Published:Updated:

`இரை தேடி வந்த மயில்கள்; உயிரைப் பறித்த விஷம் கலக்கப்பட்ட தானியங்கள்!’- ராமநாதபுரத்தில் அதிர்ச்சி

அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. வயல்வெளியில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்தன. இதில் ஆண் மயில்கள் 6, பெண் மயில்கள் 6 என மொத்தம் 12 மயில்கள் உயிரிழந்து கிடந்ததும், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இறந்து கிடந்த தேசியப் பறவை மயில்.
இறந்து கிடந்த தேசியப் பறவை மயில். ( உ.பாண்டி )

இரை தேடி வந்த தேசியப் பறவையான மயில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ராமநாதபுரம் அருகே நடந்துள்ளது. இது தொடர்பாக விவசாயி ஒருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலியாகிக் கிடக்கும் தேசியப் பறவைகள்
பலியாகிக் கிடக்கும் தேசியப் பறவைகள்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அதிகளவில் பெய்துள்ளது. இதனால் காய்ந்து கிடந்த நீர் நிலைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. இதன் பயனாக மாவட்டத்தில் பரவலாக விவசாயப் பணிகள் நடைபெற்றன. போதுமான நீர் கிடைத்த நிலையில் காய்ந்து கிடந்த நிலங்கள் எல்லாம் பயிர்கள் விளைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றன. இதனால் இந்த ஆண்டு ஏராளமான பறவை இனங்கள் இரை தேடுவதற்காகவும் இனப் பெருக்கத்திற்காகவும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ளன.

மயில்களின் உயிரைப் பறிப்போருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்
வனத்துறை

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் கிராமத்தில் உள்ள வயல்களிடையே ஏராளமான மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ், வனக்காப்பாளர் சடையாண்டி மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அப்பகுதிக்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடையச் செய்தது. வயல்வெளியில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்தன. இதில் ஆண் மயில்கள் 6 பெண் மயில்கள் 6 என மொத்தம் 12 மயில்கள் உயிரிழந்து கிடந்ததும், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சூரங்கோட்டை கால்நடை மருத்துவர் சாரதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் இறந்த மயில்களின் உடல்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அறுவடைக்குத் தயாராகி வரும் நெற்பயிர்களை எலிகளும் மயில்களும் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக தெற்கு தரவை பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபி என்பவர் பூச்சி மருந்து கலக்கப்பட்ட நெல் தானியங்களை வயல்வெளிப் பகுதியில் தூவி வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மயில்களின் உயிரிழப்புக்குக் காரணமான கோபி கைது செய்யப்பட்டார்.

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட மயில்கள்
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட மயில்கள்
உ.பாண்டி

`பல்லுயிர்ப் பரவலுக்குக் காரணமாகத் திகழும் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பது குற்றமாகும். அதிலும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் அட்டவணை 1-ல் இடம்பெற்றுள்ள தேசியப் பறவையான மயில்களை வேட்டையாடுவதோ, அவற்றின் உயிருக்குக் கேடு விளைவிப்பதோ கடும் குற்றமாகும். இதற்கு 3 முதல் 7 வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்க இடமுள்ளது. எனவே, விவசாயிகள் வயல்வெளிகளைக் காக்க இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடாமல் வேலி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்' என ராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் அசோக்குமார், வனச்சரகர் சதீஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.