Published:Updated:

பாறு கழுகு:`தென்னிந்தியாவின் முதல் இனப்பெருக்க மையம்!’ - முன்னெடுக்கும் முதுமலை நிர்வாகம்

Save Vulture
Save Vulture

தென்னிந்தியாவில் ராஜாளி கழுகுகளின்  எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இன்றைய சூழலில் புலியைவிட பாறு கழுகுகள் அரிதாகிக்கொண்டிருக்கின்றன என்பதை நமக்கு எச்சரிக்கின்றன.

வெண் முதுகு, கருங்கழுத்து, செந்தலை, மஞ்சள் முகம் என இந்த நான்கு வகைகளில் பல்லாயிரக்கணக்கான பிணந்தின்னி கழுகுகள் [பாறு] தென்னிந்திய காடுகளிலும் அதன் வான் பரப்பிலும் வட்டமடித்துக்கொண்டிருந்தன.

Vulture
Vulture

காட்டுயிர்களும் காடும் கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து தப்பிப் பிழைக்க இயற்கை அளித்த அரிய கொடையே இந்தப் பிணந்தின்னிகள். எத்தனை பெரிய கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு விலங்கினங்கள் இறந்திருந்தாலும், அந்த சடலத்தை உண்டு, செரித்து மற்ற உயிர்களுக்கு நோய் பரவாமல் தனக்குள் உட்கிரகிக்கும் அசாத்திய திறன் கொண்டது. இதனாலேயே பாறுக்களை காடுகளின் காவலன், இயற்கை தூய்மையாளன் என அழைக்கின்றனர்.

காகங்களைப் போல நல்ல எண்ணிக்கையில் இருந்த இந்த பாறு கழுகுகளின் எண்ணிக்கை, மேற்கூறப்பட்ட நான்கு இனத்தையும் சேர்த்தே தற்போது வெறும் 300 மட்டுமே இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் செந்தலை அல்லது ராஜாளி எனப்படும் [Red-headed vulture ] கழுகுகளின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் 15 மட்டுமே உள்ளன. இதன் [nesting  sight] கூடுகள் ஒன்றைக்கூட ஆய்வாளர்களால்  கண்டறிய முடியவில்லை என்பது வேதனையான உண்மை.

Vulture
Vulture

இவற்றின் கடைசிப் புகலிடமாக முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா ஆகிய இந்த மூன்று வனப்பகுதிகள் மட்டுமே உள்ளன.

அசுர வேகத்தில் அழிக்கப்பட்டதன் விளைவாய், இன்றைக்குப் புலிகளைவிட அரிதாக்கிக்கொண்டிருக்கும் இந்தக் கழுகுகளை மீட்க அரசும் ஆய்வாளர்களும், தன்னார்வலர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் புலிகள் பாதுகாப்பில் முன்னேறிவரும் முதுமலை புலிகள் காப்பகமும் ஆக்கபூர்வ முயற்சியாகத் தென்னிந்தியாவின் முதல் கழுகுகளின் இனப்பெருக்க மையத்தை [vulture rescue, rehabilitation and breeding center ] நிறுவ களமிறங்கியுள்ளது.

பாறு கழுகு:`தென்னிந்தியாவின் முதல் இனப்பெருக்க மையம்!’ - முன்னெடுக்கும் முதுமலை நிர்வாகம்

இந்த நம்பிக்கை முயற்சி குறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், "சீகூர் பகுதிகளை பாறு கழுகுகள் வாழிடமாகக் கொண்டுள்ளன. இவற்றுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி வருகிறோம். மேலும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பாறு கழுகுகளின் இனப்பெருக்க மையம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். இந்தத் திட்டம் பாறு கழுகுகளைப் பாதுகாக்க பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

ஊட்டி அரசு கலைக் கல்லூரி விலங்கியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் துறையின் உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ``இது ஒரு நல்ல முயற்சி நிச்சயம் இந்தத் திட்டம் பலன் தரக்கூடியது. இவற்றின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது ஒவ்வொரு கழுகையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். புதிதாக அமையவுள்ள பாறு கழுகுகளின் இனப்பெருக்க மையத்தில் பல சிறப்பு ஏற்பாடுகளுடன் வடிவமைத்தால், காயம்பட்டவற்றுக்கும் சிகிச்சை அளித்துக் காப்பாற்ற முடியும்" என்றார்.

பேராசிரியர் ராமகிருஷ்ணன்
பேராசிரியர் ராமகிருஷ்ணன்

முதுமலையைச் சேர்ந்த மற்றொரு வனத்துறை அதிகாரி பேசுகையில், "முட்டைகளை அடை வைத்து குஞ்சு பொரித்ததும் வனத்தில் விடவும், கூட்டில் இருந்து தவறி விழும் குஞ்சுகளை மீட்டு சிகிச்சை அளிக்கவும், மேலும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். தென்னிந்தியாவில் பாறு கழுகுகளின் இனவிருத்தி மையம் உருவாக்கப்படவுள்ளது இதுவே முதல்முறை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு