட்டிகள் ( Valtteri Mulkahainen )

அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தபோது, அவர் ஒரு கரடி புதர்களுக்குள்ளிருந்து சில குட்டிகளோடு வெளியேறுவதைக் கண்டார். குழந்தைகளைப் போலவே நடந்துகொண்ட அந்தக் கரடிக்குட்டிகளை அவரால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

பின்லாந்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான வல்டேரி முல்கஹைனென், வேலை நேரம் போகத் தன்னுடைய மற்ற நேரங்களை போட்டோ எடுப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக, தன்னுடைய நாட்டின் காட்டுயிர்களைப் படமெடுத்துக்கொண்டிருக்கிறார் வல்டேரி. அந்த அனுபவங்களின்போது, அவர் காட்டுயிர்களின் பல அபூர்வமான தருணங்களைப் பதிவு செய்துள்ளார். அப்படிப்பட்ட அனுபவங்களில் ஒன்றின் கதைதான் இதுவும்.

காடு
காடு
Valtteri Mulkahainen
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த எதிர்த்தீ - வனத்துறையின் `கவுன்டர் ஃபயர்' யுக்தி!

வல்டேரி ஒருநாள், பின்லாந்திலுள்ள மார்டின்செல்கொனென் என்ற நகரத்துக்கு அருகிலிருந்த காட்டுக்குள் ஒளிப்படப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு கரடி புதர்களுக்குள்ளிருந்து சில குட்டிகளோடு வெளியேறுவதை அவர் கண்டார். குழந்தைகளைப் போலவே நடந்துகொண்ட அந்தக் கரடிக்குட்டிகளை அவரால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

காட்டுயிர்களைத் தேடி அன்று காட்டுக்குள் சென்றவர், காடு முழுக்கச் சுற்றாமல் விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் மறைவிடம் ஒன்றை அமைத்து மறைந்துகொண்டார். காலையிலிருந்து காத்திருந்தவரின் கண்களுக்கு, மாலைதான் தீனி கிடைத்தது. சூரியன் இறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் புதருக்குள்ளிருந்து மூன்று கரடிக் குட்டிகள் வெளியேறின. அப்படி வெளியேறிய அவை எதையும் சிந்திக்காமல், எந்தப் பயமும் இல்லாமல் ஆனந்தமாக விளையாடிக்கொண்டும் அவ்வப்போது சண்டையிட்டுக் கொண்டுமிருந்த அந்தக் குட்டிகளைப் படமெடுக்க வல்டேரி தவறவில்லை.

தாய்க் காடியோடு இருக்கும் குட்டிகள்
தாய்க் காடியோடு இருக்கும் குட்டிகள்
Valtteri Mulkahainen
கரடிக் குட்டிகள்
கரடிக் குட்டிகள்
Valtteri Mulkahainen

"அந்தக் கரடிக் குட்டிகள் குழந்தைகளைப்போல் விளையாடிக் கொண்டிருந்தன. விளையாட்டாகச் சில நேரங்களில் சண்டையும் போட்டுக்கொண்டன. அந்தச் சண்டைகூடப் பார்க்க அத்தனை அழகாக இருந்தது. என் வீட்டுக்குப் பின்னாலிருக்கும் விளையாட்டுத் திடலில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பதுபோல அது இருந்தது. நேரம் செல்லச் செல்ல, அந்த மூன்று குட்டிகளும் அவற்றினுடைய பின்னங்கால்களில் எழுந்து நின்று ஒன்றையொன்று தள்ளிவிட்டுக்கொண்டன. அப்படியே தொடர்ந்து செய்துகொண்டிருக்க, அந்தச் செயல் பார்ப்பதற்கு ஏதோ அந்தக் கரடிக் குட்டிகள் மூன்று நடனமாடியதைப் போலவே இருந்தது" என்று தன் அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார் வல்டேரி.

இந்த அழகான சம்பவம் நடந்துகொண்டிருந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் மறைவிடம் அமைத்து அமர்ந்திருந்தார் வல்டேரி. காட்டுயிர்களைப் படமெடுக்க மனிதர்களிடம் நிற்பதுபோல் நேராகச் சென்று நின்றுவிட முடியாது. ஆண்டாண்டு காலமாக மனிதர்களுக்கும் அவற்றுக்கும் இடையில் மோசமான உறவுமுறைதான் இருந்துவருகிறது. அனைத்தும் தன்னை வேட்டையாட வரும் வேட்டையாடியைக் கண்ட இரை விலங்குகளைப் போலத்தான் தப்பி ஓடும். தன் கண்ணில் படுபவர், நல்லவரா கெட்டவரா என்ற ஆராய்ச்சியையெல்லாம் காட்டுயிர்கள் செய்துகொண்டிருக்காது. அதுமட்டுமன்றி, மனிதர்களை அப்படிப் பார்ப்பது அவற்றினுடைய மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

காட்டுயிர்
காட்டுயிர்
Valtteri Mulkahainen
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!

இத்தகைய பிரச்னைகள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள், எந்த இடையூறும் இன்றி காட்டுயிர்களை அவற்றின் இயல்பிலேயே படமெடுக்க நினைப்பவர்கள், வல்டேரியைப் போல் அவை, கவனிக்க முடியாத வகையில் மறைவிடத்தில்தான் காத்திருப்பர். அப்படிக் காத்திருப்பது, சில நிமிடங்களிலிருந்து சில மணிநேரங்கள் வரை நீடிக்கலாம். அந்தக் காத்திருப்பில் பொறுமை அவசியம், அது இருந்தால்தான் வல்டேரிக்குக் கிடைத்ததைப் போன்ற இயற்கையான இயல்பான பதிவுகள் கிடைக்கும். அந்தப் பொறுமைதான், அவருக்கு இந்த அதிசயமான அருமையான ஒளிப்படங்களைக் கொடுத்தது.

கரடிகள், மிகவும் வலிமையானவை. அவை தம் முன்னங்கால்களை வேகமாக ஓடுவதற்கும் விரைவாக வேட்டையாடுவதற்கும் திறமையாகப் பயன்படுத்துகின்றன. அவர் கவனித்துக்கொண்டிருந்த மூன்று குட்டிகளும் மிக எளிமையாகத் தம் பின்னங்கால்களால் எழுந்து நின்று, முன்னங்கால்களால் ஒன்றையொன்று தள்ளிவிட்டபடி நடனமாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கையில் வல்டேரிக்கு அந்தக் கூற்றின் உண்மையும் கரடிக் குட்டிகளின் உடல் வலிமையே இப்படியென்றால், வளர்ந்த கரடிகளின் கால்களில் எவ்வளவு வலு இருக்கும் என்பது புரியலாயிற்று. வலிமை மட்டுமல்ல, கரடிகள் திறமையாக மரமேறும், அருமையாக நீந்தும். 2019-ம் ஆண்டின் வேட்டைக் காலம் முடிவடைந்த பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, பின்லாந்து காடுகளில் 2020 முதல் 2130 கரடிகள் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளன.

கரடிகள்
கரடிகள்
Valtteri Mulkahainen
நடனம்
நடனம்
Valtteri Mulkahainen

திறமையான, அதேநேரம் அழகான ஒரு கரடிக் குடும்பத்தின் அருமையான தருணங்களைப் படமெடுக்கும் வாய்ப்பு அன்று வல்டேரி முல்கஹைனெனுக்குக் கிடைத்தது. அதை அவர் தவறவிடவில்லை. காலையிலிருந்து காத்திருந்தவர், மாலையில் அவை வெளியேறியதிலிருந்து இரவு முழுக்கச் சளைக்காமல் அவற்றைக் கவனிப்பதும் படம் எடுப்பதுமாகவே பொழுதைக் கழித்தார்.

பின்லாந்தில், ஆலாண்ட் தீவுகளைத் தவிர வேறு எங்கு சென்றாலும் உங்களால் கரடிகளைப் பார்க்க முடியும். அதில் பெரும்பாலானவை நாட்டின் கிழக்குப் பகுதியில் வாழ்கின்றன. சிலநேரங்களில் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் மக்கள் அவற்றைப் பார்த்துள்ளனர். கரடிகளும் மற்ற காட்டுயிர்களைப் போலவே, மனிதர்களிடமிருந்து விலகியிருக்கத்தான் முயலும். மனிதர்கள் கரடிகளை அங்கு மிகவும் அரிதாகத்தான் காடுகளில் பார்க்க முடியும். அவை இருக்கும் இடத்தில், உலவும் பகுதியில் நாமிருப்பதை உணர்ந்தாலே, அங்கிருந்து விலகி மறைந்துவிடும் பழக்கம் கொண்டவை கரடிகள். கூர்மையான உணர்திறன்கள், ஓசையின்றி நகரக்கூடிய உடலமைப்பு போன்றவை நம் கண்ணில் படாமல் புத்திசாலித்தனமாகக் கண்ணாமூச்சி ஆடுமளவுக்கு அவற்றைப் பழக்கியுள்ளன.

விளையாட்டு
விளையாட்டு
Valtteri Mulkahainen

காடுகளுக்குள் பயணிக்கையில் இப்படிப் பல அபூர்வங்களை நாம் பார்க்க இயலும். அதற்குப் பொறுமை மிகவும் அவசியம். அதைவிட முக்கியம். வல்டேரியைப் போலவே அமைதி காக்க வேண்டும். ஏனென்றால், விலங்குகளின் மனதில் மனிதர்கள் குறித்து நல்லவிதமாக இல்லை. அவற்றைப் பொறுத்தவரை நாம் மிகவும் ஆபத்தானவர்கள், விலகியே இருக்க வேண்டியவர்கள். அப்படி விலகியே இருக்கும்போதுதான், அவற்றினுடைய உண்மையான, அழகான முகங்களைப் பார்க்கும் அரிய வாய்ப்பு வல்டேரிக்குக் கிடைத்ததுபோல் நமக்கும் கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு