Published:Updated:

லாக்டௌன் நேரத்தில் அதிகரிக்கும் விலங்குகள் வேட்டை... சமூக வலைதளத்தில் பதிவேற்றும் அவலம்!

புலி வேட்டை ( Pixabay )

லாக்டௌன் காரணமாகப் பழங்குடிகளுடைய நடமாட்டமும் அதிகமில்லை. ஆகவே, அவர்கள் மூலமாகக் கிடைக்கும் தகவல்களும் கிடைப்பதில்லை. இது, வேட்டைக் குற்றங்களைத் தடுப்பதை மேலும் சிரமமாக்குகிறது.

லாக்டௌன் நேரத்தில் அதிகரிக்கும் விலங்குகள் வேட்டை... சமூக வலைதளத்தில் பதிவேற்றும் அவலம்!

லாக்டௌன் காரணமாகப் பழங்குடிகளுடைய நடமாட்டமும் அதிகமில்லை. ஆகவே, அவர்கள் மூலமாகக் கிடைக்கும் தகவல்களும் கிடைப்பதில்லை. இது, வேட்டைக் குற்றங்களைத் தடுப்பதை மேலும் சிரமமாக்குகிறது.

Published:Updated:
புலி வேட்டை ( Pixabay )

லாக்டௌன் காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாக மனித நடமாட்டம் என்பது வெகுவாகக் குறைந்திருந்தது. அந்த நேரத்தில், காட்டுயிர்கள் காட்டின் மையப்பகுதியிலிருந்து வெளியே வரத் தொடங்கின. அப்படி வெளியே வந்து வெளிப்புறக் காடுகளைச் சுற்றிக் கொண்டிருக்கும் விலங்குகள், வேட்டைக்காரர்களின் வலையில் சிக்குவது லாக்டௌனில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய வேட்டைகள் முன்பைவிடத் தற்போது அதிகமாகியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இரண்டு வகையான வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள். அதில் சிலர், காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வே இல்லாதவர்கள். இவர்கள், முயல் போன்ற சிறு சிறு உயிரினங்களை மட்டுமே சாப்பிடுவதற்காகவோ, பொழுதுபோக்காகவோ வேட்டையாடுவார்கள். இன்னொரு பிரிவினர், வேட்டை சட்டவிரோதமானது என்று தெரிந்தே லாபத்திற்காகவோ கௌரவத்திற்காகவோ வேட்டையாடுபவர்கள்.

காண்டாமிருகம்
காண்டாமிருகம்
Pixabay

இந்த இரண்டு பிரிவையும் கடந்த மூன்றாவது வகையான வேட்டைக்காரர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேட்டைக்காரர்களாக அடையாளப்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் இத்தகைய வேட்டைக்காரர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் ஆனைமலையிலுள்ள சேத்துமடை பகுதியில் இரண்டு புலிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டுமே விளிம்புக் காட்டில், விவசாய நிலத்திலிருந்து சற்று தள்ளி இறந்திருந்தன. அந்த இறப்பு குறித்து விசாரித்த வனத்துறை, தங்களுடைய மாட்டை அடித்த புலியைக் கொல்வதற்காக இரண்டு விவசாயத் தொழிலாளர்கள் பன்றிக்கு விஷம் வைத்து, அதைப் புலியைச் சாப்பிட வைத்துக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டி கைது செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"இரண்டு புலிகளுமே ஒரே பகுதியில் சில நூறு மீட்டர் தொலைவில்தான் இறந்து கிடந்தன. இரண்டுமே விஷம் வைக்கப்பட்ட ஒரே பன்றியைச் சாப்பிட்டதால்தான் இறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஒரே பன்றியைச் சாப்பிட்டு இறந்திருந்தால், இரண்டு சடலங்களுக்கும் இடையில் ஏன் சுமார் 700 மீட்டர் இடைவெளி இருக்கிறது" என்று சில காட்டுயிர் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பன்றிக்காய் வைத்து யானைகளைக் கொல்வது குறித்துக் கேள்விப்பட்டுள்ளோம். சமீபத்தில்கூட, பன்றிக்காய் வெடித்து, தாடை பெயர்ந்து துடிதுடித்து இறந்த யானைக்காக மொத்த இந்தியாவுமே கிளர்ந்தெழுந்தது. இப்படிப் பன்றிக்கு வைக்கும் அவுட்டுக்காய் என்ற வெடியை, எதேச்சையாக யானைகள் கடித்து மரணிப்பது போக, அவற்றுகென்றே கூட சிலர் வெடியை மறைத்து வைப்பர். பலாப்பழத்தின் இரண்டு முனைகளில் ஏதாவதொருபுறம் அவுட்டுக்காயை மறைத்து வைப்பதால் யானைக்குத் தெரிவதில்லை. அப்படியே கடிக்கும்போது, அழுத்தத்தில் வெடித்துவிடும்.

யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, முயல், நரி, எறும்புத் தின்னிகள், உடும்பு, மான், கீரி, காட்டுப் பூனை, மரநாய், மலை அணில், பறவைகள் போன்ற பல்வேறு வகை உயிரினங்கள் தமிழகக் காடுகளில் வேட்டையாடப்படுகின்றன.

இப்படியாக யானைகளைக் கொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. அதிகமாக யானைகள் குறிப்பிட்ட பகுதியில் வந்துகொண்டிருந்தால், அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைக்குள் கொண்டு செல்லப்படும். காட்டுயிர்கள் அதிகம் வந்துகொண்டிருந்த பகுதியைத்தான், அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படாத ஒரே காரணத்தால் மனிதர்கள் விவசாய நிலமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பகுதிக்குள் வழக்கம்போல யானைகள் நடமாட்டம் இருந்தால், அந்த நிலம் பாதுகாக்கப்பட்ட எல்லைக்குள் சென்றுவிடும். நிலத்தை அப்படி இழந்துவிடக் கூடாதென்று விவசாய நிலத்தின் பக்கமாக வரும் யானைகளைக் கொன்று விடுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோலத்தான், இந்த இரண்டு புலிகளும் கொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். புலி உலவினால் அந்த இடம் கையை விட்டுச் சென்றுவிடுமென்று, அதை விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து வேட்டைப் பொறிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த மரணங்கள் குறித்து முழுமையாக விசாரிக்கவில்லை என்று காட்டுயிர் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனைமலையில் இறந்த புலியின் சடலம்
ஆனைமலையில் இறந்த புலியின் சடலம்

இத்தகைய கொலைகள் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுபோக, லாப நோக்கோடு நடத்தப்படும் வேட்டைகளும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. காட்டுயிர் வேட்டைக்காரர்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள். பொதுவாகவே, வனத்துறைக்கு இத்தகைய வேட்டைக்காரர்கள் குறித்த தகவல்களைக் கொடுப்பது பழங்குடிகள்தான். அவர்கள் காட்டுக்குள் வனப்பொருள்களைச் சேகரிக்கச் செல்லும்போது, வேட்டைக் குற்றங்களைக் கண்டாலோ வேட்டைக்காரர்களையோ அல்லது காட்டிற்குச் சம்பந்தமில்லாத புதிய நபர்களையோ கண்டால் வனத்துறைக்குத் தகவல் கொடுப்பார்கள். ஆனால், லாக்டௌன் காரணமாகப் பழங்குடிகளுடைய நடமாட்டமும் அதிகமில்லை. ஆகவே, அவர்கள் மூலமாகக் கிடைக்கும் தகவல்களும் கிடைப்பதில்லை. இது, வேட்டைக் குற்றங்களைத் தடுப்பதை மேலும் சிரமமாக்குகிறது.

யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, முயல், நரி, எறும்புத் தின்னிகள், உடும்பு, மான், கீரி, காட்டுப் பூனை, மரநாய், மலை அணில், பறவைகள் போன்ற பல்வேறு வகை உயிரினங்கள் தமிழகக் காடுகளில் வேட்டையாடப்படுகின்றன. அதுபோக, புலி, சிறுத்தை போன்ற பெரும்பூனைகள் ஒருங்கிணைக்கப்பட்ட கள்ளச்சந்தைகளுக்காக வேட்டையாடப்படுகின்றன. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உரிகம் வனச்சரகத்தில் மான் வேட்டையாடிய ஒருவரைக் கைது செய்து, 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. கண்ணாடி விரியன், மலைப் பாம்பு, கட்டுவிரியன் போன்ற பாம்பு வகைகள் சட்டவிரோத விலங்குக் கடத்தலுக்காகக் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. லாக்டௌன் நேரத்தில் மட்டுமே தமிழகத்தில் சுமார் 222 வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலி
புலி
Shohagbest | Wikimedia Commons

இதுபோக, வேட்டையாடுவது குற்றம் என்றே கூட தெரியாமல் வேட்டையாடும் சிலரும் உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காத்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த மூவர் உடும்பைப் பிடித்துச் சாப்பிட்டதற்காகக் கைது செய்யப்பட்டனர். உடும்பு பாதுகாக்கப்படும் விலங்குகள் பட்டியலில் இருப்பதோ அதை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றோ அவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை அது தெரிந்திருந்தால், வேட்டையை சமூக வலைதளத்தில் பதிவேற்றி அவர்களே சிக்கியிருக்க மாட்டார்கள்.

அவர்களைப் போலவே பட்டுக்கோட்டை வனச்சரகத்தில் மே மாத முதல் வாரத்தில் 6 பள்ளி மாணவர்கள் முயல் வேட்டையாடியுள்ளனர். அவர்களும் அதைப் படமெடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். அவர்களைப் பிடித்த வனத்துறை தலா 15,000 அபராதம் வசூலித்தது. 1972-ம் ஆண்டின், தமிழகக் காட்டுயிர்ச் சட்டம் இதுபோன்ற வேட்டைகளைக் குற்றமாகக் குறிப்பிட்டுத் தடுக்கிறது. ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு போதிய அளவுக்கு இல்லாததே இதுபோன்ற அறியாமைக்குக் காரணம். இப்படியாக, வேட்டையாடுதல், அனுமதியின்றி வனத்துக்குள் உலவுதல் போன்ற காரணங்களுக்காக லாக்டௌனின் முதல் மாதத்தில் மட்டுமே தமிழகத்தில் 40,97 லட்சம் ரூபாய் அபராதம் வசூலாகியுள்ளது. தர்மபுரி வனக் கோட்டம் மட்டுமே 11 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பதிவேற்றிய சில சம்பவங்கள்
சமூக வலைதளங்களில் பதிவேற்றிய சில சம்பவங்கள்

தமிழகத்தில் மட்டுமன்றி, நாடு முழுவதுமே மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் இந்தியக் காடுகளில் காட்டுயிர் வேட்டைக் குற்றங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடத்திற்குப் பெயர்போன காசிரங்கா தேசியப் பூங்காவில், கடந்த சில காலமாக அவற்றை வேட்டையாடுவது குறைந்திருந்தது. இந்நிலையில், தற்போது அவை மீண்டும் வேட்டையாடப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகமில்லாமல் இருந்ததால், காண்டாமிருகங்கள் காடுகளின் எல்லைவரை வந்து உலவிச்செல்கின்றன. அப்படி நடமாடும்போது, போதிய பாதுகாப்பு இல்லாததால், காட்டுயிர் வேட்டைக்காரர்களின் துப்பாக்கிகளுக்கு அவை இரையாகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு, அப்படி வந்த ஒரு காண்டாமிருகம் வேட்டையாடப்பட்டது.

இப்படியாகக் குற்றமென்று தெரிந்தே வேட்டையாடுவது, தெரியாமல் வேட்டையாடுவது என்று வேட்டையாடுபவர்களின் எண்ணிக்கை லாக்டௌனில் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. சட்டம் குறித்த விழிப்புணர்வு இன்றி, வேட்டையில் ஈடுபடுவோரைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசாங்கமும் வனத்துறையும் எடுத்திருக்க வேண்டும். இவர்களைப் போல் அறியாமையில் வேட்டையாடுவோர் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்குப் போதிய கற்பிதங்களைத் தொடக்கத்திலிருந்தே கற்றுத் தந்திருக்க வேண்டும், அறியாமையைப் போக்கியிருக்கவேண்டும். அதை அரசு செய்யத் தவறியதே இப்போது வேட்டையாடிச் சமூக வலைதளங்களில் பதிவேற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

விளிம்புக் காடுகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டே சென்றால், காட்டுயிர்கள் வாழ இடமே இல்லாமல் போய்விடும்.
ரவீந்திரன் நடராஜன், காட்டுயிர் ஆர்வலர்

சட்டப்படி குற்றமென்று தெரிந்தே கள்ளச்சந்தையில் கிடைக்கும் கொள்ளை லாபத்திற்காக வேட்டையாடுவோர், வனத்தில் கண்காணிப்பு குறையும் பகுதிகளைச் சுற்றி வளைக்கத் தொடங்கிவிட்டனர். அதைக் கண்காணிக்க வனத்துறைக்கு உதவும் பழங்குடிகளுடைய உதவியும் கிடைப்பதில்லை. போதிய வேட்டைத்தடுப்புக் காவலர்களோ, வனக் காவலர்களோ இல்லாததால் மொத்தக் காட்டையும் கண்காணிப்பது நடைமுறையில் வனத்துறைக்குப் பெரும் சிக்கலாக உள்ளது.

இந்நிலையில், லாக்டௌன் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்ததால் வழக்கமாக உலவிய பகுதிகளுக்குக் காட்டுயிர்கள் வரத் தொடங்குகின்றன. அப்படி வரும்போது ஏற்படும் மரணங்கள் குறித்து முறையாக விசாரிக்கப்படுவதில்லை. காட்டுயிர்கள் விவசாயப் பகுதிகளுக்கு வருவது குறித்துப் பேசியபோது, "ஏற்கெனவே, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் விளிம்புக் காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. அந்த வனப்பகுதிகளில் நீருக்காகவும் உணவுக்காகவும் வருகின்ற தாவர உண்ணிகளைத் தேடி வேட்டையாடிகள் வருகின்றன. விளிம்புக் காடுகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக்கொண்டே சென்றால், காட்டுயிர்கள் வாழ இடமே இல்லாமல் போய்விடும்" என்கிறார் காட்டுயிர் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன்.

மேற்குத் தொடர்ச்சி மலை
மேற்குத் தொடர்ச்சி மலை
Pixabay

அவற்றை வேட்டையாடுவதும் நில அரசியலுக்காகப் பலி கொடுப்பதும் தொடர்ந்து நடந்துவருகின்றது. இத்தகைய மரணங்களிலிருந்து காட்டுயிர்களைக் காப்பாற்ற வனத்துறைக்குப் போதிய நிதியுதவியோ ஊழியர்களோ இல்லை.

அரசாங்கம், வனத்துறைக்குக் காடுகள் மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்பிற்குப் போதுமான நிதி ஒதுக்கி, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு, அறியாமையிலுள்ள மக்களுக்கு வேட்டைக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை விரிவாகக் கொண்டு செல்லவேண்டும்.

சட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படாத வரையிலும் அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகத்தான் இருக்கும். அந்தச் சட்டத்தை மக்களுக்குச் சொல்லிக்கொடுத்து அதைக் கடைப்பிடிக்க வைப்பதே வெற்றியின் முதல்படி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism